அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 45)

0 10

சக்தி சேனைக்கு எதிராக இரண்டாம் நாள் யுத்தத்திற்கு பண்டனின் புத்திரர்கள் 30 பேர் வர, அவர்கள் அனைவரையும் அன்னை ஸ்ரீலலிதையின் மகளாகிய ஸ்ரீபாலாம்பிகை ஒருத்தியே கொன்றொழித்தாள்.

இனி : விசுக்ரன் செய்த ஜயவிக்ன யந்திரம் புத்ரர்கள் இறந்த சோகாக்னியால் வாட்டப்பட்ட பண்டன் அழுது புலம்பினான். “ஓ கண்மணிகளே !! என் குலவிருத்திக்காக உதித்தவர்களே !! என்னோடு பேசுங்கள், என் மடி மீது அமருங்கள்.”

“தேவர்களின் கர்வத்தை அடக்கியவர்களே !! தந்தையை விட்டு போகலாமா ? நீங்கள் இல்லாமல் வீடும், சபையும் சோபிக்காமல் சூன்யமாக உள்ளது.”

“மகா பராக்கிரமசாலிகளான உங்களை ஒருத்தியாகவே ஏக காலத்தில் கொன்றாள். இனி உங்கள் புன்னகைத்த முகத்தை எங்ஙனம் காண்பேன்” என பலவாறாக கதறி அழுது, மூர்ச்சையாகி ஆசனத்திலிருந்து திடீரென கீழே விழுந்தான்.

விஷங்கன், விசுக்ரன் ஆகியோர் அவனை ஆசுவாசப்படுத்தி, “தேவா !! சாதாரணமானவர்கள் போல நீங்கள் இப்படி புலம்பலாமா ?! மஹா யுத்தத்தில் இறப்பது மஹா வீரர்கள் தர்மம் தானே”

“அத்தகைய மரணத்திற்கு தாங்கள் வருந்தலாகாது. ஒரு பெண் வந்து நமது வீரர்களை கொல்கிறாள் என்பதைப் பற்றி தான் வருந்த வேண்டும்.”

இதனைக் கேட்ட பண்டன் புத்ர சோகத்தை விட்டு காலாக்னி போல் கோபம் கொண்டான்.
கண்கள் துடிக்க, கோபக்கனல் தெறிக்க, கத்தியை உதறி “இப்பொழுதே அந்த துஷ்டையை துண்டு துண்டாக வெட்டி எறிந்து மன சாந்தி அடைவேன்” என்று கூறி கிளம்பினான்.

அருகிலுள்ள அசுரர்கள் அவனை தடுத்து, “ஸ்வாமின்! ஒரு பெண்ணின் பொருட்டா தங்களுக்கு இத்தகைய பரபரப்பு! எங்களை கொண்டு இந்த காரியத்தை செய்யலாகாதா! உத்தரவிடுங்கள் !! என்றனர்.

இதைக் கேட்ட பண்டன் முகஞ்சிவக்க, “விசுக்ரா !! நீ மாயையால் எதிரிகள் வெற்றி பெறா வண்ணம் அவர்கள் கூடாரத்தில் ஒரு விக்ந யந்திரத்தை ஸ்தாபனம் செய்” என்று கட்டளை இட்டான்.

அதற்கு இசைந்து விசுக்ரன் கூறிப் புறப்படுகையில் சூரியன் அஸ்தமனமானது.

மை போன்ற இருள் தோன்றியவுடன் மாயா ரதத்திலேறி, மறைந்து மிக விசாலமான அக்னி கோட்டையை நெருங்கிய போது,

அங்கு எந்நேரமும் விழிப்புடனும், யுத்தம் செய்ய தயார் நிலையில் இருக்கும் 20 அக்ஷௌஹிணி சேனைகளுடன் ஸ்தம்பினி இருப்பதைக் கண்டு, உள்ளே நுழைய முடியாது எனக் கருதி கோட்டை சுவருக்கு வெளியே இருந்தபடியே, விக்ன யந்திரத்தை செய்தான், 2 குரோச அகல, நீளம் கொண்ட அழகிய சிலா பட்டத்தில் 8 திக்குகளிலும் சூலத்தை அமர்த்தி, அதில் சம்ஹார அக்ஷரத்தை எழுதி, அலசா, கிருபணா, தீநா, நித்ரா, தந்த்ரா, ப்ரமீலிகா, க்லீபா, நிரஹங்காரா முதலிய தேவதைகளையும் பிரதிஷ்டை செய்தான்.

பிறகு அதற்குரிய மந்திரத்தை ஜபித்து, பூஜை செய்து விட்டு ஆடு முதலிய பலிகளை தந்து வெளியே இருந்து தேவியின் கூடாரத்தில் அந்த யந்திரத்தை எறிந்தான்.
தொடரும்…

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.