அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 43)

0 9

 பெரும் வலிமை மிக்க வீரர்கள் அனைவரும் மடிந்து வருவதைக் கண்ட பண்டன், அவளை ரகசியமாக தாக்க உத்தரவிட்டான்.

 அதன்படி விஷங்காதிகள் ரகசியமாக தாக்க, நித்யா தேவியர் சினங்கொண்டு அவர்களை அழிக்க, விஷங்கன் தப்பி ஓடினான்.

இனி : அக்னி கோட்டை கட்டுதல்

ஹயக்ரீவர் : தண்டநாதையின் பாண வர்ஷத்தால் 10 அக்ஷௌஹிணி சேனையும் அன்றிரவே மடிந்தன. குடிலாக்ஷன் தனியே நிற்க பயந்து ஓடினான். இதைக் கேட்ட பண்டன் மனங்கலங்கினான்.

 மந்திரிணியும், தண்டினியும் முன்புறத்தில் இருந்த போது பாபிகள் பின்புறமாக வந்து இழைத்த தீங்கு கேட்டு தேவியின் மனம் என்ன நினைத்ததோ ! சக்ரராஜ ரதத்திற்கு சரியாக காவல் வைக்கவில்லை.

 ஸ்ரீதேவி தான் யுத்தம் செய்தாளோ! ஆங்கு என்ன நடந்ததோ என பலவாறாக சிந்தித்து கொண்டு சகல சக்திகளும் ஸ்ரீதேவியின் ரதத்தை சூழ்ந்து கொண்டனர்.

 தண்டநாதையும், மந்திரிணியும் தத்தம் வாகனத்தை விட்டிறங்கி ஸ்ரீரதத்தின் 9 பர்வாக்களிலும் ஏறி ஆங்குள்ளவர்களால் அறிவிக்கப்பட்டு ஸ்ரீலலிதையை கண்டுகளித்து நமஸ்காரம் செய்தனர்.

 பிறகு தண்டநாதையும், மந்திரிணியும் தேவியிடம், மஹாராக்ஞீ !! பெரும் தவறு நேர்ந்து விட்டது. கபட மார்க்கத்தால் நம்மை வெல்ல கருதி, அசுரர்கள் தீங்கிழைத்தனர்.

தங்கள் ஒருவர் பலத்தை கொண்டே நாங்கள் அனைவரும் பிழைத்து இருக்கிறோம்.

 அகாலத்தில் மாயாவிகள் நம்மிடம் கபட யுத்தம் செய்யாதபடி மஹேந்திர மலையின் தென்புறத்தில் நூறு யோஜனை தூரம் விசாலமான ஒரு கூடாரத்தை அமைத்து, அதை சுற்றி ஒரு அக்னி கோட்டை அமைக்க வேண்டும் என்றனர்.

 இதைக் கேட்ட ஸ்ரீதேவி, “ஆஹா !! இதுவல்லவோ புத்திசாலி தனமான நீதிமார்க்கம். வெற்றி வேண்டுவோர் முதலில் தனது சேனையை நன்கு காத்துக் கொள்ள வேண்டும்” என்று கூறி,

 “ஜ்வாலாமாலினி !! நீ பூமியில் நூறு யோஜனை தூரம் வட்டமாகவும், ஆகாயத்தில் 30 யோஜனை உயரமாக ஒரு கோட்டையை அமைப்பாயாக !!” என்றாள்.

 சதுர்த்தசி திதியான ஜ்வாலாமாலினியும் அப்படியே ஆகட்டும் தேவி என்று கூறி ரத்னபிரகாரம் போன்ற அக்னி கோட்டையை நிர்மாணித்தாள்.

 இந்த விசாலமான கோட்டையை கண்டு மகிழ்ச்சியாக உள்ளே நுழைந்து சக்ரராஜ ரதத்தை மத்தியில் அமைத்து அதற்கு இரு புறமும் கேயசக்கரம் மற்றும் கிரி சக்கர ரதத்தையும் நிறுத்தினர்.

மேற்கில் சம்பத்கரீ ரதத்தினையும், எதிரில் அஸ்வாரூடா ரதத்தையும் நிறுத்தினர்.

 வாசற்படியில் 20 அக்ஷௌஹிணி சேனையுடன் ஜ்வலிக்கும் தண்டாயுதத்தை கைகளிலேந்திய ஸ்தம்பினி என்பவளை வைத்தார்கள். அவள் தண்டநாதையின் விக்னதேவி என பிரசித்தமானவள்.

 இங்ஙனம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டு, சூரியன் நன்கு உதயமான பிறகு யுத்தத்திற்கு ஆயத்தமானார்கள்.
ஜ்வாலாமாலினி காக்ஷிப்த வஹ்னிப்ராகார மத்யகா – லலிதா சஹஸ்ரநாமம்)
தொடரும்…

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.