அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 48)

0 6

 தனது சகோதரன் முறியடிக்கப்பட்டதை கேள்வியுற்ற பண்டன் சிந்தை நொந்து 104 அக்ஷௌஹிணி சேனைகளுடன் விசுக்ரன் மற்றும் விஷங்கனை போருக்கு அனுப்பினான்.

பண்டனின் சகோதரியான தூமினிக்கு பிறந்த உலூகஜித் முதலிய 10 மஹாவீரர்கள் அவனை பின்தொடர்ந்தனர்.

ஸ்ரீலலிதையின் ஆணைப்படி மந்திரிணியும், தண்டினியும் தங்கள் ரதத்தின் மீதேறி அப்சரஸ்கள் ஆட, விசுக்ர, விஷங்கனை எதிர்த்து யுத்தம் செய்ய வந்தனர்.

ஸ்ரீசக்ரராஜ ரதத்தை ரக்ஷிக்க 100 அக்ஷௌஹிணி சேனைகளை வைத்து விட்டு மற்ற எல்லா சேனைகளையும் அழைத்துக் கொண்டு,

தண்டநாதை சேனைகளின் முன்னின்று ஒரு கைவிரலில் கலப்பையையும், இன்னொன்றால் உலக்கையையும் சுற்றி கொண்டு,

இங்குமங்கும் சஞ்சரிக்கும் சேனைகளை கவனித்து யுத்தத்திற்கு ஆயத்தமாக நின்றாள். அவளைத் தொடர்ந்து மந்திரிணியும் அம்பை கரத்திலெடுத்து சுழற்றினாள்.

பல வர்ணமான சக்திகள் எண்ணாயிரம் அக்ஷௌஹிணி சக்திகள் தேவிகளை சூழ்ந்தனர்,யுத்தம் ஆரம்பமானது. தண்டநாதை விஷங்கனுடனும், மந்திரிணி விசுக்ரனுடனும், அஸ்வாரூடா உலூகஜித்துடனும்,சம்பத்கரீ புருஷேணனுடனும், நகுலீ விரஷேணனுடனும், மஹாமாயை குந்திஷேணனுடனும், ஒரு தேவி குருஷகனுடனும்,உன்மத்த பைரவி மலதனுடனும், லகுச்யாமா குருசனுடனும், ஸ்வப்நேசீ மங்களனுடனும்,வாக்வாதினீ திருகணனுடனும், சண்டகாளி கோல்லாடனுடனும், சக்தி அக்ஷௌஹிணி தைத்ய அக்ஷௌஹிணி சேனையுடனும் கலந்து யுத்தம் செய்தனர்.

விசுக்ரன் தன் சேனை பலங்குன்றி வாடுவதையும், சக்திகள் உற்சாகமாக போரிடுவதை கண்டு ஆக்ரஹத்துடன் வில்லை வளைத்து தாகத்தை உண்டாக்கும் தர்ஷாஸ்திரத்தை பிரயோகித்தான்.

அவ்வஸ்திரத்தின் பிரபாவத்தினால் சக்திகளை தாகமானது காட்டுத்தீ போல தாக்கியது. அதனால் சக்திகள் மூன்றாம் நாள் யுத்தத்தில் ஒரு யாமம் ஆனபோது, சக்திகள் உதடுகள் உலர்ந்து, இந்திரியங்கள் சோர்ந்து, அஸ்திர, சஸ்திரங்கள் கீழே விழுந்து அவனியில் சாய்ந்தனர்.
இந்த மஹாதாபத்தினை கண்ட மந்திரிணி, தண்டினியை பார்த்து, “இந்த துஷ்ட தைத்யர்களின் செயலலிருந்து சக்திகளை காக்க உபாயம் தேட வேண்டும்” எனக் கூறி யோசித்தாள்.

உடனே மந்திரிணி தண்டினியிடம், “உனது ரத பர்வாவில் உள்ள மது சமுத்திரத்தை சக்திகளின் தாகத்தை அடக்க கட்டளையிடு!”

