அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 52)

0 15

அனைவரையும் இழந்த பண்டன் இறுதியில் தானே ரணகளம் புகுகிறான். இதை உணர்ந்த ஸ்ரீலலிதையும் தானே யுத்தம் செய்ய வருகிறாள்.

இருவரும் பல்வேறு விதமான திவ்யாஸ்திரங்களை பிரயோகிக்கின்றனர். பண்டனின் அனைத்து முயற்சிகளையும் அன்னை முறியடிக்கிறாள்.

இனி : ஸ்ரீலலிதையும் பண்டனும் திவ்யாஸ்திரம் விடுதல் – தொடர்ச்சி

அதன் பிறகு, கட்டிலடங்காத “மஹாஸுரா” அஸ்திரத்தை பண்டாசுரன் பிரயோகித்தான்.

 அதிலிருந்து மகத்தான சரீரம் கொண்ட மது, கைடபன், மஹிஷாசுரன், தூம்ரலோசனன், சண்டமுண்டாதிகள், சும்பன், நிசும்பன் முதலிய மஹாசுரர்கள் தோன்றி, சக்தி சேனைகளை நாசம் செய்தனர்.

 அசுரர்களால் அடிக்கப்பட்ட சக்திகள் “ஆ காப்பாற்று, சீக்கிரம் காப்பாற்று!” என லலிதா தேவியை சரணடைந்தனர்.

 இதனால் மிகவும் கோபம் கொண்டு, ரோஷத்தால் அட்டகாசம் செய்தாள். அதன் காரணமாக, சகல தேவர்களின் தேஜஸ்ஸினால் உண்டான துர்கா தேவி தோன்றினாள்.

 சமஸ்த தேவர்களிடமிருந்தும் ஆயுதங்களையும், ஆபரணங்களையும் பெற்று கொண்ட துர்கை சிம்மத்தின் மீதேறி வந்து மஹிஷாசுரன் போன்ற அசுரர்களை

 துர்கா சப்தசதீயில் எப்படி வர்ணிக்கப்பட்டுள்ளதோ (Ref: மார்க்கண்டேய புராணம்) அவ்வாறே அற்புதமாக போர் புரிந்தனள். மிக கடினமான அந்த காரியத்தை செய்து முடித்து விட்டு, லலிதையை நமஸ்கரித்து நின்றாள்.

 பின்னர் பண்டன் “மூகாஸ்திரம்” என்னும் ஊமையாக்கும் அஸ்திரத்தை பிரயோகித்தான். ஜகதாம்பிகை அதனை “மஹாவாக்வாதினி” என்னும் அஸ்திரத்தால் அகற்றினாள்.

 பண்டாசுரன் வித்யாவடிவான வேதங்களை கொள்ளை கொள்ளும் அசுரர்களை உண்டாக்கினான்.

 மஹாராக்ஞியின் வலது கை பெருவிரல் நகத்திலிருந்து தோன்றிய மஹாமத்ஸ்ய வடிவங்கொண்ட ஸ்ரீமந் நாராயணன் ஸோமுகன் முதலிய அசுரர்களை கொன்று சென்றார்.

 அதன் பிறகு பண்டன் சமுத்ராஸ்திரத்தை விட, சக்திகள் அனைவரும் அந்த பிரவாகத்தில் மூழ்கிட,

 மஹாராக்ஞியின் வலது கை ஆட்காட்டி விரல் நகத்திலிருந்து ஆதிகூர்மம் தோன்றி, 10,000 யோஜனை தூரமுள்ள அதன் விசாலமான ஓட்டில் சக்திகளை தாங்கி நின்றது.

 பிறகு பண்டன் இரண்யாக்ஷ மஹாஸ்திரத்தை விட்டான். அதிலிருந்து ஆயிரக்கணக்கான கதைகளைக் கொண்டு யுத்தம் செய்யும் ஆயிரக்கணக்கான அசுரர்கள் சக்திகளை அடித்து துன்புறுத்தினர்.

 அதற்குள் ஸ்ரீலலிதையின் நடுவிரல் நகத்திலிருந்து கைலாயம் போன்ற வெண்மையான மஹாவராகம் தோன்றியது. அது அவ்வசுரர்களை கொன்று நாசம் செய்தது.

 கடுஞ்சினங்கொண்ட பண்டன் புருவத்தை நெறிக்க, அதிலிருந்து பல ஹிரண்யகசிபுகள் தோன்றி சக்திகளை நாசம் செய்தனர். பிரகலாதனையும் பீடித்தனர்.

 பரமானந்த லக்ஷணமான சக்திகளின் சந்தோஷமே பிரகலாதன் என்னும் சிறுவனாகி அன்னையை சரணடைய, அவளுக்கு கருணை பிறந்தது.

 உடனே தேவி தனது மோதிர விரல் நுனியை உதறினாள். அதிலிருந்து பிடரியை சிலிர்த்துக் கொண்டு, நரசிம்மர் தோன்றி, அவள் ஆணைப்படி சகல ஹிரண்யகசிபுகளையும் மிக குரூரமாக நகங்களால் கிழித்தெறிந்தது.

 சர்வ தேவதைகளையும் நாசம் செய்வதும், மிக குரூரமானதுமான பலீந்த்ராஸ்திரத்தை ஸ்ரீலலிதையின் மீது பிரயோகித்தான்.

 அதன் கர்வத்தை அடக்க, காமேஸ்வரியின் வலது கை சுண்டுவிரல் நகத்திலிருந்து தோன்றிய வாமனர்கள் அனைத்து அசுரர்களையும் பாசத்தால் கட்டினார்கள்.

                                                                                                                                                                        தொடரும்…

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.