
மனத்தின் இருளை எவ்வாறு நீக்குவது?
அந்த ஊரில் துறவி ஒருவர் இருந்தார். அவர் எல்லோருக்கும் உதவ வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்டவர். அவர் ஒரு நாள் வீதியில் நடந்து சென்ற போது, கண் தெரியாத ஒருவரைக் கண்டார். அவர் வழி தெரியாமல் தடுமாறுவதைக் கண்ட துறவி, அவரை தன்னுடைய குடிலுக்கு அழைத்து வந்து தங்க வைத்தார். சில நாட்கள் தன்னுடன் தங்கியிருந்து விட்டுச் செல்லுமாறு, கண் தெரியாத நபரை துறவி கேட்டுக் கொண்டார்.
துறவியின் அன்பு வேண்டுகோளை ஏற்று அவரும் அங்கேயே தங்கினார். சில நாட்கள் சென்றன. கண் தெரியாதவருக்கு தொடர்ந்து அங்கேயே தங்குவது தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. அதனால் தான் கிளம்புவதாக துறவியிடம் கூறினார்.
துறவியோ, இன்னும் கொஞ்ச நாள் இங்கே தங்கியிருந்து விட்டுச் செல்லலாமே என்றார். இல்லை ஐயா… நான் வறியவன். என் பிழைப்புக்கான வழியையும் நான் பார்க்க வேண்டும். நெடுங்காலம் இங்கே தங்குவதால் உங்களுக்கு என்னால் வீண் சுமை. எனக்கும் சோம்பல் வந்துவிடும். தவிர யாராக இருந்தாலும், பிழைப்புக்காக அவரவருக்குத் தெரிந்ததைச் செய்ய வேண்டும். பிறர் மீது அமர்ந்து சவாரி செய்யக்கூடாது என்றார், கண் தெரியாதவர்.
அவரது பேச்சைக் கேட்ட துறவிக்கு மனம் மகிழ்ந்தது. சரி.. இப்போது இருட்டி விட்டது. அதனால் இன்று இரவு மட்டும் இங்கே தங்கிவிட்டு, நாளைக் காலையில் புறப்பட்டுச் செல்லுங்கள் என்றார். அதைக் கேட்டு கண் தெரியாதவர் வெறுமையாக சிரித்தார். நானோ குருடன். பிறவியிலேயே என் பார்வை இழந்தவன். அப்படி இருக்கும் போது, இரவும், பகலும் என்ன வேறுபாட்டை உணர்த்தப் போகிறது, என்றார்.
அவரது தெளிவைக் கண்டு வியந்த துறவி, சரி.. இந்த விளக்கையாவது வழித்துணைக்கு எடுத்துச் செல்லுங்கள்’ என்று கூறினார். கண் தெரியாதவனுக்கு விளக்கினால் மட்டும் என்ன பயன்? என்று மறுத்தார் அந்த நபர். உண்மைதான். விளக்கு உங்களுக்கு உபயோகப் படாவிட்டாலும், உங்கள் எதிரே வருபவர்களுக்கு நீங்கள் வருவது தெரியுமல்லவா? என்று கூறி விடாப்பிடியாக அந்த விளக்கை, கண் தெரியாதவரிடம் கொடுத்தனுப்பினார் துறவி.
மறுக்க முடியாத குருடனும், விளக்கைப் பெற்றுக் கொண்டு தன்னுடைய பயணத்தை தொடர்ந்தார். சிறிது தூரம் சென்றதும், யாரோ ஒருவர், கண் தெரியாதவர் மீது பலமாக மோதினார். யாரது.. கண் மண் தெரியாமல் வந்து மோதுவது? என்று கோபத்தில் கத்தி விட்டார், கண் தெரியாதவர்.
எதிரில் வந்த நபரோ, ‘மன்னித்து விடுங்கள். நான் நேராக தான் வந்தேன். தாங்கள் தான் என் மீது வந்து மோதினீர்கள் என்றால் அந்த நபர். சரி.. எனக்குத்தான் கண் தெரியாது, உங்களுக்கு தெரியாது? என்று மீண்டும் சீறினார், கண் தெரியாதவர்.
வழிப்போக்கனோ, நள்ளிரவு என்பது அனைவருக்குமே பொதுவானது தானே நண்பரே! கருமையான இருளில் எனக்கு மட்டும் எப்படி வெளிச்சம் தெரியும்?’ என்றான். உடனே கண் தெரியாதவர், ‘அது சரிதானா. ஆனால் என் கையில் உள்ள விளக்கு கூடவா, உங்கள் கண்களுக்குத் தென்படவில்லை?’ என்று காட்டமாக கேட்டார். அப்படியா? என்று உற்று பார்த்த வழிப்போக்கன், ‘ஐயா.. உண்மைதான் தாங்கள் விளக்கை ஏந்தி இருக்கிறீர்கள். ஆனால் அந்த விளக்கு அணைந்து போய் அல்லவா இருக்கிறது’ என்றான்.
அப்போதுதான் கண் தெரியாதவருக்கு தன்னுடைய தவறு புரிந்தது. தவறு என்னுடையதுதான் அவரவர் தன் சுய அறிவை பயன்படுத்த வேண்டும். இரவல் ஞானத்தால் எந்த பயனும் இல்லை என்பதை அவர் உணர்ந்தார். விளக்கை தூக்கி எறிந்துவிட்டு, வழிப்போக்கனிடம் மன்னிப்பு கேட்டு விட்டு, தன் ஊன்றுகோல் உதவியுடன் நடக்கத் தொடங்கினார்.