அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 47)

0 8

பண்டனின் ஆணைப்படி விசுக்ரன் விக்ன யந்திரம் ஒன்றை அக்னி கோட்டையில் எவரும் காணாத நேரத்தில் ஸ்தாபித்தான்.

அதன் பிரபாவத்தினால் சக்திகள் யுத்தம் செய்ய விருப்பமின்றி அயர்ந்து தூங்க ஆரம்பித்தனர். அந்நேரத்தில் விசுக்ரன் சக்திகளை தாக்க,

ஸ்ரீலலிதை ஸ்ரீகணேசரை தோற்றுவித்து விக்ன யந்திரத்தை தவிடுபொடியாக்குகிறாள்.

இனி : ஸ்ரீகணேசரின் பராக்கிரமம்,விக்ன யந்திரம் அழிந்ததையடுத்து, சக்திகள் பீடை நீங்கி, உற்சாகம் அடைந்து யுத்தத்திற்கு ஆயத்தமானார்கள்.

கணேசரும் தம்மை போல பலரை படைத்தார். ரித்தி முதலிய சக்திகளால் சேவிக்கப்பட்ட ஸமோதர், பிரமோதர், ஸுமுகர், துர்முகர், விக்னர், விக்னகர்த்தா என 6 சேனாதிபதிகள்,

7 கோடி ஹேரம்பர்களுக்கு தலைவர்களாக போர்க் கோலத்துடன், வீர அட்டகாசம் செய்து கொண்டு அக்னி கோட்டையிலிருந்து வெளியே கிளம்பினார்.

30 அக்ஷௌஹிணி சேனையுடன் வந்திருக்கும் விசுக்ரன் மீது பாணங்களை வர்ஷித்தனர்.

உலகெலாம் செவிடு படும்படி வீறிட்டு கொண்டு கணேச கணங்கள் அசுரர்கள் மீது பாய்ந்தனர். கணநாதரது ரதங்கள் தைத்ய சேனையை சூழ்ந்து கொண்டனர்.

கணேச கணங்கள் எதிரிகளை துதிக்கையால் வளைத்து பிடித்து, கூரிய தந்தங்களால் குத்தி கொன்றனர்.

காதுகளின் காற்றாலும், மூச்சுக் காற்றாலும் எதிரிகளை சிதறடித்தனர். மலை போன்ற மார்பினாலும், தூண்கள் போன்ற கால்களாலும், சூலம், சக்கரம் போன்ற ஆயுதங்களாலும் பகைவரை கொன்றனர்.

புழுதி மட்டுமே மிகுந்து தனது சேனைகள் அழிந்தது கண்டு கடுஞ்சினம் கொண்ட விசுக்ரன் கணேசரோடு போரிட கஜாசுரனை ஏவினான்.

7 அக்ஷௌஹிணி சேனையுடன் வரும் கஜாசுரனோடு கணேசர் கடும்போர் புரிந்தனர்.

தனது வலிமை குறைவதையும், உற்சாகமாக போர் புரியும் கணேசருடைய பலம் மென்மேலும் அதிகரிப்பது கண்டு விசுக்ரன் ரணகளத்தை விட்டு ஓடினான்.

மூஷிக வாகனத்தில் அமர்ந்த விநாயகர் ஒருவரே கஜமுகாசுரனை சேனையுடன் கொன்றழித்தார். அசுரர்களுக்கு காளராத்திரியான அந்த இரவும் கழிந்தது.

போர் முடிந்ததும் உடனே கணபதி, தேவியிடம் சென்றார். ஸ்ரீலலிதா தேவி மிகவும் மகிழ்ச்சி அடைந்து சகல தேவதைகளையும் பூஜிக்கும் முன் விநாயகருக்கு முதல் பூஜை நடத்தும் படி வரம் அளித்தாள்.
தொடரும்…

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.