அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 46)

0 17

இரண்டாம் நாள் போரில் தனது 30 மைந்தர்களையும் பறிகொடுத்த பண்டாசுரன் புத்திர சோகத்தில் ஆழ்ந்தான்.

அவனை ஆசுவாசப்படுத்திய அவனது சகோதரர்கள் பின்னர் அவன் கட்டளைப்படி விக்ன யந்திரம் செய்து அக்னி கோட்டையில் வீசினான்.

இனி : மஹா கணேசர் அவதாரம்,ஜயவிக்ன யந்திர பிரபாவத்தினால் சக்திகள் ஆயுதங்களை விடுத்து தீனர்களாகி, “சண்டை போதும், அரக்கர்களை கொல்வதால் என்ன பயன்? ஜீவஹிம்சை பாவமல்லவா?”

“தேவர்களுக்கு உதவி செய்வதால் நமக்கு என்ன லாபம், மந்திரிணி யார்? தண்டினி யார்? ராக்ஞீ யார்? என்ன வேலைக்கார பிழைப்பு இது!”

“உற்சாகத்தினால் என்ன பயன்? தூக்கம் போன்ற சுகம் உண்டோ! அது தான் மனதிற்கு ஓய்வைக் கொடுப்பது. இப்படிப்பட்ட நம்மை தேவி என்ன செய்ய முடியும்?”

“நாமெல்லாம் ஒன்று சேர்ந்தால் தான் அவள் ராக்ஞீ. நாம் இல்லாவிட்டால் அவளுக்கேது பலம்?”

என பலவாறாக கூறி விட்டு ஆயுதங்களை வீசி விட்டு அனைவரும் தூக்கம் கண்ணை சொருக அயர்ந்து விட்டனர்.

இதைக் கண்ட விசுக்ரன் தன் நகரஞ்சென்று இரண்டாம் நாள் நள்ளிரவில் 30 அக்ஷௌஹிணி சேனையுடன் அக்னி கோட்டைக்கு அருகே வந்து அட்டகாசம் செய்தான்.

இதைக் கண்டும் எந்த சக்திகளும் யுத்தம் செய்ய விருப்பமின்றி இருந்தனர்.

ஆனால் மஹானுபாவைகளான மந்திரிணியும், தண்டினியும் விக்ன யந்திரத்தால் பீடிக்கப்படாமல் இருந்தனர்.

இவர்கள் செயல்களை கண்ணுற்ற மந்திரிணியும், தண்டினியும் வியந்து இதைப் பற்றி ஸ்ரீதேவியிடம் முறையிட்டனர்.

“தேவி! இது எவர் செயல்? உலகமனைத்தும் பரிபாலிக்கப்படும் தங்கள் கட்டளையை எவரும் மதிக்கவில்லையே!”

“இந்த நேரத்தில் எதிரி சேனையுடன் வந்து அட்டகாசம் செய்கிறார்கள். இனி என்ன செய்ய வேண்டுமோ, அதை மஹாராக்ஞீயே செய்யட்டும்” என தண்டநாதை வணங்கி நின்றாள்.

இதைக் கேட்ட ஸ்ரீலலிதா தேவி காமேஸ்வரர் பால் கடைக்கண் செலுத்தி, பற்கள் அதிகம் தெரியா வண்ணம் புன்னகை புரிந்தாள்.

அந்த புன்னகையின் காந்தி கூட்டத்திலிருந்து யானை முகத்தோடு கூடிய கணேசர் மாதுளை, கதை, கரும்பு வில், சூலம், சுதர்சனம், தாமரை, பாசம், நெய்தல் பூ, நெற்கொத்து, தனது தந்தம்

ஆகியவற்றை 10 கரங்களில் ஏந்தி, துதிக்கையில் ரத்னகும்பத்துடன், பெருத்த வயிறுடன், சந்திர சூடராய், ஸித்த லக்ஷ்மியால் ஆலிங்கனம் செய்யப்பட்டவராகத் தோன்றி ஸ்ரீதேவியை பணிந்து நின்றார்.

ஸ்ரீதேவியின் ஆசிகளைப் பெற்ற கணேசர், அதிவேகமாக கிளம்பி, அக்னி கோட்டை முழுவதும் தேடி அங்கே பதிந்திருந்த விக்ன யந்திரத்தை தனது தந்தத்தினால் ஒரு நொடியில் தூள் தூளாக்கினார்.

அங்கிருந்த துஷ்ட தேவதைகளும் அழிந்தனர். உடனே சக்திகள் அனைவரும் உற்சாகம் அடைந்து யுத்தத்திற்கு ஆயத்தமானார்கள்.

(காமேஸ்வர முகாலோக கல்பித ஸ்ரீகணேஸ்வரா
மஹாகணேச நிர்பின்ன விக்னயந்த்ர பிரஹர்ஷிதா – லலிதா சஹஸ்ரநாமம்)

                                                                                                                                                                        தொடரும்…

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.