அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 53)

0 18

 துஷ்ட பண்டன் அன்னைக்கு எதிராக மஹாஸுராஸ்திரத்தை பிரயோகிக்க, அதிலிருந்து மது கைடபன், மஹிஷாசுரன் போன்ற பல அசுரர்கள் தோன்றிட, அவற்றை எல்லாம் துர்கை தோன்றி அழித்தாள்.

 இன்னும் பல அசுரர்களை அவன் தோற்றுவிக்க தேவியானவள் விஷ்ணுவின் அவதாரங்களை தோற்றுவித்து அழிக்கிறாள்.

 இனி :ஸ்ரீலலிதை பண்டனுடன் திவ்யாஸ்திரம் விடுதல் – தொடர்ச்சி பின்னர் பண்டன் ஹைஹயாஸ்திரத்தை பிரயோகித்தான். அதிலிருந்து கோடி கோடியாக கார்த்தவீர்யார்ஜுனர்கள் தோன்றினர்.

 அதற்குள் ஸ்ரீதேவியின் இடது கை பெருவிரல் நகத்திலிருந்து தோன்றிய பரசுராமர் கடோரமான கோடரியால் அந்த அர்ஜூன கூட்டத்தை ஒரு நொடியில் நாசம் செய்தார்.

 கோபம் கொண்ட பண்டன் ஒரு ஹூங்காரம் செய்தான். அதிலிருந்து 1000 அக்ஷௌஹிணி சேனையுடன் 20 கரங்கள் கொண்ட ராவணன் தோன்றி கும்பகர்ணன், மேகநாதனுடன் கூடி சக்திகளை வெகு தூரம் நாசம் செய்தான். அதற்குள் ஸ்ரீதேவியின் ஆட்காட்டி விரல் நகத்திலிருந்து கோதண்ட ராமர் லக்ஷ்மணனுடன் தோன்றி அவர்களை அழித்தனர்.

 பண்டன் மஹா பயங்கரமான த்விவிதாஸ்திரத்தை விட அதிலிருந்து ஹனுமானுக்கு சமமான பலம் வாய்ந்த வானரங்கள் தோன்றி சக்திகளை நாசம் செய்தது.

 பிறகு, ஸ்ரீலலிதையின் இடது கை நடுவிரல் நகத்திலிருந்து தோன்றிய பலராமர் அவ்வனைத்து வானரங்களையும் நாசம் செய்தார்,பிறகு பண்டன் ராஜாஸுராஸ்திரத்தை பிரயோகிக்க, அதிலிருந்து கம்சன், சிசுபாலன், தந்தவக்த்ரன் என்று பல அசுரர்கள் தோன்றினர்.
அவ்வெல்லா அசுரர்களையும் அழிக்க, ஸ்ரீ வாசுதேவன், ஸ்ரீதேவியின் இடது கை மோதிர விரல் நகத்திலிருந்து தோன்றினார்.

 அவர் தம்மை வாசுதேவன், சங்கர்ஷணன், பிரத்யும்னன், அநிருத்தன் என 4 வியூகங்களாக பிரித்துக் கொண்டு, அவர்கள் அனைவரையும் அழித்தனர்.

 பின்னர் சினங்கொண்ட பண்டன், தர்மத்தை அழிக்கும்படியான கலி அஸ்திரத்தை பிரயோகித்தான்.

 அதிலிருந்து ஆந்திரர், புண்ட்ரர், மூர்த்திஜர், கிராதர், சபரர், ஹூணர் யவனர் முதலிய பாபிகள் தோன்றி ஹிம்சை செய்தனர்.

 பின்னர் ஸ்ரீலலிதையின் இடது கை சுண்டுவிரல் நகத்திலிருந்து கல்கி என்ற பெயரில் ஜனார்த்தனர் குதிரை மீது அமர்ந்தபடி தோன்றி ஓர் அட்டகாசம் செய்தார்.

 இடி விழுந்தது போன்ற அவரது த்வனியினால் பாபிகள் அனைவரும் மூர்ச்சையாகி இறந்தனர். இது கண்டு சக்திகள் மிகவும் ஆனந்தமடைந்தனர்.

 இங்ஙனம் தசாவதார நாயகர்கள் தோன்றி அரிய காரியங்களை செய்த பிறகு, அன்னையை பணிந்து நின்றனர்.

 ஸ்ரீதேவி, அவர்களை நோக்கி, “இவ்வாறு ஒவ்வொரு கல்பத்திலும் மத்ஸ்யாதி அவதாரங்களால் தர்மத்தை ரக்ஷியுங்கள்” என்று கூறி அனுமதி அளிக்க அனைவரும் வைகுண்டத்திற்கு கிளம்பினர்.

(கராங்குலி நகோத்பன்ன நாராயண தசாக்ருதி – லலிதா சஹஸ்ரநாமம்)
தொடரும்…

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.