அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 12)

0 22

 தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து பற்பல செல்வங்களை வெளிக் கொணர்ந்தனர்.

 மஹாலக்ஷ்மியும் தோன்றி நாராயணனை அடைந்தாள். இறுதியில், தன்வந்திரி பகவான் கையில் அமிர்த கலசத்துடன் தோன்றினார்,அதனை கண்டதும் தேவர்களும், அசுரர்களும் அமிர்தத்திற்கு போட்டியிட்டு சண்டை போட்டு கொண்டனர்.

 இனி : மோகினி அவதாரம் அமிர்தத்தை தேவர்களுக்கு பெற்று தர, பகவான் விஷ்ணு அனைத்திற்கும் ஆதார சக்தியாக விளங்கும் அன்னை லலிதையை குறித்து தியானத்தில் ஆழ்ந்தார்.

 தன்னை மறந்து அவளை நினைத்ததினால் அவருக்குள் ஒளிந்திருந்து நடத்தி வைக்கும் அன்னையின் வடிவத்தினையே அடைந்தார்,எவரையும் மயக்கத்தக்க சிருங்கார வேஷமுள்ள மோகினி, தேவாசுரர்களிடையே தோன்றினாள்.

 தேவர்கள் அவளை தெய்வீகமாக கண்டு அவளை பணிந்தனர். அசுரர்கள் தமது அஞ்ஞானத்தினால் அவளை அடையாளம் காண முடியாததால் அவளழகில் மோக மயக்கம் கொண்டனர்.

 அவர்கள் கையில் இருந்த அமிர்த கலசத்தை பிடுங்கி வைத்துக் கொண்டு, யாரும் சண்டை செய்ய வேண்டாம். தானே இருவருக்கும் சமமாக பங்கிட்டு தருகிறேன் என்று கூறி, இருவரையும் இரண்டு வரிசையில் அமர வைத்தாள்.

 இடது கையில் அமிர்த கலசத்தையும், வலது கையில் ஸ்வர்ண கரண்டியும் ஏந்தி, கங்கணம் சப்தமிட, அழகாக நடந்து வந்து தேவர்களுக்கு முதலில் பரிமாறினாள், தங்களிடையே அமர்ந்து அமிர்தம் அருந்திய ஸிம்ஹிகேயன் என்னும் அசுரனை சந்திர, சூரியர் காட்டி கொடுக்க, பகவதி அக்கரண்டியால் அவன் சிரத்தை அறுத்தாள்.

அமிர்த சம்பந்தத்தினால் அது இறக்காமல் ராகு, கேதுவாக மாறியது. தேவர்களுக்கே அமிர்தம் அனைத்தையும் கொடுத்து விட்டு, வெறும் பாத்திரத்தை மட்டும் அசுரர்கள் முன் வைத்து விட்டு தேவி மறைந்தாள்.

 வெறும் பாத்திரத்தை கண்ட அசுரர்கள் ஆத்திரம் அடைந்து, தேவர்களுடன் யுத்தம் செய்தனர்.
அமிர்தம் அருந்திய பலத்தால் தேவர்கள் பலம் குறைந்த அசுரர்களை எளிதில் வெற்றி பெற்று, மீண்டும் தேவலோகத்தைக் கைப்பற்றினர்.

லக்ஷ்மி கடாட்சத்தால் தேவேந்திரன் முன்போல வானுலகை சந்தோஷத்துடன் ஆட்சி செய்யலானான்.
தொடரும்…

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.