அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 50)

0 15

 தனது சகோதரர்கள், புத்திரர்கள் மற்றும் முக்கிய சேனாதிபதிகள் முறியடிக்கப்பட்டதை அடுத்து, பண்டன் தானே யுத்தம் செய்ய வருகிறான்.

அதனால் உலகம் நடுங்கியது. இதை உணர்ந்த ஸ்ரீலலிதையும் தானே யுத்தம் செய்ய வருகிறாள்.

இனி : ஸ்ரீலலிதை ரணகளம் புகுதல்,ஸ்ரீசக்ரராஜ ரதம் கிளம்பிற்று. அது 4 வேதங்களை சக்கரங்களாக கொண்டது. 4 விதமான புருஷார்‍த்தங்களே குதிரைகளாக உடையது. ஆனந்தமே அதற்கு த்வஜம்.

 அதில் 9 பர்வாக்களிலும் உள்ள சக்திகள் பல்லாயிரக்கணக்கான பரிவார சக்திகளுடன் மிகப் பெரிய வில்லை கையிலேந்தி அதனை 4 புறங்களிலும் ரக்ஷித்து வருகின்றனர்.

 அது 10 யோஜனை உயரமும், 4 யோஜனை அகலமும் உள்ளது. மஹாராக்ஞியின் சக்ரராஜ ரதம் செல்லும் போது,

 அதற்கு முன் கேயசக்கரமும், அதற்கு பின் கிரிசக்ரமும் சென்றன. மற்ற சக்திகளும் பல்வேறு வாகனங்களில் அமர்ந்து பண்டாசுர யுத்தத்தில் ஊக்கமுள்ளவர்களாக சென்றனர்.

 உலக க்ஷேமத்திற்காக உண்டான ஸ்ரீஜகன்மாதா உக்ர பிரதாபத்துடன் அக்னி கோட்டை வாயில் வழியாக வெளியே கிளம்பினாள். ஸ்ரீரதத்தின் முத்துக் குடை மிகப் பிரகாசமாக விளங்கியது.

 அச்சமயம் தேவதுந்துபிகள் முழங்கின. பூமாரி பொழிந்தது. ஸ்ரீதேவியின் ஜயத்தை காட்டக்கூடிய பற்பல சுபசகுனங்கள் சக்தி சேனையில் தோன்றின.

 அசுர சேனையில் பற்பல அபசகுனங்கள் தோன்றின. பிறகு இரு சேனைகளுக்கும் இடையில் மிகவும் கடுமையான பயங்கர யுத்தம் தோன்றியது.

 எங்கும் ரத்த ஆறு ஓடியது. பாண கூட்டங்களால் உலகெலாம் இருள் சூழ்ந்தது. சக்திகளுடைய சரங்களால் அசுரர்களின் குடை அறுபட்டு விழுந்தன.

 ஆகாயமோ, பூமியோ எதுவும் தென்படவில்லை. எங்கும் சேனைகள் கிளப்பிய புழுதியே காணப்பட்டது.

 இரு சேனைகளுக்கும் நடந்த கடும் போரில் அறுபட்ட குடைகள் வெண்தாமரை போன்று காணப்பட்டது. அறுந்து விழுந்த யானைகளின் கால்கள் ஆமைகள் போலவும்,

 அறுந்த மதகஜங்களின் தலைகள் மலை போலவும், காம்பறுந்து விழுந்த சாமரங்கள் நுரை போலவும், அசுரர்கள் தலைமயிர் பாசி போலவும், கண்கள் முத்துச்சிப்பிகள் போலவும் காட்சியளித்தது.

 இங்ஙனம் யமனுக்கும் பயத்தை தரும்படியான பயங்கர யுத்தம் நடந்தது. நான்காம் நாள் காலை முதல் 2 யாமங்கள் நடந்த போர் மிகக் கடுமையாகவும், பயங்கரமாகவும் இருந்தது.

 அதன் பிறகு, ஸ்ரீலலிதைக்கும், பண்டனுக்கும் யுத்தம் ஆரம்பமானது. ஸ்ரீதேவியின் கரங்கள் எப்பொழுதும் பாணங்களை எடுப்பதும், தொடுப்பதுமாகவே காணப்பட்டது.

 ஸ்ரீமஹாராக்ஞியின் பாணங்கள் வில்லில் சேர்க்கும் போது ஒன்றாகவும், கிளம்பும் போது பத்தாகவும், ஆகாயத்தில் ஆயிரமாகவும், அசுரர்கள் மீது கோடியாகவும் பெருகியது.

 பாணங்களினால் ரணகளத்தை இருளாக்கி, ஆகாயத்தையும் மறைத்து, அசுரனது மாயைகளை பிளந்தாள்.

                                                                                                                                                                        தொடரும்…

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.