அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 07)

0 40

 பாவங்களைப் பற்றி இந்திரனிடம் கூறிக் கொண்டிருந்த பிரகஸ்பதி திருட்டு பாவத்தைப் பற்றி கூறுகையில், அதற்கு உதாரணமாக ஒரு கதையை கூறினார், வஜ்ரன் என்றொரு திருடன் பதுக்கி வைத்த செல்வத்தின் ஒரு பகுதியை கவர்ந்து வந்தான் வீரதத்தன் என்ற வேடன்.

இனி : வீரதத்தன் மனைவி அவனிடம், நமது உழைப்பில் உண்டான பொருளே நிலைத்து நிற்கும். மற்றது தானே மறைந்து விடும்,எனவே தானே கிடைத்த செல்வத்தை கொண்டு தான, தர்மங்கள் செய்வோம் என்றாள்.

மிக நீண்ட வாதத்திற்கு பிறகு, புண்ணியவசத்தினால், அவனும் அதற்கு ஒப்புக் கொண்டான்.
அதன் படி, ஊரில் வறண்ட பகுதியில் மக்கள் பயன்பாட்டிற்கு நீர்நிலைகள் ஏற்படுத்தினான் அதன் பிறகு, அருகில் ஓர் விஷ்ணு ஆலயமும், சிவாலயமும் அமைக்க ஏற்பாடு செய்தான். பாதிவேலைகள் நடந்து கொண்டிருக்கும் போதே அனைத்து செல்வமும் தீர்ந்து விட்டது.

  எனவே, அவன் மீண்டும் வஜ்ரன் செல்வங்களை பதுக்கி வைக்குமிடத்தை கண்காணித்து முன் போலவே, பாதியை எடுத்துக் கொண்டு, சந்தேகம் வராவண்ணம் மீதியை வைத்து விட்டு சென்று விடுபட்ட வேலைகள் தொடர்ந்து நடக்க ஆவன செய்தான்.

 அவன் தனது மனைவியின் தொடர் உந்துதலால், தான, தர்மங்கள் பல இடைவிடாது செய்து வந்தான். அந்த செல்வத்தை அவன் தன் மனைவியின் சொற்படி தனது சுயநலத்திற்காக ஒரு போதும் பயன்படுத்தாமல் இருந்தான்.

காட்டை அழித்து அழகான ஒரு நகரை நிர்மாணித்து அதனை தனது குருவின் பெயரால் “தேவநாதபுரம்” என்று அழைத்து அதனை அறிவிற் சிறந்த பிராமணர்களுக்கு தானமாக அளித்தான். அவர்களை காக்க அவனும் அங்கேயே வசித்து வந்தான்.

 அவனது நற்செயல்களைக் கண்ட ஞானியர், அவனுக்கு “த்விஜவர்மா” என்றும், அவன் மனைவியை “சீலவதி” என்றும் பெயர் சூட்டி சிறப்பித்தனர்.

பின்னர் சில வருடங்களுக்கு பிறகு, த்விஜவர்மா, சீலவதி தம்பதியர் ஏககாலத்தில் இறந்தனர்.

 இறந்த பிறகு, அவர்களது ஆன்மாக்களை கொண்டு செல்ல யம கிங்கரர்கள், சிவ கணங்கள் மற்றும் விஷ்ணு கணங்களுக்கிடையே சர்ச்சை எழுந்தது.

அந்த சர்ச்சையின் முடிவு பற்றி அடுத்த பதிவில் காணலாம்.
தொடரும்…

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.