அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 38)

0 8

 ஸ்ரீலலிதை பண்டன் மீது படையெடுத்து வந்ததை அடுத்து சூன்யக நகரத்தில் பல அபசகுனங்கள் தோன்றின,இதைக் கண்ட பண்டன், மந்தராலோசனை நடத்தி குடிலாக்ஷனை யுத்தத்திற்கு ஆயத்தமாக ஆணையிட்டான்.

இனி : பண்டனின் ஆணைப்படி, குடிலாக்ஷன் நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தான்,சூன்யக நகரத்தின் கிழக்கு வாயிலில் 10 அக்ஷௌஹிணி சேனையுடன் தாளஜங்கனும், தென் திசையில் 10 அக்ஷௌஹிணி சேனையுடன் தாளபுஜனும், மேற்கு திசையில் 10 அக்ஷௌஹிணி சேனையுடன் தாளக்ரீவனும், வடக்கு திசையில் 10 அக்ஷௌஹிணி சேனையுடன் தாளகேதுவும் ரக்ஷகர்களாக நியமிக்கப்பட்டனர்.

 கோட்டையை சுற்றி கடிசீர்ஷகமென்னும் வீடுகளை சுற்றி 10 அக்ஷௌஹிணி சேனை மண்டலமாக நிறுத்தப்பட்டது.

குடிலாக்ஷன் என்னும் சேனாதிபதி, துர்மதன் என்னும் அசுரவீரனை அக்ஷௌஹிணி சேனையுடன் தேவியுடன் போர் புரிய அனுப்பினான்,இந்த அனைத்து ஏற்பாடுகளைப் பற்றியும் பண்டனிடம் கூறிவிட்டு குடிலாக்ஷனும் போருக்கு ஆயத்தமானான்.

அசுர சேனையின் த்வனியானது நரசிம்மத்தின் கர்ஜனை போல வானளாவி நின்றது.துர்மத வதம் ராக்ஷஸ சேனையில் உள்ளோர், துர்மதன் உத்தரவுப்படி சக்தி சேனையை கத்தியால் தாக்கினர்.

சக்திகளும் தங்கள் எஜமானியின் உத்தரவுப்படி, அவர்களை தாக்கினர். இரு சேனைகளும் கைகலந்து மோதியதில் புழுதி வானளாவியது.

அசுரர்களின் அட்டகாசம் கண்டு அடங்கா சினங்கொண்ட சம்பத்கரீ தேவி, சக்திகள் சூழ வந்து அவர்களை தாக்கினாள். எங்கும் ரத்த ஆறு ஓடியது.

ரத்தத்தினால் சிவந்ததும், கீழே தள்ளப் பட்ட வெண்குடைகளால் நிறைந்ததுமான யுத்தகளம், பிரளயகால சந்தியாகாலம் போல விளங்கிற்று.

இங்ஙனம் முறியடிக்கப்பட்ட அசுர சேனை ஆக்ரோஷமாக தாக்க, சக்திகளும் பயங்கர ஆயுதங்களால் தைத்யர்களின் சிரங்களை அறுத்து குவித்தனர்.

தேவியர்களின் உக்ர பராக்ரமத்தை தாங்க மாட்டாமல் அசுரர்கள் கூக்குரலிட்டு ஓட ஆரம்பித்தனர்.

இதைக் கண்ட துர்மதன், ஒட்டகம் மீதேறி வந்து சம்பத்கரீ தேவியின் சேனையை முறியடித்தான்.

இதனைக் கண்டு வெகுண்ட சம்பத்கரீ தேவி, ரணகோலாஹலம் என்னும் குஞ்சரத்தின் மீதேறி வந்து, பாணங்களை மழையாக பொழிந்தாள்.

அவள் அம்பை எடுப்பதும், தொடுப்பதும் பிறர் அறியாவண்ணம் விரைவாக யுத்தம் செய்தனள். இருவருடைய பாணங்களும் ரீங்காரத்துடன் எழும்பி, சூரியனை மறைத்தது.

ரணகோலாஹலம் என்னும் கரீந்திரன், தனது துதிக்கையாலும், வாலாலும், பிளிறும் சப்தத்தினாலும் பல அசுரர்களை சாமர்த்தியமாக கொன்றது.

துர்மதன் மிகுந்த ஆத்திரத்துடன் ஒரு பாணத்தால் சம்பத்கரீ தேவியின் மகுடத்திலிருந்து ஒரு மணியை தரணியில் தள்ளினான்.

கோபத்தினால் கண்கள் சிவக்க, உதடுகள் துடிக்க, தேவி பல பாணங்களை அவன் மார்பில் பாய்ச்சி அவன் உயிரை பறித்தாள்.

சக்தி சைன்யங்கள் அசுர சேனையின் இதர பிரமுகர்களை கொன்று வீழ்த்தினர்.
அடிபட்டு தப்பி பிழைத்த சிலர் சூன்யக நகரத்திற்கு ஓடிச் சென்று பண்டனிடம் முறையிட்டனர்.

                                                                                                                                                                        தொடரும்…

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.