அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 33)

0 17

 தேவர்களை தத்தம் உலகிற்கு அனுப்பி விட்டு போருக்கு ஆயத்தமானாள் அம்பிகை,பாசத்திலிருந்து தோன்றிய அஸ்வாரூடா தேவி குதிரை படையை நிர்வகித்தாள் அங்குசத்திலிருந்து தோன்றிய சம்பத்கரீ தேவி யானை படையை நிர்வகித்தாள்.

 தண்டநாதா தேவி கிரிசக்ர ரதத்திலிருந்து இறங்கி வஜ்ரகோஷம் என்னும் சிம்மத்தின் மீதேறி படைகளுடன் சென்றாள்.

இனி : மந்திரிநாதா பரிவாரம் மந்திரிநாதா, அம்பிகையை பணிந்து கிளம்ப, அவளது பிரயாணத்தை குறிக்கும் வகையில் சங்கீத யோகினி காஹளி வாத்தியத்தினை முழங்கினாள்,அவளின் பரிவார சக்திகள் பாடிக் கொண்டும், ஆடிக் கொண்டும் தேவியை துதித்தனர். மயில், ஹம்ஸம், கீரி என பல்வேறு வாகனங்களில் அவளை பின் தொடர்ந்தனர்.

 நகரும் போதெல்லாம் இசையொலி எழுப்பும் கேயசக்கரம் என்னும் திவ்ய ரதத்தில் புறப்பட்டனள்,தேவர்கள் அவளை 16 நாமங்களால் துதித்தனர்.

1. சங்கீத யோகினி
2. சியாமா
3. சியாமளா
4. மந்திரிநாயிகா
5. மந்திரிணி
6. ஸசிவேஷானி
7. பிரதானேஷி
8. கதம்பேஷி
9. கதம்பவனவாஸினி
10. முத்ரிணி
11. வீணாவதி
12. வைணிகீ
13. சுகப்ரியா
14. நீபப்ரியா
15. பிரியகப்ரியா
16. ஸதாமதா

 இந்த 16 திருநாமங்களை பக்தியுடன் ஒரு முறை ஜபித்தாலும், பாராயணம் செய்பவருக்கு மூவுலகமும் வசியமாகும்.

 மந்திரிநாதையின் கடாக்ஷம் எங்கெங்கு படுகிறதோ, அங்கெல்லாம் சேனைகள் சந்தேகமின்றி தைரியமாக முன்னேறி சென்றனர்,பின்னர், சங்கீத யோகினியின் கரத்திலிருந்த கிளியிடமிருந்து தனுர்வேதம் 4 கைகள், 3 கண்களுடன் தோன்றி பிரதான தேவியை வணங்கி பின்வருமாறு கூறியது “தாயே !! பண்டாசுரனோடு போர் புரிய செல்லும் தங்களுக்கு சகாயம் செய்வது என் கடமை.

 தானவரை அழிக்கும் சித்ரஜீவம் என்னும் வில்லையும், அக்ஷயமான இரு அம்பறாத் தூணிகளையும் பெற்று அருள் புரியுங்கள்.”

 அதனைப் பெற்று கொண்ட தேவி, வில்லில் நாணேற்றி, டங்காரஞ் செய்தனள். அந்த சப்தமானது உலகெங்கும் பரவி, தேவர்களுக்கு பேரானந்தத்தை விளைவித்தது.

யந்திரிணி, தந்திரிணி என்னும் அவளுடைய தோழிகள் இருவரும், கிளியையும், வீணையையும் தலையிலேந்தி அவளுக்கு பணிவிடை செய்தது.

மந்திரிநாதையின் கரங்களில் இருந்த அம்புகள் காளியின் கண்கள் போன்று உக்ரமாக இருந்தது.
உக்ரவேஷத்துடன் பற்பல பயங்கர ஆயுதங்களுடன் ஆயிரம் அக்ஷௌஹிணி சேனை அவளை பின் தொடர்ந்தனர். அதன் சப்தம் வானளாவி நின்றது.
(நாளை ஸ்ரீதேவியின் வருகை)
தொடரும்…

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.