“வெறும் தண்ணீரால் இவர்கள் தாகம் அடங்காது. அந்த கடலே சக்திகளை மகிழ்விப்பது மட்டுமன்றி அவர்களுக்கு போரில் உற்சாகம் ஊட்டும்” என்று கூறியவுடன் தண்டினியும் அவ்வாறே செய்தாள்.

மதத்தினால் சிவந்த கண்களுள்ளதும், ஸ்வர்ண கமல மாலை அணிந்ததுமான அக்கடல் பல வண்ணங்களில் பலவிதமான மதுவை கோடி கோடியாக வர்ஷித்தது.

அதன் நறுமணமானது இறந்தவரை பிழைப்பிக்கும், பலமற்றவனை பலசாலியாக்கும்.

அபரிமிதமான மத்ய தாரைகளை ஒரு முகூர்த்த காலம் பருகிய சக்திகள் தாகம் அடங்கி உற்சாகமாக எழுந்தனர்.

இந்த தாரையானது அசுர சேனையின் அருகே செல்லாத வண்ணம் கதம்பவனவாஸினி எனும் சக்தி அழகிய ஒரு கோட்டையை அமைத்தாள்.

பின்னர் மதுக்கடல் திவ்ய வடிவெடுத்து தண்டநாதையை வணங்கி நின்றது. மதுக்கடலால் சக்திகள் உற்சாகம் அடைந்ததை அடுத்து மிகவும் மகிழ்ந்த தண்டினி அவளுக்கு யாகங்களில் இடம்பெறும் வரமளித்தனள்.

யுத்தம் மீண்டும் துவங்கியது. புதிய மதுவினால் மதங்கொண்ட சக்திகள் சத்ரு சேனையை நாசம் செய்தனர்.

ஒரு அக்ஷௌஹிணி சேனையை தண்டினி ஒருத்தியாகவே அழித்தாள். 150 அக்ஷௌஹிணி சேனைகளை மந்திரிணி அழித்தாள்.

அஸ்வாரூடா, சம்பத்கரீ முதலிய சக்தி சேனாநாயிகைகள் தூமினியின் புதல்வர்களையும், 150 அக்ஷௌஹிணி சேனைகளை அழித்தனர். சூரிய அஸ்தமனத்தில் சமஸ்த சேனைகளும் அழிந்தது.

சினங்கொண்ட சியாமளா தேவி, விசுக்ரனுடன் தேவர்களும் அஞ்சும்படி கடும் போர் புரிந்தாள்.
மிக உக்ரமான விசுக்ரனது ஆயுதங்களையும், கொடியையும், சாரதியையும், வில்லின் நாணையும், தண்டத்தையும் துண்டு துண்டாக கண்டித்தாள்.

அக்னி போல ஜொலிக்கும் “பிரமசிரஸ்” என்னும் அஸ்திரத்தால் அவன் உடலை அறுத்து அழித்தாள்.

மதத்தினால் கம்பீரமான தண்டநாதையும் தனது உக்ரமான முஸலாயுதத்தால் அடித்து விஷங்கனுடன் கடும்போர் புரிந்தாள்.

பாதியிரவு வரையில் யுத்தம் செய்த தேவி கடுஞ்சினம் கொண்டு அவனை கொல்ல கருதினாள்.
உடனே அவன் தலை மீது ஆழப்பதியும்படி கலப்பையை எறிந்து அவனை அதன் மூலமாக இழுத்து உலக்கையால் ஓங்கி அறைந்தாள்.

அவனது தலை சுக்கல் சுக்கலாகி, அவன் உயிரற்று பூமியில் விழுந்தான். இத்தகைய பெருங்காரியத்தை செய்து விட்டு மந்திரிணியும், தண்டினியும் அன்றைய இரவை அங்கேயே கழித்தார்கள்.
தொடரும்…

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.