அட்சய திருதியை: நகை வாங்குகிறீர்களோ இல்லையோ ஏதாவது தானம் செய்தால் புண்ணியம் சேரும்!

126

அட்சய திருதியை: நகை வாங்குகிறீர்களோ இல்லையோ ஏதாவது தானம் செய்தால் புண்ணியம் சேரும்!

தமிழ் மாதமான சித்திரை வளர்பிறையில் வரும் அமாவாசைக்கு அடுத்த 3 ஆம் நாளில் கொண்டாடப்படுவது அட்சய திருதியை ஆகும். இந்து மற்றும் சமணர்களின் புனிதமான நாள் ஆகும். முதல் யுகமான கிருத யுகத்தில் பிரம்மனால் உலகம் தோற்றுவித்த நாள் அட்சய திருதியை ஆகும்.

அட்சயா என்பதற்கு சமஸ்கிருதத்தில் எப்போதும் குறையாதது என்று பொருள்படும். இந்த நாள் நல்ல பலன்களையும், வெற்றியையும் தரும் என்று சொல்லப்படுகிறது. இந்த நாள் தங்கம், வெள்ளி, வைரம், விலைமதிப்பற்ற கற்கள், வீடு மனைகள் வாங்க உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்த அட்சய திருதியை நாளில் தொடங்கப்பட்ட எந்தவொரு முயற்சியும் தொடர்ச்சியாக வளர்ந்து நன்மையைக் கொடுக்கும்.

இந்த நாளில் நெல், அரிசி, கோதுமை, தங்கம், பசுமாடு, பானகம், நீர்மோர், விசிறி, குடை என்று ஏதாவது தானம் செய்ய தானம் இன்று கொடுக்கப்படும் பொருட்கள் உங்களுக்கு பெருகிக் கொண்டே இருக்கும்.

இந்த ஆண்டு, அட்சய திருதியை மே 3-ம் தேதியான இன்று செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. இன்று காலை 5.18 மணிக்குத் தொடங்கும் அட்சய திருதியை, மே 4-ம் தேதி நாளை காலை 7:32 மணி வரையில் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த வருடம் அட்சய திருதியை அன்று காலை 5:49 மணி முதல் பிற்பகல் 12:13 முகூர்த்த நேரமாகக் கருதப்படுகிறது. இந்த நேரத்தில் தங்கம் வாங்க ஏற்ற நேரமாக கருதப்படுகிறது.

அட்சய திருதியை நாளில் எந்தவொரு பொருள் வாங்கினாலும் அது பல்கி பெருகும். ஆகையால் இந்த நாளில் நகைக் கடைக்கு சென்று தங்க நகை அல்லது நாணயம் வாங்குவது வழக்கம். அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால், அதிர்ஷ்டமும், செல்வமும் வளமும் வந்து சேரும் என்பது நம்பிக்கை. இந்த நாளில் செய்யப்படும் தானங்களில் அன்னதானம் மிக உயர்ந்ததாக கருதப்படுகிறது. தான தர்மங்கள் செய்தால் பலன் இரண்டு மடங்கு கிடைக்கும்.

இந்த நாளில் தொடங்கப்படும் எந்த முயற்சியும் தொடர்ச்சியாக நடந்து கொண்டே இருக்கும். வியாபாரம் தொடங்குவது, கட்டடம் கட்ட பூமி பூஜை போடுவது ஆகிய புதிய முயற்சிகளை அட்சய திருதியை நாளில் செய்வதன் மூலம் அளப்பரிய நன்மைகள் உண்டாகும்.

மேற்கு வங்க மாநிலத்தில் அட்சய திருதியை நாளன்று விநாயகப் பெருமான் மற்றும் லட்சுமியை வணங்கி தான் புது கணக்கே தொடங்குவார்கள். வட மாநிலங்களில் இந்த நாளில் திருமணம் நடத்துவதை புனிதமாக கருதுகிறார்கள். ஹரியானா, பஞ்சாபைச் சேர்ந்தவர்கள் மண் வெட்டி எடுத்துக் கொண்டு வயலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

ஏழைகளுக்கு தயிர் சாதம் பொட்டலம் தரலாம். சித்தர்கள் ஜீவசமாதி உள்ள கோயில்களுக்கு சென்றால் புண்ணியம் சேரும். அன்னதானம் செய்யலாம். கோயில்களுக்கு பூஜைக்கு தேவையான பொருட்கள் வாங்கி தரலாம். வயதானவர்களுக்கு குடை வாங்கித் தரலாம். செருப்பு தானம் செய்யலாம். நீர்மோர் பானகம் கொடுக்கலாம்.

தண்ணீர் நிறைந்த குடத்தை தானமாக தருவது சிறப்பு. இதனை பிதர்மகடம் என்று கூறுவார்கள். ஒவ்வொரு ஆண்டும் வரும் அட்சய திருதியை நாளில் மறக்காமல் தானம் செய்தால் மறுபிறவியில் அரசனுக்கு இணையான செல்வந்தர் பதவி கிடைக்கும் என்பார்கள்.

மகாலட்சுமியின் அருள் கிடைக்க அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து முடித்து வீட்டு பூஜையறையில் விளக்கேற்றி வணங்கி, மகாலட்சுமி பெயரை உச்சரிக்க செல்வம் தானாக வந்து சேரும்.