அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 57)

0 13

பண்டாசுரனை வதைத்த அம்பிகையை அண்ட சராசரமும் கண்டு ஸ்தோத்திரம் செய்து வணங்கியது.

இனி : பிரம்மாதிகள் செய்த ஸ்ரீலலிதா ஸ்துதி – தொடர்ச்சி

பண்டாசுரனது சேனைக்கு காட்டுத்தீ போல பாணங்களினால் பாதுகாக்கப்பட்டவளே! புதிய தேஜஸ்ஸினால் கடலை ஜ்வலிக்கும் படி செய்பவளே! நாற்புறமும் உனக்கு நமஸ்காரம்!

காமேஸ்வரி, பகமாலினீ, வஜ்ரேஸ்வரி என்னும் மூன்று வடிவமாய் உள்ளவளே! திறமையுள்ளவளே! கலா வடிவானவளே!

தைத்ய சேனைகளை அழிப்பதில் சாமர்த்தியம் உள்ளவளே! காமேஸ்வரர் மனைவியே! கமலையே! உனக்கு நமஸ்காரம்!

பிந்துவிலிருப்பவளே! பிந்து கலைகளின் ஐக்கிய வடிவானவளே! பிரம்மஸ்வரூபியே! சித்பிரகாசத்தை பெருக்குபவளே!

பெரிய ஸ்தனங்களிடையே ஒளிக்கும் ஹாரமுடையவளே! பெரிய பிரபாவமுள்ளவளே! வரதே! உனக்கு நமஸ்காரம்!

காமேஸ்வரரது மடி மீது சதா வசிப்பவளே! கால வடிவானவளே! தயை நிறைந்தவளே! கல்பத்தின் முடிவில் காளியின் ரூபத்தை தரிப்பவளே! காமத்தை அளிப்பவளே! கற்பகவல்லியே! உனக்கு நமஸ்காரம்!

எங்கும் சிவந்த நிறமுடையவளே! கனமான அமிர்தம் போல சீதளமாய் இருப்பவளே! குட்டி மானின் கண்களைப் போல அழகிய கண்களை உடையவளே!

தாமரை போன்ற முகமுள்ளவளே! சாரமான ஒவ்வொன்றிற்கும் இருப்பிடமானவளே! சமஸ்த வித்யைகளுக்கும் ஈஸ்வரியே! உனக்கு நமஸ்காரம்!

சிதக்னியிலிருந்து தோன்றியவளும், மஹா சம்புநாதரால் பிரகாசப்படுத்தப்பட்டவளுமான சுந்தரியே!

லோக கண்டகர்களாகிய பண்டாசுரன் முதலிய அசுரர்கள் உனது பிரபாவத்தினால் போரில் கொல்லப்பட்டனர்.

வித்வான்களால் அடையத்தக்க சுந்தரமான தேவியே! உனது பரிபூரண கர்ணாம்ருதத்தால் நாங்கள் புதிய உடலை பெற்றோம். உன்னால் சமஸ்த புவனமும் சந்தோஷமாக பிழைப்பிக்கப்பட்டது.

உயர் மனம் கொண்டவளே! சதி தேவியின் பிரிவால் பரமசிவன் வைராக்கியம் கொண்டு, போகங்களைத் துறந்து தவம் செய்கிறார்.

பார்வதி தேவியை அவரிடம் சேர்க்க எண்ணி, மன்மதனை அவரிடம் அனுப்பினோம். இதனால் கோபம் கொண்ட ருத்ரன், அவனை பஸ்மமாக்கினார்.

அதிலிருந்து பிறந்தவன் தானே இந்த பண்டாசுரன். அவனை தாங்கள் போரில் வதைத்தீர்கள். எங்களுக்காக தனது உடலை நீத்த மன்மதனை மீண்டும் எழுப்ப வேண்டும்.

மன்மதனின் பிரிவால் பரிதவிக்கும் வைதவ்ய துக்கத்தை அடைந்திருக்கிறாள். தாங்கள் மன்மதனை எழுப்பினால் ரதியும் மகிழ்வாள்,

ருத்ரனும் உமையவளை மணந்து தேவசேனாதிபதியான குமரனை பெற்று, தாரகனை வதைத்து எங்களை காப்பார்.

ஆதலால், “ஹே திரிபுரையே!ஜனங்களுக்கு ஆனந்தத்தை அளிக்கும் வீரரில் சிறந்த மன்மதனை பிழைப்பித்து, உன்னையே சரணடைந்த ரதி தேவிக்கு அருள் புரிவாயாக!” என்றனர்.

ஹயக்ரீவர் : பிரம்மாதி தேவர்கள் இங்ஙனம் மகேஸ்வரியை துதித்து, சோகத்தாலும், துக்கத்தாலும் தவித்து வாடியுள்ள ரதியை தேவிக்கு காண்பித்தனர்.

                                                                                                                                                                        தொடரும்…

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.