அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 16)

0 23

தாரகனை வதைக்க சிவபுத்ரன் ஜனிக்க வேண்டும் என பிரம்மா கூற, அதற்கு வழிவகை செய்ய தேவர்கள் மன்மதனின் உதவியை நாடினர்,அவர்களுக்கு உதவ சென்ற மன்மதன் ஈசனின் கோபாக்னியால் எரிக்கப்படுகிறான்.

 இனி :காம தகனம் – பின்புலம் ஈசனின் கோபாக்னியால் மன்மதன் எரிக்கப்பட்டதை கண்ட ரதி தேவி ஆற்றாமையால் அழுது புலம்பினாள். இதை கண்ட வசந்தன், அவளை ஆறுதல் படுத்தினான்.

  கவலை கொள்ளாதே தேவி !! ஒருவர் எவ்வளவு பெரியவனாயினும், சாபத்தின் பலனை அனுபவித்து தான் ஆக வேண்டும். முன்னொரு சமயம், பிரம்ம தேவர், மன்மதனுக்கு அளித்த சாபமே இப்படி விளைந்தது என அதனை நினைவு படுத்தினான்,முன்னொரு சமயம், சுந்தன், உபசுந்தன் என்னும் இரு அசுர சகோதரர்கள் இருந்தனர். இவர்கள் பிரம்மனை நோக்கி கடுந்தவம் புரிந்து, விநோதமான வரத்தினை பெற்றனர்.

 அதாவது, தங்கள் ஒற்றுமையின் வலிமை கருதி, இருவர் மரணமும் அவர்களைத் தவிர வேறு எவராலும் ஏற்படக் கூடாது என்ற வரத்தைப் பெற்று, இருவரும் ஒன்றாக இணைந்து, அனைவரையும் துன்புறுத்தி வந்தனர்.

 இதனால் துன்புற்ற தேவர்கள், பிரம்மனிடம் முறையிட, இவர்கள் ஒற்றுமை குலைந்து விட்டால் இருவரும் எளிதில் மாண்டு விடுவர் என எண்ணினார்.

 எனவே, அவர்கள் இருவரையும் பிரிக்க ஒரு பெண்ணால் முடியும் என்றெண்ணி, எள்ளளவும் அழகில் குறையில்லாத ஒரு கன்னிகையை படைத்தார்.

 எள்ளளவிலும் சிறந்த அழகுடையவள் என்ற பொருளில் அவளுக்கு “திலோத்தமை” என்று பெயர் சூட்டினார். (தில – எள் ; உத்தம – சிறந்த). தேவர்களும் அவளழகில் சொக்கி நின்றனர்.
அவளது அழகு குறைவற இருக்கிறதா என்று சோதித்து கொண்டிருந்தார் பிரம்மா. அப்போது, அங்கு தேவர்களுடன் நின்றிருந்த மன்மதன் விளையாட்டாக தனது மலரம்பால் பிரம்மாவை அடித்தான்.

 இதனால் காமப்பரவசங் கொண்ட பிரம்மா அவளை துரத்தினார். இதனால் அதிர்ச்சியடைந்த திலோத்தமை மான் வடிவு கொண்டு பூமியில் ஓடினாள், பிரம்மனும் மான் வடிவாய் அவளை துரத்தினார். இதைக் கண்ட தேவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனை கண்டு வெகுண்ட மகேஸ்வரன், மான் வடிவம் கொண்ட பிரம்மாவின் முன்னால் உக்ரமான வேடனாக தோன்றினார்.

 ஈசனை உக்ர கோலத்தைக் கண்ட பிரம்மனின் மாயை நீங்கியது. தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு அங்கிருந்து மறைந்தார் பிரம்மா,பின்னர், திலோத்தமையால் அவர் நினைத்தது போலவே, அசுரர்களிடையே சண்டையை ஏற்பட்டது. அதனால் இருவரும் மாறி மாறி அடித்து மாண்டனர்.

 அதன் பிறகு, திலோத்தமையை பாராட்டிய பிரம்மா அவளுக்கு தேவலோகத்தில் இடமளித்தார்.
இவையெல்லாம் நடந்து முடிந்த பின்னர், மன்மதனை அழைத்து வன்மையாக கண்டித்து, எதிலும் ஒரு முறை வேண்டும் என்று அவனது பொறுப்புகளை தெளிவுபடுத்தினார்.

 ஆனாலும், அவமானம் தாங்காத பிரம்மா அவனை ஒரு நாள் நீயும் ஈசனின் கோபத்தை சந்தித்து அவரால் சாம்பலாகக் கடவாய் என்று கடுமையாக சபித்தார்.

 இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ரதியும், மன்மதனும் அவரிடம் மன்னிப்பு வேண்டினர். சாந்தமடைந்த பிரம்மா, கவலை கொள்ளாதே !! அன்னை லலிதையின் அருளால் மீண்டும் உயிர் பெறுவாய் என்று கூறினார்.

 இதனை நினைவு கூர்ந்த வசந்தன், ரதியை அன்னை லலிதாம்பிகையை பூஜிக்குமாறு கூற, அவளும் அப்படியே செய்யலானாள்.
தொடரும்…

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.