அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 05)

0 37

முன்னொரு சமயம், அகத்தியர் கலியின் கொடுமைகளிலிருந்து மக்கள் விடுபட மார்க்கம் வேண்டி காஞ்சியில் தவமியற்றிய போது, ஹயக்ரீவர் தோன்றி அன்னை பராசக்தியை பூஜிப்பதே எளிய வழி என்றதோடு தேவி பல்வேறு காலங்களில் அவதாரம் செய்த லீலைகளை விளக்குகிறார்.

 இனி  வித்யாதரியிடமிருந்து பெற்ற மாலையை தலை மீது தாங்கி, இந்திரனை நோக்கி வந்தார் துர்வாசர்,அப்போது தேவேந்திரன் அவரை மதித்து வணங்காமல் ஐராவதம் மீது அமர்ந்தே இருந்தான், ஆயினும் அவர் சினம் கொள்ளவில்லை.

 அன்னையின் தெய்வீக பிரசாதம் இது என்று கூறி அந்த மாலையை அவனிடம் கொடுத்தார். அதனை அலட்சியமாக பெற்றுக் கொண்டவன் யானை மீது வைத்தான்.

 சிறிது நேரத்தில், அந்த யானை அம்மாலையை தரையில் போட்டு கசக்கி, மிதித்து விட்டது.
இது கண்டு சினங்கொண்ட துர்வாசர், “ஓ அகந்தை கொண்டவனே !! ரிஷியாகிய என்னை நீ மதிக்கத் தவறினாய். பொறுத்துக் கொண்டோம். ஆனால் பிரம்மாதி தேவர்களுக்கும் கிட்டாத தேவியின் பிரசாதத்தை நீ நிந்தனை செய்தாய். ஆகையால் உனது செல்வ சம்பத்துகளை இழக்கக் கடவாய் !! உனது ராஜ்யம் தேஜஸ் இழக்கக் கடவது” என்று சபித்தார்.

 இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த இந்திரன், அவரிடம் மன்னிப்பு வேண்டினான். எனினும், பின்னால் நடக்கவிருப்பதை அறிந்த துர்வாச முனிவர் ஏதும் பேசாமல் அங்கிருந்து சென்று விட்டார்.

 இதனால், இந்திரனிடமிருந்த விஜயலக்ஷ்மி பாதாளம் சென்றாள். நித்யலக்ஷ்மி வாசுதேவனிடம் சென்றாள், ஸ்வர்க்க லோகம் களையிழந்தது. பற்பல அபசகுனங்கள் தோன்றின. இதனைக் கண்டு மனம் வருந்திய இந்திரன், இதற்கான காரணத்தை தனது குருவான பிரகஸ்பதியிடம் வேண்டினான்.

 அதற்கு அவர், “தேவேந்திரா !! நீ செய்த பாவங்கள் உன்னை நிழல் போல் தொடர்ந்து வருகிறது” என்றார்.

 இதனை கேட்ட இந்திரன் பாவங்கள், பிராயச்சித்தம் போன்றவற்றை பற்றி விளக்க கோரினான்.
கொலை, திருட்டு, மது, ஹிம்சை, பிறன் மனை நோக்குதல் இவை முறையே பஞ்ச மகா பாதகங்கள் ஆகும்.

 மேலும், பல்வேறு விதமான பாவங்கள், மற்றும் அதற்கு உண்டான பிராயச்சித்தம் மற்றும் பிராயச்சித்தம் இல்லாத மாபாவங்கள் பற்றியும் விரிவாக விளக்கினார்.

அதில் திருட்டு பாவத்திற்கு அவர் கூறிய த்விஜவர்மன் சரிதம் பற்றி அடுத்த பதிவில் காணலாம்.
தொடரும்…

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.