அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 09)

0 29

 துர்வாசரின் சாபத்தால் தேவலோகத்தில் பல அபசகுனங்கள் தோன்றின. ஸ்வர்க்கம் களையிழந்தது,இதற்கான காரணத்தை இந்திரன் தனது குருவான பிரகஸ்பதியிடம் வேண்டினான்.

அதற்கு அவர், அவன் செய்த பாபங்களே அதற்கு காரணம் என்று கூறினார்.

 இனி : அதுபற்றி தேவேந்திரன் கேட்ட போது, அவனுக்கு பல்வேறு பாவங்களைப் பற்றியும், அதன் பிராயச்சித்தம் பற்றியும் கூறினார்.

 இந்திரன் : குருவே !! அனைத்தும் உரைத்தீர். எதனால் எமக்கு இந்த கதி? அதற்கு என்ன பிராயச்சித்தம்? அதைக் கூறுங்கள்.

பிரஹஸ்பதி : முன்னொரு சமயம், காஸ்யபருக்கு திதி என்பவள் மூலமாக, தனு என்ற மகனும், ரூபவதி என்ற மகளும் பிறந்தனர், அதில், ரூபவதியை தாதாவுக்கு அளிக்க, அவர்கள் இருவருக்கும் விஸ்வரூபன் என்றொரு மகன் பிறந்தான்.

 அந்நேரத்தில், அசுரர்கள் சுக்ரனை குருவாக ஏற்க, தேவர்களாகிய நீங்கள் விஸ்வரூபனை குருவாக ஏற்று கொண்டீர்கள்.

 விஸ்வரூபன் கல்வி, கேள்விகளில் கரை கண்டவர். தேவர்கள், அசுரர்கள் இருவரிடமும் சரிசமமாகவே பழகி வந்தார். ஆனால் அவர் அசுரர்களிடமும் அன்பு கொண்டது கண்ட நீ அவரை சந்தேகித்து அவரை கொன்றாய்.

 இதனால், நீ பிரம்மஹத்தியினால் பீடிக்கப்பட்டாய். அத்துடன் எந்த காரணமுமின்றி, அநியாயமாக அவரது மகனை கொன்றதால், தாதாவின் சாபத்திற்கும் ஆளானாய் !! (உன்னை விட்டு லக்ஷ்மி விலகட்டும்)

 இதனால் ஸ்வர்க்கம் விடுத்து பலகாலம் மேரு குகையில் பதுங்கி இருந்தாய். தலைமையில்லாத தேவர்கள் அனைவரும் நாராயணனிடம் முறையிட்டனர்.

 அதனைக் கேட்ட பக்தவத்சலன், பிரம்மஹத்தி பாவத்தை மூன்றாக பிரித்து, ஒரு பகுதியை பூமியிடமும், மற்றொன்றை மரங்களிடமும், மீதியை பெண்களிடமும் அளித்தார்,அவர்கள் அடைந்த பாவம், பூமியிடம் களராகவும், மரங்களிடம் பிசினாகவும், பெண்களிடம் ரஜஸாகவும் வெளிப்பட்டது.

உலக நலன் கருதி, இந்த பாபத்தினை பிரித்து ஏற்றுக் கொண்ட பூமிக்கு வெட்டிய பள்ளம் தானே தூர்ந்து போகவும், மரங்களுக்கு வெட்டிய பின்னர் தானே வளரவும், பெண்களுக்கு பிள்ளைகள் பெற்று கொள்ளும் சக்தியை அளித்தார்.

 இதனால் நீ பிரம்மஹத்தியிலிருந்து விடுபட்டு தேவலோகம் திரும்பினாய். பிரம்மனால் சமாதானம் செய்யப்பட்ட தாதா, தனது சாபம் இப்போதைக்கு ஏதும் செய்யாது போகவும், ஆனால் பின்னொரு முறை அது பலிக்கட்டும் என்று உரைத்துச் சென்றார்.

 எனவே, நீ மீண்டும் அனைத்தும் அடைந்தாய். அதனால் அகந்தை கொண்டாய். அதனை அடக்க சிவபெருமான் துர்வாசரை அனுப்பி மீண்டும் அதே சாபத்தினை உன்னை அடையச் செய்தார்.

                                                                                                                                                                        தொடரும்…

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.