அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 44)

0 4

விஷங்காதிகள் இரவில் கபட யுத்தம் செய்ததை எதிர்ப்பார்க்காத சக்திகள், அதனை சமாளித்த போதும் இனி இதுபோல நடக்காமல் இருக்க ஜ்வாலாமாலினியால் அக்னி கோட்டை அமைத்து அதில் சேனையுடன் இருந்தனர்.

இனி :பண்டபுத்ர வதம் இங்ஙனம் அக்னி கோட்டை அமைக்கப்பட்டது கேள்வியுற்ற பண்டனுக்கு பயம் மிகவும் அதிகமாயிற்று. உடனே தனது சகோதரர்கள், புத்திரர்கள் மற்றும் முக்கிய சேனாதிபதிகளுடன் ஆலோசனை நடத்தினான்.

முடிவில் யுத்தம் செய்ய மிக்க சக்தியுள்ளவர்களும், பிரியமானவர்களுமான தனது 30 புத்திரர்களை அனுப்ப தீர்மானித்தான்.

அவர்களை அழைத்து, “வீரபுத்ரர்களே !! போரில் உங்களுக்கு நிகர் யாருமில்லை. உங்களை கொண்டே சகல லோகங்களையும் வென்றேன்.”

“அப்படிப்பட்ட நீங்கள் இருக்கும் போது நமது குலத்திற்கு பெண் ஒருத்தியால் நாசம் விளைகிறது. எனவே, நீங்கள் அவளை உயிருடன் பிடித்து வர வேண்டும்” எனக் கூறி 20 அக்ஷௌஹிணி சேனையுடன் அனுப்பி வைத்தான்.

அச்சமயம் பூமி நடுங்கியது. பல அபசகுனங்கள் தோன்றின. அதை மதியாது செல்லும் அவர்கள் மீது அசுர ஸ்த்ரீகள் பொரியை இறைத்து, ஆரத்தி எடுத்து அனுப்பினர்.

அக்னி கோட்டைக்கு அருகே வந்த பண்ட புத்ரர்கள் இளமை துடிப்பில் மிகுந்த அட்டகாசம் செய்தனர்.

அப்போது எல்லா சக்திகளாலும் பூஜிக்கத்தக்கவளும், அன்னை ஸ்ரீலலிதையின் இதயத்திலிருந்து தோன்றியவளும், எப்பொழுதும் அவள் பாதங்களில் வசிப்பவளுமான ஸ்ரீ பாலாம்பிகை இதைக் கேட்டு மிகவும் கோபம் கொண்டாள்.

அவள் எப்பொழுதும் 9 வயதுள்ளவள். சர்வ வித்யைகளுக்கும் நிதியானவள். சிவந்த நிறமுள்ளவள். வெளியில் சஞ்சரிக்கும் ஸ்ரீதேவியின் பிராணனும் அவளே. அவளே நான்காவது நேத்ரம்.

இப்படிப்பட்ட ஸ்ரீபாலாம்பிகை அன்னையை நோக்கி, “அம்மா !! பண்ட புத்ரர்கள் வந்து அட்டகாசம் செய்கிறார்கள். அவர்களுடன் போர் புரிய நான் மிகவும் ஆவலாக உள்ளேன்.”

“நான் தங்கள் குமாரி அல்லவா !! எனது விளையாட்டுக்கு மறுப்பு கூறாமல் அனுமதிக்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டாள்.

இதைக் கேட்ட ஸ்ரீதேவி, “குழந்தாய் !! நீ அதி மிருதுவான சரீரம் கொண்டவள். புதிதாக போரில் புகுபவள். நீ எனக்கு ஒரே குமாரி ! உன்னை விட்டு ஒரு கணமும் என்னால் பிரிய முடியாது.”

“தண்டினி, மந்திரிணி போன்ற கோடிக்கணக்கான சேனை இருக்கும் போது நீ ஏனம்மா போக வேண்டும்?” என தடுத்தாள்.

