அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 49)

0 9

 தனது சகோதரர்களான விஷங்கன் மற்றும் விசுக்ரனை தனது மருமக்களுடன் போருக்கு அனுப்பினான் பண்டன்.

 ஸ்ரீலலிதையின் ஆணைப்படி மந்திரிணியும், தண்டினியும் விஷங்கன் மற்றும் விசுக்ரனை வதைத்தனர்.

பண்டனின் மருமக்களை அஸ்வாரூடா முதலிய சேனாநாயிகைகள் அழித்தனர்.

இனி : ஸ்ரீலலிதை பண்டனுடன் போர் புரிதல்

அகத்தியர் : ஹே அஸ்வானநா! மந்திரிணியின் பலம், தண்டநாதையின் வீரம் அவர்கள் செய்த வதம் பற்றி நன்கு உரைத்தீர்,இனி ரணகளத்தில் ஸ்ரீதேவியின் பராக்ரமத்தை கேட்க ஆவலாக உள்ளேன்.

ஹயக்ரீவர் : அறிவில் சிறந்தவனே! சர்வ பாபங்களை அகற்றுவதும், அணிமாதி சித்திகளை தருவதும், புண்ணியமானதுமான ஸ்ரீலலிதையின் சரிதத்தை கேள்!
பண்டன் ரணகளம் புகுதல் ரணத்தில் உற்சாகமான தனது சகோதரர்கள் கொல்லப்பட்டதை கேள்வியுற்ற பண்டன் கதறினான்.

 பலமுறை வாய்விட்டு கதறி அழுதான். குடிலாக்ஷன் அவனை பலமுறை பலவாறாக சமாதானம் செய்தான்.

 பின்னர் கோபத்தினால் கண்கள் சிவந்து, குடிலாக்ஷனை பார்த்து, “எந்த துஷ்டையால் புதல்வர்களையும், சகோதரர்களையும், ஆயிரக்கணக்கான சேனாதிபதிகளையும் இழந்தேனோ, அவளை அழித்தே தீருவேன்.”

“ரே குடிலாக்ஷா! சேனைகளை தயார் செய்” எனக் கூறி, கவசத்தை அணிந்து, பாணங்களை எடுத்து கொண்டு, கடினமான வில்லை ஏந்திக் கொண்டு காலாக்னி போல நகரை விட்டு கிளம்பினான்.

4 துவாரங்களில் நின்றிருந்த தாளஜங்கன் முதலிய வீரர்களும், 35 சேனாதிபதிகளும், குடிலாக்ஷனும் 40 சேனாவீரர்களும் சேர்ந்து வர, 2185 அக்ஷௌஹிணி சேனைகளுடன்
பண்டன் நகரை விட்டு கிளம்பிய போது, சூன்யக நகரம் சூன்யமாகவே இருந்தது. பெண்கள் மட்டுமே இருந்தனர்.

 பண்டன் ஆபிலம் என்னும் சிறந்த ரதத்தில் அமர்ந்தான். அதை ஆயிரம் சிம்மங்கள் இழுத்து சென்றது. அவன் கையில் யாதனை என்னும் கத்தி ஜொலித்தது.

 பண்டனின் சேனைகளுக்கு பூமியில் இடம் போதாததால் சிலர் ஆகாய மார்க்கமாக புறப்பட்டனர். சிலர் பூமியில் நடப்பவரின் தோள் மீது நின்று சென்றனர்.

 திக்குகளிலும், பூமண்டலத்திலும், ஆகாயத்திலும் அந்த ஸைன்யங்கள் அடங்கவில்லை. ஒருவர் மீது ஒருவர் உராய்ந்து கொண்டே, மிகுந்த சிரமத்துடன் சேனைகள் கிளம்பின.

 மிக நெருக்கமாக இருந்ததால் சிலர் தேர் சக்கரங்களிலும், சிலர் யானையின் கால்களிலும் அகப்பட்டு விழுந்தனர்.

 இப்படி ஸைன்யங்கள் கிளம்பும் போது, பண்டனின் முகத்திலிருந்து பேரிடி போன்ற கடோரமான சிம்மநாதம் கேட்டது. அது ஜகத்தையே பிளந்தது.

 சமுத்திரங்களும் உலர்ந்தன. சந்திர, சூரியர்கள் பயந்தோடினர். நட்சத்திரங்கள் ஆகாயத்திலிருந்து உதிர்ந்தது. பூமி ஊசலாடியது.

 திக்கஜங்கள் திகைத்தன. வானவர் மூர்ச்சித்தனர். யானைகளும், குதிரைகளும் சிரமப்பட்டு பிழைத்தது.

 சக்திகளும் திடீரென பயத்தால் வாடினர். பயத்தில் நழுவிய ஆயுதங்களை சக்திகள் மீண்டும் கையிலேந்தினர்.

 அக்னி கோட்டையும் ஒரு நொடி அவிந்து மீண்டும் ஜ்வலித்து நின்றது. பண்டனின் சிம்மநாதத்தினாலும், யோதர்களுடைய கூக்குரலாலும், உலகம் சப்தமயமாய் இருந்தது.

 அந்த பெரும் சப்தத்தினால் பண்டாசுரன், தானே வருகிறான் என நிச்சயித்து ஸ்ரீலலிதா தேவியும் தானே யுத்தத்திற்கு கிளம்பினாள்.

 மற்ற சக்திகளால் அவனுடன் பெரும் போர் புரிய முடியாதென்று எண்ணி துஷ்ட பண்டனுடன் சண்டை செய்ய தேவியே ஆரம்பித்தாள்.
தொடரும்…

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.