அருள்மிகு ஏகவுரி அம்மன் திருக்கோயில்

30

மகளிரால் மட்டுமே தனக்கு அழிவு உண்டாகும்படியான வரம் பெற்றவன் தஞ்சகாசுரன். இவன் தேவர்களை துன்புறுத்தி வந்தான். இதனால், துன்பமுற்ற தேவர்கள் சிவனிடம், தங்களைக் காக்கும்படி முறையிட்டனர். அவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், அம்பிகையை அனுப்பினார். அவள் அசுரனுடன் போரிட்டாள். அசுரன் பல உருவங்கள் எடுத்து அம்பிகையுடன் போரிட்டான். ஒரு கட்டத்தில் அசுரன் எருமை உருவம் எடுத்தான். அம்பிகை, தஞ்சகாசுரனை தன் சூலத்தால் குத்தி வதம் செய்தாள். இதனால், அம்பிகைக்கு கோபம் அதிகமானது. முதலில் அசுரனால் துன்பப்பட்ட தேவர்களுக்கு, இப்போது தங்களைக் காக்க வந்த அம்பிகையாலேயே துன்பம் ஏற்பட்டது. மீண்டும் அவர்கள் சிவனை வேண்டினர். சிவன் அம்பிகையை நோக்கி, ஏ கவுரி! சாந்தம் கொள் (கவுரி என்பது அம்பிகையின் மற்றொரு பெயர்) என்று கூறினார;. கணவனின் சொல் கேட்ட அம்பிகை சாந்தமானாள். அம்பிகைக்கு கரிகால் சோழ மன்னன் இங்கு கோயில் கட்டினான். சிவன் அழைத்த பெயரிலேயே இவளுக்கு ஏகவுரியம்மன் என்ற பெயர் ஏற்பட்டது. பிற்காலத்தில் வல்லன் என்ற மன்னன் ஆட்சி செய்ததால் தலத்திற்கு வல்லம் என்றும், அம்பிகைக்கு வல்லத்துக்காளி என்றும் பெயர்கள் ஏற்பட்டது.
சிறப்பம்சங்கள்:
அம்மன் கோயில்களில், பூஜித்த எலுமிச்சை கனிகளை மட்டுமே பிரசாதமாக கொடுப்பது தான் வழக்கமாக இருக்கும். ஆனால் இத்தலத்தில் எலுமிச்சை சாற்றைக் கொடுக்கிறார்கள். குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு மட்டுமே, இந்த பிரசாதம் வழங்கப்படுகிறது.
அருள்மிகு ஏகவுரி அம்மன் திருக்கோயில்
திருச்சியிலிருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் 38 கி.மீ., தொலைவில் வல்லம் உள்ளது. தஞ்சாவூரில் இருந்து 12 கி.மீ., தொலைவில் வல்லம் உள்ளது. வல்லம் பேருந்து நிலையத்தில் இருந்து 2 கி.மீ., தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. வல்லத்தில் இருந்து கோவிலுக்கு செல்வதற்கு ஆட்டோ வசதி இருக்கிறது.