அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 19)

0 23

இதுவரை:
மன்மதனின் சாம்பலிலிருந்து தோன்றிய பண்டாசுரன் ஈசனை மகிழ்வித்து பல வரங்களை பெற்று, சூன்யக பட்டணத்தை உருவாக்கி அரசாள்கிறான்.
சுக்ரனின் சொற்படி அனைவரும் ஹோமங்கள், பூஜைகள் செய்து பரமசிவனை ஆராதித்தனர்.

இனி :
ஒரு நாள் மந்திரி சபையினை கூட்டிய பண்டாசுரன் பின்வருமாறு உரைத்தான். தேவர்கள் அனைவரும் நமது பரம எதிரிகள் ஆவர்.

இது நாள் வரை மன்மதன் இருந்த போது அவர்கள் வம்சம் விருத்தி அடைந்து பல சுகங்களை அனுபவித்தனர்.

ஆனால் தற்போது அதிர்ஷ்டவசமாக நாம் மன்மதனின் சாம்பலிலிருந்து தோன்றி இருக்கிறோம். அவர்கள் மீண்டும் மன்மதனை உயிர்ப்பிக்கும் முன் நாம் அவர்களை அழித்து விட வேண்டும்.

ஆனால் இப்படி இதே உருவில் சென்றால் அவர்கள் நம்மை எளிதில் அடையாளம் கண்டு வெல்வர்.

எனவே, நாம் அனைவரும் காற்று வடிவாய் சென்று அவர்களது உயிரணுக்களை வற்ற செய்ய வேண்டும்.

உயிரணுக்கள் வற்றினால் மற்ற திசுக்களும், உடலும் தன்னால் அழிந்து விடும். எனவே மூவுலகையும் இதே போல ஆக்ரமிப்போம் என்றான்.

இதைக் கேட்ட அசுரர்கள் மகிழ்ந்தனர். மேலும், ஒரு க்ஷணம் கூட தாமதிக்காமல் பண்டனும், 100 அக்ஷௌஹிணி சேனைகளும் காற்றாக மாறி தேவலோகத்தினை அடைந்தனர்.

முதலில் அங்கிருந்த தேவர்களின் மனதில் புகுந்து அவர்களது சிந்தனையை கலைத்தனர். அடுத்து முகத்தில் புகுந்து அழகை குலைத்தனர்.

இதனால் தேவர்கள் அனைவரும் வலிமையிழந்து, எதையும் செய்யும் ஆர்வமில்லாமல் இருந்தனர்.

விசுக்ரன் இதே போல பூலோகத்தை ஆக்ரமித்து தாக்கினான். ஒரு மரம், செடி கூட விடாமல் அனைத்து உயிரினங்களையும் தாக்கினான்.

மக்கள் மகிழ்ச்சி, கருணை ஆகியவற்றை மறந்து உணர்ச்சியற்றவர்களாக உலா வரத் தொடங்கினர்.

இதே போல், விஷங்கன் கீழ் லோகங்களான ரஸாதலம், நாக லோகம் போன்றவற்றை தாக்கினான்.

அனைவரும் காரணமின்றி ஒருவருக்கொருவர் வெறுப்புடனும், கவலையுடனும் காணப்பட்டனர்.

உடலிலுள்ள ரசத்தை இழந்ததால் இப்படி அனைவரும் துன்பத்துக்கு உள்ளாகினர்.
(தொடரும்…)

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.