அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 29)

0 17

 தேவர்களின் யாகத்தால் மகிழ்ந்த அம்பிகை, யாக குண்டத்திலிருந்து வெளிப்பட்டு, பண்டனால் சீரழிந்த சிருஷ்டியை புனரமைத்தாள்,அவளை தேவர்கள் பலவாறாக போற்றி துதித்தனர்.

 இனி :அப்போது மும்மூர்த்திகளும், மகரிஷிகளும், தேவரிஷியும், அப்சரஸ்கள், கந்தர்வர்கள், யக்ஷர் முதலிய அனைவரும் வந்து மகேஸ்வரியை துதித்தனர்.

 அப்போது பிரம்ம தேவரின் கட்டளைப்படி, விஸ்வகர்மா தேவியின் பொருட்டு அழகியதொரு பட்டணத்தை படைத்தார்.

 பிரகாரங்களும், தோரணங்களும், ரத, கஜ, துரக, பதாதிகளும், அழகிய ராஜவீதிகளும், அவரவர்க்கு தனித்தனியாக வீடுகளும் அமைந்த அழகிய அந்த பட்டணத்தினிடையே, அழகிய ராஜகிருஹம் அமைக்கப்பட்டது.

அதன் வாயிலில் பெரிய கோபுரமும், பல சாலைகளும், அநேக சபைகளும், நவரத்ன மயமான சிம்ஹாஸன சபையும் அமைக்கப்பட்டிருந்தது.

 அந்த நவரத்ன மய சபையின் மத்தியில், அழகிய சிந்தாமணியால் நிர்மாணம் செய்யப்பட்ட, ஒப்பற்ற, ஸ்வயம்பிரகாசமான, உதயசூரியனை போன்ற சிம்மாசனம் இருந்தது.

 இதைக் கண்ட பிரம்மா, இந்நகரில் இருந்து உலகை ஆளும் தேவிக்கு சரியான புருஷன் சிவனையன்றி ஒருவருமிலர்.

 ஆனால் அவரோ, ஜடாதாரியாய், முண்ட மாலை அணிந்து, விருபாக்ஷராய், கபாலியாய், விபூதி அணிந்து, மயானத்தில் தங்கி, அமங்கல வேஷதாரியாக இருக்கிறார்.

 சிருங்காரமே வடிவெடுத்து வந்த தேவி எங்ஙனம் அவரை வரிப்பாள் ? என சிந்தித்துக் கொண்டிருந்தார்.

 அப்போது பரமசிவன் அங்கே, கோடி மன்மதனை போல, திவ்யாபரணங்களை அணிந்தவராய், கந்த, புஷ்பங்கள் மணக்க, திவ்யாம்பரதாரியாக மணக்கோலத்தில் தோன்றினார்.

 அவரை கண்டு சொக்கிய பிரம்ம தேவர், அவரை காமேஸ்வரர் என்றழைத்து, பராசக்திக்கு ஏற்ற புருஷன் இவரே என அவரை அழைத்து கொண்டு தேவியிடம் சென்றார்.

 அங்கு மும்மூர்த்திகளும் தேவியை துதிக்க, காமேஸ்வரர், காமேஸ்வரியிடமும், காமேஸ்வரி காமேஸ்வரரிடமும் பிரியம் கொண்டு, மனதில் இவரே நமக்கு ஏற்றவர் என இருவரும் கருதினர்.

 இருவரும் காமத்தை வென்ற தீரர்களாதலால் பிறரால் அறிய முடியாத காரியம் உள்ளவர்களாக இருந்தனர். ஒரு முகூர்த்தத்தில் கலங்கா மனங்கொண்டனர்.

 பிரம்மன் தேவியை நோக்கி, “தாயே !! சகல தேவ கணங்களும், நீங்கள் கணவனுடன் கூடி, இந்த சிம்மாசனத்தில் அமர்ந்து தங்களை ஆளும்படி வேண்டுகின்றனர்.”

 “உமக்கு பதியாகும் பாக்கியத்தை பெற்றவர் எவரோ ? உலகை காக்க அவரை மணந்து, இந்நகரத்திற்கு ராணியாக இருங்கள்.”

 “தேவர்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, ஸாம்ராஜ்ய லக்ஷ்மியுடன், சர்வாபரண பூஷிதையாக, பதியுடன் சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் உம்மை காண ஆவல் கொண்டிருக்கிறோம்” என்று வேண்டினார்.

அதனைக் கேட்ட தேவி புன்னகையுடன் கூறியதை நாளை காண்போம்.
தொடரும்…

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.