அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 28)

0 21

 தேவர்களின் யாகத்தால் மகிழ்ந்த அம்பிகை, யாக குண்டத்திலிருந்து வெளிப்பட்டு, பண்டனால் சீரழிந்த சிருஷ்டியை புனரமைத்தாள். அவளை தேவர்கள் பலவாறாக போற்றி துதித்தனர்.

 இனி: லலிதா ஸ்தவராஜம் – தொடர்ச்சி ஸ்வர்க்கம், அந்தரிக்ஷம், இவைகளை தனக்குள்ளே அமைத்து உலக வடிவாக விளங்கும் தேவி !!

 சகல உலகங்களும் அந்தந்த காலத்தில் எங்கு தோன்றி, எங்கு வளர்ந்து, எங்கு ஒடுங்குகிறதோ அந்த தேவியை போற்றி வணங்குகிறோம் !!

 முக்குணங்களால் சிருஷ்டியை நடத்துபவளும், குணங்களுக்கு அப்பாற்பட்டவளுமாகிய சிவைக்கு எங்கள் வந்தனம் !!

 ஜகத்திற்கு தாயாகவும், தந்தையாகவும் விளங்குபவளே !! அகில தந்திர ரூபமாகவும், யக்ஞ ரூபமாகவும் விளங்கும் தேவிக்கு எங்கள் வந்தனம் !!

 லோக குருக்களில் பிரதானமாக விளங்குபவளும், வாக் விபூதியாகவும் விளங்கும் தேவிக்கு எங்கள் வந்தனம் !!

 வேத சாகரமாக திகழ்பவளும், லக்ஷ்மியாக ஜகத்திற்கு சந்தோஷத்தை வழங்குபவளும், சம்பு பத்தினியாக விளங்கும் சர்வ சக்திக்கு எங்கள் வந்தனம் !!

 ஆதி, அந்தமற்றதும், பஞ்சபூத சம்பந்தம் இல்லாததும், வாக்கு, மனம் ஆகியவைகளுக்கு எட்டாததும்,

 ஊகிக்க முடியாத வைபவமுள்ளதும், ரூபமற்றதும், இருமை அற்றதும், சிறந்ததும், கண்ணுக்கு புலப்படாததுமான உனது பிரபாவத்தினை எப்படி வர்ணிப்பது?

 உலகத்தால் வணங்கப்படும் விஸ்வேஸ்வரி !! வேதரூபிணீ !! மாயாமயீ !! மந்திர ஸ்வரூபிணீ !! சர்வேஸ்வரி !! சர்வரூபிணி !! தயை செய்வாயாக !!

 இவ்வாறு இந்திராதி தேவர்கள், தேவியை பலவாறாக போற்றி துதித்து, பணிந்து சரணடைந்தனர்.

 அவர்களது துதியினால் மிக்க மகிழ்ச்சி அடைந்த தேவி வாஸவனை நோக்கி, வேண்டும் வரம் கேள் !! என்றாள்.

 அதற்கு இந்திரன், “தாயே !! பண்டனால் பீடிக்கப்பட்ட நாங்கள் மிகவும் சிரமத்துடன் உயிரை வைத்துக் கொண்டிருக்கிறோம். நீயே சரணம் அம்மா” என்றான்.

 அதைக் கேட்ட தேவி, “அஞ்சேல் !! விரைவில் நானே அவனைக் கொன்று, மூவுலகையும் உனக்கு அளிக்கிறேன். சந்தோஷமாக இருங்கள்” என்றாள்.

 அன்றியும், இந்த துதியை எவரொருவர் பக்தியுடன் பாராயணம் செய்கிறாரோ, அவர் செல்வம், புகழ், ஞானம் ஆகியவற்றை அடைவதோடு,

 நோயற்று, நீண்ட நாள் புத்ர, மித்ர, களத்ராதிகளுடன் சுகமாக வாழ்வர் என்றும் வரமளித்தனள்.
அனைவரும் தேவியை பார்த்து, பார்த்து பேரானந்தம் அடைந்தனர்.

(நாளை முதல் காமேஸ்வர – காமேஸ்வரி விவாக படலம்)
தொடரும்…

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.