அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 32)

0 17

 காமேஸ்வரர் மற்றும் காமேஸ்வரி திருமணம் நடந்ததை அடுத்து, அவர்கள் இருவருக்கும் சாம்ராஜ்ய பட்டாபிஷேகம் செய்து வைத்தார் பிரம்ம தேவர்.

 நாரதரின் வேண்டுதலை ஏற்று தேவி, அனைவரையும் அவரவர் உலகிற்கு அனுப்பி விட்டு, போருக்கு ஆயத்தமானாள்.

(தேவர்ஷிகண சங்காத ஸ்தூயமானாத்ம வைபவா – லலிதா சகஸ்ரநாமம்)

இனி : தேவியின் விஜய யாத்திரை ஹயக்ரீவர்  திரிலோக கண்டகனாகிய பண்டனை கொல்ல ஜகன்மாதாவான ஸ்ரீலலிதா தேவி கிளம்பினாள்.
சப்த சமுத்திரங்களும் மத்தளமாகி வானளாவ கோஷித்தது.
சக்தி சேனா வர்ணனை

 ஸ்ரீலலிதா தேவியின் அங்குசத்திலிருந்து தோன்றிய சம்பத்கரீ தேவி, “ரணகோலாஹலம்” என்னும் யானை மீதேறி நால்வகை சேனையுடன் கிளம்பினாள்.

(சம்பத்கரீ சமாரூட ஸிந்தூர வ்ரஜஸேவிதா – லலிதா சகஸ்ரநாமம்)

 ஸ்ரீலலிதா தேவியின் பாசத்திலிருந்து தோன்றிய அஸ்வாரூடா தேவி, “அபராஜிதம்” என்ற குதிரை மீதேறி போர்க்கோலத்துடன் புறப்பட்டனள்.

 அவளைத் தொடர்ந்து, வநாயுஜம், காம்போஜம், பாரசீகம் முதலிய குதிரை படைகள் பின் சென்றன.

அஸ்வாரூடா தேவி தனது கரங்களில் பாசம், அங்குசம், பிரம்பு, கடிவாளம் ஆகியவற்றை ஏந்தி, குதிரைகளை நர்த்தனம் செய்வித்து கொண்டே சென்றாள்.

(அஸ்வாரூடா திஷ்டிதாஸ்வ கோடி கோடி பிராவ்ருதா – லலிதா சஹஸ்ரநாமம்)

 அதைத் தொடர்ந்து ஸ்ரீலலிதா தேவி, அதி தீவிரமாக ஹூங்காரம் செய்தாள். அதிலிருந்து 64,00,00,000 யோகினி கணங்களும், 64,00,00,000 பைரவர்களும் தோன்றினர். எண்ணற்ற சக்தி சேனையும் தோன்றின.

 பின்னர் ஸ்ரீலலதை, தனது சக்ர ராஜ ரதத்திலிருந்து, கேய சக்கரம் மற்றும் கிரி சக்கரமெனும் இரண்டு உத்தம ரதங்களை தோற்றுவித்து,

 அதனை தனது மந்திரிணியான சியாமளைக்கும், சேனாதிபதியான தண்டநாதைக்கும் அளித்தாள்.

 (சக்ரராஜ ரதாரூடா, கேயசக்ர ரதாரூட மந்திரிணி பரிஸேவிதா, கிரிசக்ர ரதாரூட தண்டநாதா புரஸ்க்ருதா – லலிதா சஹஸ்ரநாமம்)
தண்டநாதா பரிவாரம்

 ஸ்ரீதண்டநாதை என்னும் சக்தியின் பிரயாணத்திற்காக வாசிக்கப்படும் படஹ சப்தம் உலகை செவிடு படும்படி செய்தது.

 அவளை சார்ந்த சக்திகள் பல பயங்கர ஆயுதங்களுடன், பலவகையான கொடி, குடை, த்வஜம் ஆகியவற்றை கைகளில் ஏந்தி சென்றனர்.

 சண்டன், உச்சண்டன் முதலிய பைரவர்கள் தங்கள் ஸ்வர்ண வர்ணமான ஜடாமண்டலத்தால் திக்குகளை பிரகாசித்துக் கொண்டு, அசுரரை தகிக்க சூலபாணிகளாக சென்றனர்.

 வராகமுகியான தேவி தன்னை போன்ற உருவம் கொண்ட சக்தி சேனைகள் சூழ, கறுத்த வஸ்திரம் உடுத்தி, கோரைப் பற்களுடன், உக்ரபார்வையோடு

 தனது கிரிசக்ர ரதத்திலிருந்து இறங்கி 3 யோஜனை தூரம் உயரமாய் உள்ள தனது வஜ்ரகோஷம் என்னும் சிம்மத்தின் மீதேறி, கோபம் கொண்டு அவள் கிளம்பிய போது மூவுலகமும் நடுநடுங்கியது. அமரர் அனைவரும் அவளது கோபம் கண்டு அஞ்சினர்.

 உலகை எரித்து சாம்பலாக்குவாளோ, உலக்கையால் பூமியை இருகூறாக பிளப்பாளோ, கலப்பையால் கடலை கலக்குவாளோ என்று அஞ்சி வெகு தூரம் சென்று, அவளை 12 நாமாக்களால் துதித்தனர்.

அகத்தியர் : ஓ மஹா பிரக்ஞரான ஹயக்ரீவரே !! அந்த 12 திருநாமங்களை அருள் கூர்ந்து கூற வேண்டும்.

ஹயக்ரீவர் : எதைக் கேட்ட உடன் தேவி மகிழ்வாளோ, அதைக் கூறுகிறேன். கேள் !! என்றார்.

1. பஞ்சமி
2. தண்டநாதா
3. ஸங்கேதா
4. ஸமயேஸ்வரி
5. ஸமயஸங்கேதா
6. வாராஹி
7. வார்த்தாளீ
8. சிவா
9. போத்ரிணீ
10. மஹாசேனா
11. அரிக்னீ
12. ஆக்ஞா சக்ரேஸ்வரி
இந்த 12 நாமாக்கள் என்னும் வஜ்ர கவசத்தை அணிந்தவர் ஒரு போதும் துன்பத்தை அடைய மாட்டார்.

இங்ஙனம் துதிக்கும் தேவர்களின் நன்மை கருதியே, தேவி யுத்தத்திற்கு கிளம்பி சென்றாள்.
(நாளை மந்திரிநாதா பரிவாரம்)
தொடரும்…

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.