அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 37)

0 8

 ஸ்ரீதேவி பண்டனை வெல்ல நடத்தி செல்லும் சேனைகள், பரிவாரங்கள் மற்றும் அவர்களது ரத வர்ணனைகளை கண்டோம்.

இனி : சூன்யக நகரத்தின் உத்பாதங்கள்,நூறு யோஜனை தூரம் விசாலமான சூன்யக நகரம் உத்பாதங்களால் புகை மண்டலமாக காட்சியளித்தது. சுவர்களெல்லாம் பிளந்து விழுந்தது.

 ஆகாயத்திலிருந்து கொள்ளிக்கட்டைகள் விழுந்தது. பூகம்பம் ஏற்பட்டது. குடிகளின் மனம் காரணமின்றி கலங்கியது. நாய்கள் சூரியனைப் பார்த்து ஊளையிட்டது,இப்படிப்பட்ட கெட்ட சமிக்ஞைகளை கண்ட மக்கள் பண்டனிடம் முறையிட்டனர். உடனே அவன் மந்தராலோசனை செய்ய சபைக்கு வந்தான்.

விசுக்ரன் : “தேவா !! உமது புஜ பல பராக்கிரமம் கண்டு பயந்த தேவர்கள், வேறு வழியின்றி அக்னியில் வீழ்ந்து அழிந்தனர்.”

“அங்கிருந்து தெய்வச் செயலாக ஒரு பெண் தோன்றி இறந்த தேவர்களை உயிர்த்தெழுப்பினாள். அவர்களால் உற்சாகம் கொண்ட அவள், பல அபலைகளுடன் பற்பல ஆயுதங்களை ஏந்தி கொண்டு நம்மை வெல்ல வருகிறாள்.”

“சமஸ்த தேவர்கள், கணங்கள், மும்மூர்த்திகளாலும் வெல்ல முடியாத தங்களை நோக்கி ஒரு பெண் படையெடுத்து வருகிறாள். என்னே அறியாமை ?!”

“ஆயினும் அற்பமான எதிரியைக் கூட உதாசீனம் செய்யலாகாது. தாங்கள் ஆணையிட்டால் கிங்கரர்களை அனுப்பி அவள் தலைமயிரை பிடித்து இழுத்து வரச் செய்கிறேன்.”

விஷங்கன் : “தேவா !! தாங்கள் அறியாதது ஒன்றுமில்லை. எதையும் நன்கு விசாரித்து செய்யாவிட்டால் காரியம் வெற்றி பெறாது.”

“எனவே, நமது ஒற்றனை அனுப்பி அவர்களது பலாபலத்தை அறிய வேண்டும். பெண் என்று எதிரியை உதாசீனம் செய்யலாகாது.”

பண்டாசுரன் : (பரிகாச சிரிப்புடன்) “ஹா !! இதென்ன விசாரம் ? சமமான சத்ருவிடம் தான் இத்தகைய நீதி விசாரம் செய்ய வேண்டும்.”

“நமது சேனைகளில் மிகவும் பலம் வாய்ந்த சேனாதிபதிகள் நூற்றுக்கணக்கில் இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் ஏழு கடலை கலக்கவும், மூவுலகையும் எரிக்க வல்லவர்கள்.”

“அவளைப் பற்றி நானும் கேள்விப்பட்டேன். அவள் பெயர் லலிதா. பெயருக்கு ஏற்றார் போல மிக மிருதுவான சரீரம் கொண்டவள். போர்க்களத்தையே கண்டிராதவள்.”

“ஆனால் மாயை நிறைந்தவள். பல பெண்களைப் படைத்து அவர்களுக்கு மத்தியில் நடமாடுகிறாள். அவளுக்கு ஏது பலம் ? அல்லது நீ கூறிய படி, பலசாலியாகவே இருப்பினும்,
மூவுலகிலும் தங்குதடையின்றி செல்லும் சக்தி படைத்த இந்த பண்டனை வெல்ல ஒருவருமிலர்.”

“இத்தகைய நமது பராக்கிரமத்தினை நேற்று பிறந்த அவள் எங்ஙனம் அறிவாள் ? அவளை முன்னிட்டு யுத்தம் செய்ய வரும் தேவரோ, மூவரோ எவராயினும் அவர்களை வெல்ல நான் ஒருவனே போதும்.”

“ஆயிரக்கணக்கான நமது அக்ஷௌஹிணிபதிகள் சினங்கொண்டால் எதிரிகளின் சேனைகளில் சாம்பல் தான் மிஞ்சும்.”

“ஹா !! அபலையான இச்சிறுமி எம்மாத்திரம் !! மனக்கவலையை விட்டொழி” என்று கூறியவாறே ஆசனத்தை விட்டு எழுந்தவன், ஆயிரம் சேனைக்கதிபனான குடிலாக்ஷனைப் பார்த்து கூறினான்.

“ரே !! சேனைகளை தயார் செய் !! நம் நகரத்தின் நாற்புறமும் சேனைகளை நிறுத்து, சஸ்திரங்களை எறியும் இயந்திரங்களை நூற்றுக்கணக்கில் சேகரி !!”

“புரோகிதர்களைக் கொண்டு ஆபிசார ஹோமம் செய். ஆயுதங்களை தயாராக வைத்துக் கொள். விரைவில் யுத்தம் நடைபெறும்.”

“தக்க சேனாதிபதியை முன்னிறுத்து. அவன் வருபவளுடன் போர் புரிந்து, அவள் தலைமயிரை பிடித்து இழுத்து வரட்டும்” என்று கூறி அந்தப்புரம் சென்றான்.

யுத்தத்திற்கு வரும் லலிதையின் சேனை த்வனி அசுரர்களின் காதில் விழுந்து மிக்க பயத்தை உண்டு பண்ணியது.
தொடரும்…

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.