அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 31)

0 29

அன்னை லலிதாம்பிகைக்கும், காமேஸ்வரருக்கும் திருமணம் நடந்து அனைவரும் காணிக்கைகளை சமர்ப்பித்து சந்தோஷம் அடைந்தனர்.

சிவசக்தி சங்கமத்தால் உலகம் சந்தோஷம் அடைந்தது.

இனி : பிரம்ம தேவர், அவர்களுக்கு சாம்ராஜ்ய பட்டாபிஷேகம் செய்ய கருதி, “குஸுமாகரம்” என்னும் திவ்ய விமானத்தை படைத்தார்.

 அது வாடாத மாலையுள்ளது. ஆயுதங்களால் வெட்ட முடியாதது. விண்ணிலும், மண்ணிலும் இஷ்டம் போல சஞ்சரிப்பது.

 அதன் வாசனையை நுகர்ந்த மாத்திரத்தில் பசி, பிணி, மயக்கம் போன்ற துன்பங்கள் நீங்கிவிடும்.
மனதிற்கு பேரானந்தம் அளிக்கும் அந்த திவ்ய விமானத்தில் தம்பதிகளை ஏற்றி தேவர்கள் ஊர்வலம் வந்தனர்.

 சத்ரம், சாமரம், கொடிகள், தடிகள் சூழ, வீணை, வேணு, மிருதங்கம் முதலிய வாத்தியங்கள் கோஷிக்க நாற்புறமும் தேவகணங்கள் சூழ,

 நகரத்தின் ஒவ்வொரு வீட்டின் மாடியில் இருந்தும் அனைவரும் அக்ஷதையை தூவ, தேவி தனது தேஜஸ்ஸினால் அனைத்தையும் பிரகாசப்படுத்திக் கொண்டு சென்றாள்,ஒவ்வொரு வீதியிலும் ஆரத்தி எடுக்கும் அப்சரஸ்களை மந்தஹாஸ புன்னகையால் ஆசி வழங்கி கொண்டே,ஆதி தம்பதியர் ஊர்வலம் முடிந்து, விமானத்திலிருந்து இறங்கி, ராஜ கிருஹத்தினுள் பிரவேசித்தனர். வயதான சுமங்கலிகள் திவ்ய புஷ்ப அக்ஷதைகளை தூவி அவர்களை வரவேற்று சிம்மாசனத்தில் அமர்த்தினர்.

 அங்கு கூடியிருந்தவர்களுக்கு, யார், யாருக்கு என்னென்ன வேண்டுமோ, அதை அதை தேவி தனது அமிர்த கடாட்சத்தால் பூர்த்தி செய்தாள். இதைக் கண்ட பிரம்மா, தேவியை காமாக்ஷீ, காமேஸ்வரி என்றெல்லாம் போற்றினார்.

 தேவியின் ஆணையால் அங்கே மேகங்கள் பல அரிய ஆபரணங்களை மழையாக பொழிந்தது,அனைவரது வீட்டிலும் சிந்தாமணியும், காமதேனுவும், கற்பக விருட்சமும் நிலைத்து நின்றது.

 பிரம்மாதி தேவர்களும், நாரதாதி தேவரிஷிகளும், வசிஷ்டாதி பிரம்ம ரிஷிகளும் தத்தம் நகரங்கள், காரியங்கள் அனைத்தையும் விடுத்து, தேவியின் ஆனந்தத்தில் ஈடுபட்டு அங்கேயே வசித்தனர்.

 இந்த தேவி என்னிடம் தான் அதிக அன்பு கொண்டவள், என்னிடம் தான் அதிக அன்பு கொண்டவள் என ஒவ்வொருவரும் எண்ணும் படி, அனைவரையும் தேவி மகிழ்வித்தாள்.

 இந்த தம்பதியர் மூவுலகிலுள்ள அனைவரது விருப்பங்களையும் நிறைவேற்றி ஆனந்தத்தை அளித்தனர்.

இங்ஙனம் 10,000 ஆண்டுகள் ஒரு க்ஷணம் போல கழிந்தது.

 ஒரு சமயம், நாரதர் அங்கு தோன்றி, தேவியை துதித்து, “தாயே !! தாங்கள் அவ்யக்தை ஆயினும், துஷ்டர்களை சிக்ஷிக்கவும், சிஷ்டர்களை ரக்ஷிக்கவும் தாங்கள் வ்யக்தையாக அவதரிக்கிறீர்கள்.”

 “பண்டாசுரன் என்பவன் மூவுலகையும் பீடிக்கிறான். தங்களைத் தவிர வேறு எவராலும் அவனை அழிக்க முடியாது.”

 “தேவர்கள் அனைவரும் தங்கள் சேவையிலேயே ஈடுபட்டிருப்பதால் தேவ நகரங்கள் அனைத்தும் அமங்கலமாகவும், சூன்யமாகவும் இருக்கிறது.”

 “எனவே தங்கள் அவர்கள் அனைவரையும் தத்தம் நகரம் திரும்ப அனுமதிக்க வேண்டும்” என்றார்.

 அதனை கேட்ட தேவியும், அவர்களை தக்கபடி சன்மானித்து அனுப்பினாள். அனைவரும் தேவியை பிரிய மனமில்லாமல், ஓரம்சத்தால் அங்கேயே தங்கி தேவியை பூஜித்து கொண்டிருந்தனர்.

 ஹயக்ரீவர் : தேவியின் ஆவிர்பாவம், ராஜ்யாபிஷேகம் (பதிவு 24-31) , ஆகியவற்றை காலையில் எழுந்து எவன் பக்தி, சிரத்தையுடன் பாராயணம் செய்கிறானோ, அவன் செல்வம் நிறைந்து, அமிர்தம் போன்ற வாக்கினை அடைவான்.

 அகவுலகிலும், புறவுலகிலும் அவர் ஒருநாளும் அசுபத்தை பெற மாட்டார். பரந்த கீர்த்தியையும், நித்ய லக்ஷ்மியையும் பெறுவான்.

 மிக்க தேஜஸ்வியாய், வீர்யவானாய், தீரனாய், 4 புருஷார்‍த்தங்களையும் பெற்று சுகமாய் வாழ்வான்.

 சிம்மாசனத்தில் அமர்ந்த தேவியை மூன்று சந்திகளிலும் பூஜிப்பவன் ஆறு மாதத்தில் மிகுந்த செல்வத்தை அடைவான்.
தொடரும்…

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.