ஆண்டாளின் அவதார  திருநாள்  ஆடிப்பூரம்

0 303

 ஆடிப்பூர தினத்தில் ஆண்டாள் பிறந்ததாக சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. ஆடி மாதம் சூரியன், கடக ராசியான சந்திரன் வீட்டிலும், சந்திரன், சூரியனின் ராசியான சிம்மத்திலும் இடம் பெயர்ந்த போது, நள வருடம், சுக்ல பட்சம், சதுர்த்தசி, பூர நட்சத்திரம் கூடிய சனிக்கிழமையன்று துளசி மாடத்தினருகில் பெரியாழ்வாரால் கண்டெடுக்கப்பட்டவள் ஆண்டாள். ஆண்டாளின் இயற்பெயர் கோதை. வடமாநிலங்களில் ‘கோதாதேவி’ என்று அழைப்பர்.

 ஆண்டாள் அவதரித்த திருத்தலமான திருவில்லிபுத்தூரை,  ‘கோதாதேவி அவதார ஸ்தலம்’ என்றும் அழைப்பதுண்டு. இதனால் ஆடிப்பூரத்தன்று திருவில்லிபுத்தூர் உள்ளிட்ட வைணவ கோயில்களில் ஆண்டாளுக்கு சிறப்பு பூஜை நடைபெறும். வைணவ கோயில்களிலும் திருவாடிப்பூரம் 10 நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகின்றது. இந்நாளில் திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் தேரோட்டமும் நடைபெறும். மங்கலமான இந்நாளில் திருமணமாகாத பெண்கள் ஆண்டாளை வணங்கினால், விரைவில் திருமணமாகும் என்பது நம்பிக்கை. மேலும் அம்மன் ஆலயங்களுக்கு சென்று மனதார வணங்கினால், மனம் போல் மாங்கல்யம், புத்திர பாக்கியம் கிடைக்கும். புனிதமான இந்த தினத்தில் அம்பிகை பூப்பெய்தினாள் என்றும் புராணங்கள் கூறுகின்றன. அன்றைய தினம் அம்பிகைக்கு, தங்கள் வீட்டு பெண் போல் வளைகாப்பு வைபவமும், பூப்பெய்தல் சடங்கும் நடத்தி பக்தர்கள் வழிபடுவார்கள். மேலும், சித்தர்கள், யோகிகள் இந்நாளில் தவத்தை துவக்குவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

ஆடி மாதத்தில் ‘பூரம்’ நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் தினமே ஆடிப்பூரம். இது அனைத்து அம்மனுக்கும் உரிய திருநாளாக போற்றப்படுகிறது. மனிதர்களை இன்னல்களில் இருந்து மீட்பதற்கு, உலகத்தை காக்கும் அன்னை  தோன்றிய நாளே ஆடிப்பூரம் என்று அழைக்கப்படுவதாக ஆன்மிக பெரியோர்கள் கூறுவதுண்டு. எனவே, இந்நாளில் அன்னை உலகிற்கு விஜயம் செய்து மக்களுக்கு அருள் புரிவார் என்று நம்பப்படுகிறது. வெள்ளிக்கிழமையன்று ஆடிப்பூரம் வருவது கூடுதல் சிறப்பு.

 ஆடி மாதம் என்பது தக்ஷிணாயன காலத்தின் தொடக்க காலம். இது வரை வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்த சூரியன் தனது தெற்கு நோக்கிய பயணத்தை தொடங்கும் மாதம். நம்முடைய ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாள். அவர்களது இரவுக்காலமே இந்த தக்ஷிணாயன காலம் ஆகும். உத்தராயணக்காலம் சிவபெருமானை வழிபட உகந்தது என்றால் தக்ஷிணாயனம் அவரது வாம பாகத்தில் வீற்றிருக்கும் அம்பிகைக்கு உரிய காலம் ஆகும். அம்மனுக்கு உகந்த ஆடி மாதம், நவராத்திரி ஆகிய பண்டிகைகள் வரும் காலம். இவ்வாறு இது வரை பகல் காலம் அதிகமாக வெப்பமாக இருந்த நிலை மாறி இரவு அதிகமாகவும், வெப்பம் குறையும் காலம் ஆரம்பிப்பதால்தான் ஆடி மாதங்களில் எளிய உணவான கூழ் சாப்பிட்டால் உடம்பிற்கு நல்லது என்று ஜகன் மாதாவிற்கு கூழ் வார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்தினர் நமது முன்னோர்கள். இந்த ஆடி மாதத்தில் வெள்ளி, செவ்வாய் , ஞாயிறுகளில் அன்னையை வழிபட எல்லா நலன்களும் தந்து அருளுவாள் அந்த தயாபரி. இவ்வளவு சிறப்புகள் கொண்ட ஆடி மாதத்தில் வரும் பூர நாள் அம்பிகைக்கு மிகவும் உகந்த நாள்.

தாய்மை என்பது பெண்களுக்கே உரித்தான ஒரு தனி சிறப்பு. உள்ளே உயிர் வளர்த்து உதிரத்தால் பால் கொடுக்க ஒரு தாயால்தான் முடியும். நம்முடைய மானிட வழக்கமான சூல் கொண்ட பெண்ணுக்கு வளை காப்பு நடத்துவது போல படைக்கும் அன்னையாய் இருந்தும் கன்னி என்று மறைகள் பேசும் அம்பிகைக்கு நாம் வளைகாப்பு நடத்தி கண்டு களித்திடும் நாள். மாலை நேரங்களில் அன்னைக்கு வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்டு அந்த வளையள்கள் பெண்மணிகளுக்கு பிரசாதமாக வழங்கப்படுகின்றன.

ஆண்டாள் அவதரித்த திருத்தலமான ஸ்ரீவில்லிபுத்தூரை அம்மக்கள் கோதாதேவி அவதார ஸ்தலம் என்று சிறப்பித்துக் கூறுவர். இந்த நாளில் இக்கோயிலுக்கு சென்றுவருவது மிகவும் நல்லது. எம்பெருமானின் பல்வேறு அம்சங்களான சங்கு, சக்கரம், வில், கதை, வாள் போன்ற ஆயுதங்கள் மட்டுமே ஆழ்வார்களாக அவதரித்த தருணத்தில், பூமிபிராட்டியும் ஆடிப்பூர நாளில் அவதரித்தாள். அரங்கனுக்குச் சூட்ட வேண்டிய ஆரத்தினை தானே சூடிக் கொண்டு ஆடியில் அழகு பார்த்தாள் ஆண்டாள். தான் சூடிக் களைந்த மாலையைப் பெருமாளுக்கு அளித்து வந்ததால் சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என்ற திருநாமம் பெற்றாள். அப்போது அந்தக் கண்ணாடியில் அரங்கனாகவே தெரிந்தாள் அவள். தானே அவனாக பாவித்து மகிழ்ந்த ஆண்டாளின் அவதார தினம்தான் ஆடிப்பூரம்.

Image result for mobile icon png+91-9941510000     Related image+91-8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.