குழந்தை பருவமாதலால் பாலா தேவி மீண்டும் பிடிவாதம் பிடித்தாள். அவளது திடசித்ததத்தை கண்ட தேவி, அவளை இறுக தழுவி, தனது கவசங்களிலிருந்து ஒரு கவசத்தையும், ஆயுதங்களிலிருந்து ஆயுதத்தையும் தந்து அனுப்பினாள்.

ஸ்ரீலலிதையின் வில் தண்டத்திலிருந்து கிளம்பிய கர்ணீரதம் என்னும் பல ஹம்ஸங்கள் பூட்டிய ரதத்திலேறி ஸ்ரீபாலாம்பிகை கிளம்பினாள். கின்னரர் பாடினர். ஆவரண தேவதைகள் ஆசி கூறினர். சிலர் வணங்கி பணிந்தனர்.

போருக்கு ஸ்ரீபாலா வருவதை கண்ட மந்திரிணியும், தண்டினியும் பயந்து, “அம்மா !! யுத்தம் செய்ய நிச்சயித்து விட்டாயோ !! நாங்கள் இருக்கும் போது நீ வருவது உசிதமல்லவே. உம்மை வணங்குகிறோம், திரும்ப சென்று விடம்மா !!” என்றனர்.

இதைக் கேட்டும் சலிக்காமல் செல்லும் பாலாம்பிகையை பார்த்து வியந்து அவளை ரக்ஷித்து கொண்டு அக்னி கோட்டை வாயில் வழியாக வெளியே சென்றனர்.

அசுர சேனைகள் எண்ணிறந்த சரங்களை குமாரியின் மீது வர்ஷித்தனர். அவளும் சளைக்காமல் பாணங்களை வர்ஷித்தாள். அதைப் பற்றி க்ஷணத்திற்கு க்ஷணம் தேவியிடம் பரிவார சக்திகள் கூறி கொண்டு இருந்தனர்.

மந்திரிணியும், தண்டினியும் வியந்து போர் புரிவதை விட்டு விட்டு அவளை கவனித்து கொண்டிருந்தனர்.

பாலா ஒருத்தியே, ஆயினும் பண்ட புத்ரர் ஒவ்வொருவர் எதிரிலும் ஒவ்வொருத்தியாய் தோன்றி, அவர்களை அடித்து அதிவேகமாக யுத்தம் செய்த விதம் விண்ணவர்க்கு வியப்பை தந்தது.

இரண்டாம் நாள் யுத்தம் முழுவதும் பாலா ஒருத்தியே போர் புரிந்து ஒப்பற்ற தனது பராக்ரமத்தை உலகிற்கு காட்டினாள்.

அசுரர்களின் அஸ்திரங்களுக்கு நிகரான பிரதியஸ்திரங்களை விடுத்தாள். அன்றியும், நாராயணாஸ்திரத்தால் 20 அக்ஷௌஹிணி சேனையையும் ஒரு நொடியில் பஸ்மமாக்கினாள்.

இதைக் கண்டு சினங்கொண்ட பண்ட புத்ரர்கள் ஏககாலத்தில் பாலா தேவியின் மீது பாய, குமாரியும் ஏக காலத்தில் 30 பாணங்களை விட, அது அவர்களுடைய சிரங்களை கொய்து யம லோகம் அனுப்பின.

விரைந்து வந்த மந்திரிணியும், தண்டினியும் பாலையை இறுக தழுவி கொண்டாடினார்கள். ஜயகோஷங்கள் விண்ணை பிளந்தது. அனைவரும் குமாரியின் வெற்றியை கண்டு வியந்தனர்.

சக்திகள் அனைவரும் சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் தேவியிடம் இவ்வற்புதத்தை கூறித் திரும்பினர்.

இதைக் கேட்ட ஸ்ரீதேவி, மிகவும் மகிழ்ச்சி அடைந்து, பாலையை மடி மீதமர்த்தி உச்சி மோந்து, தனது கரத்தால் தடவிக் கொடுத்து கொண்டாடினாள்.
(பண்டபுத்ர வதோயுக்த பாலா விக்ரமநந்திதா – லலிதா சஹஸ்ரநாமம்)
தொடரும்…

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.