அண்ணாமலையாருக்கு தீபங்கள் ஏற்றிய சித்தர்

0 287
திருஅண்ணாமலையாரின் தீப மகிமையை பரப்ப அண்ணாமலையாருக்கு தீபங்கள் ஏற்றிய சித்தர்ஒரு கோடி தீபங்களை ஏற்றிய சித்தர்!
இந்த கோயிலில் தீபம் ஏற்றி ‘கோட்டீஸ்வராய நம’ என்று பக்தி பூர்வமாக வேண்டினால் இதுவரை நாம் ஏற்றிய தீபத்தின் எண்ணிக்கையை விட பல மடங்கு பலனை நமக்கு தரவல்லது என இக்கோயிலின் ஸ்தல புராணம் கூறுகிறது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியத்தில் பெருவளூர் கிராமம் உள்ளது. செஞ்சியிலிருந்து சேத்பட், ஆரணி செல்லும் நெடுஞ்சாலையில் பெருவளூர் கூட் ரோட்டில் இருந்து 4 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. பெருவளூர் என்றால் எப்போதும் பெரிய தீபங்கள் பிரகாசிக்கின்ற ஊர் என்று பொருள். இங்கு சக்திமிக்க கோகிலாம்பாள் உடனுறை கோட்டீஸ்வரர் கோயில் உள்ளது.
சோழர் காலத்தை சேர்ந்த இக்கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இவ்வூர் மக்கள் கூறுகின்றனர். இக்கோயிலை குலோத்துங்க சோழன், பல்லவ மன்னர்கள் மற்றும் விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர் ஆகியோர் பராமரித்துள்ளனர்.
இங்குள்ள கல்வெட்டுகளில் இவ்வூரின் பெயர் பெருவளூர் என்றும் எதிரிலிச்சோழநல்லூர் என்றும் குறிப்பிடுகின்றன. சோழர் காலம் முதல் இன்றுவரை இங்குள்ள ஈசனை கோட்டீஸ்வரர் என்றும், அம்பிகையை கோகிலாம்மாள் என்றும் பெயரிட்டு வழிபட்டு வருகின்றனர்.
சிறந்த கட்டிடக்கலையுடன், சிற்பங்களுடன் கிழக்கு திசை நோக்கி இக்கோயிலை கட்டியுள்ளனர். சதுர வடிவகருவறையில் இறைவனை ஆவுடையார் மீது அமைத்துள்ளனர். கருவறையைச் சுற்றியுள்ள புறச்சுவர்களில் வடக்கு, தெற்கு, மேற்கு திசைகளில் தேவகோட்டங்கள் கட்டியுள்ளனர்.
வடக்கு தேவகோட்டத்தில் துர்க்கை சிலை உள்ளது. சண்டிகேஸ்வரர், முருகன், விநாயகருக்கு தனி சன்னதி அமைத்துள்ளனர். கருவறையின் முன்புறம் அர்த்த மண்டபமும், அடுத்ததாக நந்தி மண்டபமும் உள்ளது. நந்தி மண்டபத்தின் உள்ளே வடக்கு திசையில் கோகிலாம்பாள் சன்னதி அமைத்துள்ளனர். கோயிலைச் சுற்றி மிக உயரமான சுற்றுச்சுவர்கள் இருந்துள்ளன. தற்போது தென்கிழக்கு திசையில் மட்டும் இதன் அடையாளம் உள்ளது. இங்குள்ள கொடி மரம் ஆலயத்தை விட உயரமாக காணப்படுகிறது.
கோயிலில் 200 ஆண்டுகள் பழமையான மகிழ மரம் ஸ்தல விருட்சமாக உள்ளது. இந்த மரத்தின் கீழ் விளக்கேற்றி வழிபட்டால் துன்பங்கள் நீங்கி மகிழ்ச்சி கிட்டும் என்பது ஐதீகம். தீப ரட்சகர் எனும் சித்தர் நாட்டின் பல பாகங்களுக்கு சென்று திருஅண்ணாமலையாரின் தீப மகிமையை பரப்பி வந்தார். இவர் பல கோயில்களுக்கு சென்று கோடி தீபங்களை ஏற்றி தரிசித்தார். திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையாரை தரிச்கக பாத யாத்திரையாக வரும் வழியில் பெருவளூர் கோட்டீஸ்வரர் கோயிலில் 48 நாட்கள் தங்கி இருந்துள்ளார். அப்போது அக்னி மூர்த்தியான அண்ணாமலையாரின் அருளால் கோகில ஜோதி எனப்படும் அரிய ஜோதியை தரிசித்தார். அதனால் அருள் நிறைந்த கோயிலாக பெருவளூர் திருத்தலத்தை கருதிய தீபரட்சகர், கோட்டீஸ்வரர் இங்குள்ள கொடிமரத்தில் துவங்கி கோயிலை சுற்றி மீண்டும் கொடி மரம் வரை ஓங்கார வடிவில் ஒரு கோடி தீபங்களை ஏற்றி பரிபூரண கோகிலஜோதி வழிபாட்டை நிகழ்த்தினார்.
ஒரே சமயத்தில் இருந்த இடத்தில் இருந்து ஒரு கோடி ஜோதியை தரிசிக்கும் வண்ணம் கண் பார்வை எட்டும் அளவிற்கு உயரமான சரவிளக்குகளை அமைத்திருந்தார். ஒரு கோடி தீபத்தை ஒரே இடத்தில் ஏற்றியதால் சக்தி வாய்ந்த தீப ஸ்தலமாக இக்கோயில் திகழ்கிறது.
பல வளங்கள் நிறைந்த ஊராக இருந்தபோதும் பெருவளூரில் பிராமணர்கள் யாரும் வாழ்ந்ததில்லை. இதனால் கோட்டீஸ்வரருக்கு பூஜைகள் செய்ய முன்னூர் என்கிற ஊரிலிருந்து பிராமணர்ளை அழைத்து வந்துள்ளனர். அவர்களுக்கு வீடு கட்டுவதற்கும், சிவாலய நிவேதியத்துக்காகவும் வரி நீக்கிய நிலங்கள் தானமாக வழங்கியது குலோத்துங்க சோழ மன்னனின் கல்வெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது பெருவளூர்என பெயர் பெற்றிருந்தாலும் தற்போது இவ்வூர் சிற்றூராகவே காணப்படுகிறது.
இக்கோவிலிலுள்ள கோட்டீஸ்வரருக்கு இப்பகுதி மக்கள் ஆண்டுதோறும் 10 நாள் பங்குனி உத்திரதிருவிழாவை வேதபாராயணத்துடன் பிரமோற்சவமாக நடத்தி வருகின்றனர். 7 நாள் கந்தர்சஷ்டி விழாவும், மாதந்தோறும் சஷ்டி கிருத்திகை பிரதோஷம், சிவராத்திரி தினங்களில் சிறப்பு பூஜைகளையும் செய்து வருகின்றனர்.
தொடர்புக்கு ஜம்புலிங்கம், 9486277173, லோகநாதன் 9944680267
படமும், செய்தியும்
– ப.பரசுராமன்

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.