மறுபிறவியில் இருந்து எப்படி தப்பிப்பது?

86

மறுபிறவியில் இருந்து எப்படி தப்பிப்பது?

இறைவனின் பெயரைச் சொல்வதால் பயம், பாவம் என்னும் இருவித துன்பங்களிலிருந்து தப்பிக்க முடியும். நல்ல உணவு வகைகளை உண்பதால் உடல் நலம் பெருகும். நல்ல நூல்களை படிப்பதால் மனநலம் உயரும். உனக்குச் சரி என்று படுவதையே சரி என்று பிறரிடம் சாதிக்காதே. இன்று சரி என்று உனக்குத் தோன்றிய ஒன்றே நாளை தவறு என்று மாறிவிடக் கூடும்.

கண்ணுக்குத் தெரியாத கடவுளுக்குச் சேவை செய்வது போல் கண்ணுக்குத் தெரிந்த கடவுளான உயிர்களுக்கும் சேவை செய்ய வேண்டும். எது தர்மத்தில் செலவழிந்ததோ அந்த செல்வமே நம்முடைய தாகும். எந்த நேரத்தில் கடவுளின் திருநாமத்தை நினைக்கிறோமோ அதுவே நம்முடைய நேரம். யாசித்து நெய்யும் பாலும் தயிரும் சேர்ந்த அன்னத்தை உண்பதை விட உழைத்து உண்ணும் தண்ணீரும் சோறும் சிறந்ததாகும்.

அன்பு, அடக்கம், சாந்தம், பொறுமை, ஞானம் ஆகிய குணங்கள் எல்லாம் மேலான சத்வ குணங்கள். இக்குணங்கள் ஒருவரிடத்தில் மேலோங்கினால் மனித நிலையில் இருந்து தெய்வ நிலைக்கு உயர முடியும். கல்வி பயிலுதல், தானம் செய்தல், உடல் நலம் பேணுதல் மூன்றையும் ஒவ்வொருவரும் பெற முயற்சி செய்தல் அவசியம். விவேகம் உடையவன் பண்டிதன்.

மனத்தூய்மை உள்ளவன் சுத்தன். துன்மார்க்கத்தில் மனதை போகவிடாமல் அடக்குகிறவன் வீரன். பெண்களின் அழகில் வஞ்சிக்கப்படாதவன் சமர்த்தன். பல பேர் கூடி கையெழுத்திட்ட விண்ணப்பத்தைக் கண்டு அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுப்பர். அதுபோல பல பேர் கூடி முறையிடும் கூட்டு பிரார்த்தனை செய்தால் ஆண்டவன் என்னும் அதிகாரியும் உடனே நடவடிக்கை எடுக்க ஆயத்தமாவார். பெரியோர்கள் தங்களின் அறிவுரைகளாலும் உபதேசங்களிலும் நமக்கு நல்வழி காட்டுகிறார்கள்.

வயலில் என்ன விதைக்கிறோமோ அதுவே விளையும். அதேபோல் மனத்தாலும் வாக்காலும் உடலாலும் பிறருக்கு என்ன செய்கிறோமோ அதுவே திரும்ப கிடைக்கும். கருணைக் கொண்டு நல்லவர்களுக்கு மட்டுமே உதவிட வேண்டும். தீயவர்களுக்கு கருணைக் காட்டுவது தீங்கு தான் முடியும். பசுவுக்கு புல் கொடுத்தால் பால் கிடைக்கும். பாம்புக்கு பால் வார்த்தால் நஞ்சுதான் சிடைக்கும். எங்கும் நிறைந்த இறைவனை எளிமையாக பூவினாலும், நீரினாலும் வழிபாடு செய்தாலே போதும். அன்பும் ஒழுக்கமும் மட்டும்தான் ஆண்டவனுக்கு மகிழ்ச்சி தரும் விஷயங்களாகும்.

பசுவின் உடல் முழுவதும் பால் இருந்தாலும், மடியின் மூலமாக பால் வெளிப்படுவது போல், எங்கும் இறையருள் நிறைந்திருந்தாலும் கோயிலில் இருக்கும் தெய்வங்கள் வாயிலாக திருவருளைப் பெறுகிறோம். இந்த உடம்பு அவன் தந்தது. கதிர், நிலவு, தீ, காற்று, நிலம், நீர் அத்தனையும் அவனருளாளே நாம் அனுபவித்து வாழ்கிறோம். அதனால் இறை வணக்கம் செய்யாதவன் மனிதனாய் பிறந்தும் கடமை மறந்த பாவத்தினால் மறுபிறப்பில் பெருந்துன்பம் அடைகிறான்.