அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 26)

0 5

 தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி மஹா சம்புவானவர், அன்னை லலிதையை அவதரிக்க செய்ய வேதாகம முறைப்படி யாகத்தினை நடத்துகிறார்.

 இனி : ஸ்ரீலலிதாம்பிகை அவதாரம் “சிதக்னிகுண்ட சம்பூதா தேவகார்ய சமுத்யதா” (02:லலிதா சஹஸ்ரநாமம்) யாகத்தின் முடிவில் யாக குண்டத்திலிருந்து ஒப்பற்ற ஒரு தேஜஸ் தோன்றியது. அது கோடி சூரியர்களின் பிரகாசத்தையும், கோடி சந்திரர்களின் குளிர்ச்சியும் கொண்டிருந்தது.

 அந்த பிரகாசத்தினிடையே, ஒரு சக்கரம் தோன்றியது. அந்த சக்கரத்தின் மத்தியில் சிருஷ்டி சக்கரத்தை நடத்துபவளும், பிரம்ம, விஷ்ணு, ருத்ர ஸ்வரூபிணீயானவளும், உதயசூரியனை ஒத்த காந்தியுடையவளும் (உத்யத்பானு சஹஸ்ராபா – லலிதா சகஸ்ரநாமம்), பரிபூரண அழகை உடையவளும், செம்பருத்திப்பூ நிறமுடையவளும், மாதுளம் முத்துக்களின் நிறத்தில் வஸ்திரம் அணிந்தவளும், கருணை ததும்பும் கடைக்கண்களை உடையவளும், பாசம், அங்குசம், புஷ்பபாணம், இக்ஷு கோதண்டம் ஆகியவற்றை தனது 4 கரங்களில் (சதுர்பாஹு சமன்விதா – லலிதா சஹஸ்ரநாமம்) ஏந்திக் கொண்டு, என்றும் 16 வயதுடைய குமரி போன்ற இளமையுடன் மஹாதேவி தோன்றினாள்.

 அப்படி தோன்றிய மஹாதேவி, தேவர்களை எழுப்பினாள். அனைத்து தேவர்களும் அன்னையை பலவாறாக போற்றி பணிந்தனர்.

 தேவியின் பார்வை அவர்கள் மீது பட்ட க்ஷணத்திலேயே அனைவரும் வஜ்ர சரீரமுள்ளவர்களாகி புத்துயிர் பெற்றனர்.
சிருஷ்டியின் புனரமைப்பு,சந்திர அம்சத்தை உடைய இடது கண்ணிலிருந்து லக்ஷ்மி தேவி தோன்றினாள்.

 சூரிய அம்சத்தை உடைய வலது கண்ணிலிருந்து விஷ்ணுவும், பார்வதியும் தோன்றினர்.
அக்னி அம்சத்தை உடைய நெற்றிக்கண்ணில் இருந்து ருத்ரன் மற்றும் சரஸ்வதி ஆகியோரை தோற்றுவித்தாள்.

 பிரம்மன் சரஸ்வதியையும், விஷ்ணு லக்ஷ்மியையும், ருத்ரன் பார்வதியையும் மணந்து சிருஷ்டியை நடத்த கட்டளை இட்டாள்.

மற்றும் சிலவற்றை அவளே படைக்கவும் செய்தாள்.

தனது நெடிய, கரிய கூந்தலில் இருந்து இருளை படைத்தாள்.

கண்களில் இருந்து சூரிய, சந்திர, அக்னியை படைத்தாள்.

நெற்றிச்சுட்டியில் இருந்து கிரகங்களையும், நட்சத்திரங்களையும் படைத்தாள்.

தனது புருவங்களில் இருந்து வரைமுறைகளை வகுத்தாள்.

தனது சுவாசத்தில் இருந்து வேதங்களையும், முகவாயில் இருந்து வேதாங்கங்களையும் படைத்தாள்.

தனது சாரீரத்தில் இருந்து கவி மற்றும் காவியத்தை உருவாக்கினாள்.

கழுத்தில் உள்ள கோடுகளில் இருந்து பல்வேறு சாஸ்திரங்களை படைத்தாள்.

தனது ஸ்தனங்களில் இருந்து பர்வதங்களை படைத்தாள். தனது உள்ளங்கைகளில் இருந்து சந்திகளை தோற்றுவித்தாள்.

தனது புத்தியில்(கரும்பு வில்) இருந்து சியாமளையையும், கர்வத்தில்(பஞ்ச பாணம்) இருந்து வாராஹியையும் தோற்றுவித்தாள்.

தனது குண்டலினி சக்தியில் இருந்து காயத்ரியை தோற்றுவித்தாள்.

தனது பாச ஆயுதத்தில் இருந்து அஸ்வாரூடா, மற்றும் அங்குசத்திலிருந்து சம்பத்கரீ தேவியையும் தோற்றுவித்தாள்.

இன்னும் பலவற்றை சிருஷ்டி செய்தாள். (Ref: புருஷ சூக்தம்)

 நாளை தேவர்கள் ஸ்ரீதேவியை குறித்து செய்த அரிய, அழகிய, பெருமைமிகு துதியினை (லலிதா ஸ்தவராஜம்) காண்போம்.
தொடரும்…

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.