உலகம் முழுவதும் வணங்கப்படும் முழு முதல் கடவுள்!

74

மகா கணபதியும் பௌத்தமும், உலகம் முழுவதும் வணங்கப்படும் முழு முதல் கடவுள்!

விநாயகரின் 32 வடிவங்களில் ஒன்று துவி விநாயகர் எனப்படும் இரு முக விநாயகர் ஆகும். இரண்டுமே யானை முகமாக உள்ளன. இவரை janus  of india  என்று அழைக்கின்றனர். ஜேனஸ் என்ற தேவதை இரண்டு முகங்களை கொண்டது. கடந்த காலத்தையும் எதிர் காலத்தையும் அந்த முகங்கள் குறிக்கின்றன. இந்தத் தெய்வத்தின் பெயரால் ஆங்கில ஆண்டின் ஜனவரி என்ற முதல் மாதம் அழைக்கப்படுகின்றது. அதுபோல இரட்டை முகக் கணபதி கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இடையிலான இணைப்பாக விளங்குகிறார். தமிழகத்தில் பஞ்சமுக கணபதி உண்டு.

ஆதியில் குகைகளில் யானை உருவங்கள் செதுக்கப்பட்டன. அவற்றை  பௌத்தர்கள் தம்முடையவையாக ஆக்கிக்கொண்டனர். வெளிநாடுகளுக்கு இங்கிருந்து பவுத்தம் பரவிய போது காதல் கடவுளாக யானை முகம் கொண்ட கடவுளும் பயணப்பட்டார். இளைஞரின் காதலுடன் தொடர்புடைய யானை முகக் கடவுள் ஜப்பானுக்குச் சென்ற காலம் அது என்பதால் அங்கு அவர் காதல் கடவுளாகவும் விளங்குகிறார். பிள்ளையார் பட்டியில் காணப்படும் பிள்ளையார் உருவம் அதன் முன்னால் உள்ள சோபன மண்டபம்,  அங்குப் பின்னர் எழுப்பப்பட்ட மருதீஸ்வரர் கோயில் மருதீஸ்வரரின் தலவிருட்சமாக இருக்கும் மருதமரம் [அர்ஜுனா மரம்] ஆகியவையும் இக்கருத்தை உறுதி செய்கின்றன.

சீனாவில் விநாயகருக்கு மகா பைணி என்று பெயர். சீனாவில் விநாயகர்  வடிவங்களில் ஆணின் வலிமையை கூடுதலாகக் குறிக்க யானை முகத்தோடு புலி உருவமும் சேர்க்கப்பட்டுள்ளது.  இங்கு புலித் தோலை  உடுத்திக் முத்துமாலையும் கிரீடமும் தரித்த யானை முகத்தவனே  விநாயகர் காணப்படுகிறார். ஜப்பானில் யானை முக கடவுள் பினாயகன் தென் அல்லது காங்கி தென்  என்ற பெயர்களில் வணங்கப்படுகிறார். இவர் திசைகளின் காவலராகக் காவல் தெய்வமாக கிபி ஆறாம் நூற்றாண்டு முதல் வழிபடப்பட்டு வருகிறார். அஷ்ட திக் கஜங்கள் எட்டுத் திசையின் காவலராக இருப்பதும் இக்கருத்தின் பாற்பட்டதேயாகும். நேபாளத்தில்  விநாயகருக்கு இரண்டு மூஞ்சூறு வாகனங்கள் உள்ளன. இங்கு புத்தர் தன் சீடரான ஆனந்தனுக்கு கணபதி ஹ்ருதயம் என்ற மந்திரத்தை அருளினார் என்ற நம்பிக்கையும் வழங்குகிறது.

எனவே இம்மந்திரத்தை சொல்லிய பிறகு நேபாளிகள் அனைத்துச் செயல்களையும் செய்ய தொடங்குகின்றனர். இம்மந்திரத்தை சொல்லிய பிறகு இவர்கள் தங்களுடைய அறுவடையைத் தொடங்குவர். நேபாளத்தின்  தலைநகரான  காத்மாண்டுவில் நாகம் குடை பிடித்துக் கொண்டிருக்க ஆறு கைகளைக் கொண்ட விநாயகர் காணப்படுகிறார்.