அன்னாபிஷேகம் தரிசனம் செய்வதன் பலன்கள்!

154

அன்னாபிஷேகம் தரிசனம் செய்வதன் பலன்கள்!

அதிர்வுகளும், உடலுக்குத் தேவையான கதிர்வீச்சுகளும் ஒருங்கே அமைக்கப்பெற்றிருப்பது சிவலிங்கம். இதன் மீது சாற்றப்படும் அன்னம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த பிரசாதம் பக்தர்களின் தீரா நோயையும் குணப்படுத்துவதோடு, குழந்தை இல்லாத தம்பதியினருக்கு குழந்தை பாக்கியத்தையும் கொடுக்கிறது.

இந்த உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் அடிப்படையாக இருப்பது உணவு (சாப்பாடு, அன்னம்). உலகில் வாழும் அனைத்து உயிர்களையும் படைப்பது இறைவன் என்றால், அந்த உயிர்கள் வாழ்வதற்கு தேவையான அனைத்து ஆகாரத்தையும் படைத்தருள்வது இறைவன். அப்படிப்பட்ட இறைவனுக்கு நன்றி சொல்லும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் பௌர்ணமி நாளில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

இந்த அன்னாபிஷேக நாளில் சிவபெருமான் திருமேனியில் சாற்றப்படும் ஒவ்வொரு பருக்கையும் ஒவ்வொரு சிவலிங்கமாக கருதப்படுகிறது. ஆகையால், இந்த அன்னாபிஷேக நாளில் சிவபெருமானை தரிசனம் செய்தால் அது கோடி முறை சிவனை தரிசனம் செய்ததற்கு சமம். சிவபெருமான் அபிஷேகப் பிரியர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அவருக்கு அபிஷேகம் செய்யப்படும் 16 வகையான பொருட்களில் இந்த அன்னாபிஷேகமும் ஒன்று.

சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது உச்சநிலை சிறப்புடையதாகும். ஆலய வழிபாட்டில் பௌர்ணியன்று ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்குரிய பொருளால் சிவனை வழிபடுவது விஷேசமானது.

நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்சபூதங்களின் சேர்க்கையின் பலனாக அன்னம் கிடைக்கப் பெறுகிறோம். அன்னம் தான் இறைவடிவம் என்பதற்கேற்ப ஈஸ்வரனே அன்னத்தின் வடிவில் இருக்கின்றார்.

சிவசகஸ்ர நாமாவளி, அன்னரூபியாக இருப்பவர் என்றால் ஓம் ஹவிஷே நம என்றும், அனைவருக்கும் உணவளிப்பவர் என்றால் ஓம் போஜனாய நம என்றும் சிவபெருமானை போற்றும். இந்த இறைவனுக்கு நன்றி செலுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் பௌர்ணமி நாளில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

சிவனுக்கு செய்யப்படும் அன்னாபிஷேகத்தை குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியினர் உண்ணும் போது அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். இதே போன்று தீராத நோயும் தீரும். ஆயுள் இருக்கும் வரையில் உணவிற்கு பஞ்சம் வராது.

அன்னாபிஷேக நாளில் சிவபெருமானை நினைத்து உபவாசம் இருந்து மஹா அன்னாபிஷேகம் செய்து சிவனுக்கு சாற்றப்பட்ட அன்னாபிஷேக பிரசாதத்தை உண்ணும் போது பக்தி, புண்ணிய பலன்கள் நம்மை சேர்கின்றன.