ஆடிப்பூரம்: இன்று வளைகாப்பு தினம்!

187

ஆடிப்பூரம்: இன்று வளைகாப்பு தினம்!

காலங்காலமாக கர்ப்பிணிப் பெண்களுக்கு செய்யப்பட்டு வரும் ஒரு சடங்கு தான் வளைகாப்பு. இதனை சீமந்தம் என்றும் குறிப்பிடுகின்றனர். கருவுற்ற தாய்மார்களுக்கு 5ஆம் மாதம், 7ஆம் மாதம் மற்றும் 9ஆம் மாதம் என்று ஒற்றைப்படை மாதங்களில் அவரவர் குடும்ப வழக்கப்படி வளைகாப்பு செய்கிறார்கள்.

மணப்பெண் போன்றே கர்ப்பிணிப் பெண்ணை அலங்கரித்து, மஞ்சள், குங்குமமிட்டு, பன்னீர் தெளித்து, மாலை அணிவித்து இரு கைகளிலும் கை நிறைய வளையல்கள் போடுவார்கள். அதன் பிறகு ஆரத்தி எடுத்து வளைகாப்புக்குரிய பாடல்கள் பாடுவார்கள். இது தான் காலங்காலமாக கறுவுற்ற பெண்களுக்கு செய்யப்படும் ஒரு சடங்கு. கருவுற்று 6ஆம் மாதம் முதலே குழந்தையின் கருவானது வெளியுலகை உணரத் தொடங்குகிறது.

இதனை வரவேற்கும் விதமாக அந்த காலம் முதல் வளைகாப்பு என்ற ஒரு சடங்கு இருந்து வந்துள்ளது. ஒரு சில குடும்பங்களில் பும்சுவன சீமந்தம் என்ற பெயரில் சிறப்பு யாகம் கூட நடத்துவார்கள்.

இந்து சமயம்:

இந்து சமயம் தொன்று தொட்டு வந்த காலத்தில் பல பிரிவுகள் இருந்தது. அது, சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், சௌரம், காணாபத்தியம் மற்றும் ஸ்மார்த்தம் ஆகியவை ஆகும்.

சைவம் – சிவனை முழு முதல் கடவுளாக கொண்ட சமயப் பிரிவு

வைணவம் – விஷ்ணு மற்றும் அவரது 10 அவதாரங்களை வணங்கும் சமயப் பிரிவு

சாக்தம் – சக்தியை வணங்கும் ஒரு சமயப் பிரிவு.

கௌமாரம் – முருகனை வணங்கும் ஒரு சமயப் பிரிவு.

சௌரம் – சூரியனை முழு முதல் கடவுளாக கொண்ட சமயப் பிரிவு.

காணாபத்தியம் – விநாயகரை முழு முதல் கடவுளாக கொண்ட சமயப் பிரிவு

ஸ்மார்த்தம் – சிவன், விஷ்ணு, சக்தி, விநாயகர், சூரியன் மற்றும் முருகனை வணங்கும் சமயப் பிரிவு (சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், சௌரம், காணாபத்தியம் ஆகியவற்றை உள்ளடக்கியது).

ஆடிப்பூர வளைகாப்பு விழா:

சக்தியை முழு முதல் கடவுளாக கொண்ட சாக்தம் மதப் பிரிவில் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அம்மன் நித்ய கன்னி என்பதால், அம்மனுக்கு பிள்ளைப்பேறு, வளைகாப்பு ஆகியவை கிடையாது என்பது ஐதீகம். அதற்காக  ஆடி மாதம் பூரம் நட்சத்திரம் அன்று (இன்று ஆகஸ்ட் 11, ஆடி 26 புதன் கிழமை) அம்மன் கோயில்களில் அம்மனை கற்பவதியாக அலங்காரம் செய்து பட்டுடத்தி, வளையல்கள் அணிவித்து வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

ஆடிப்பூரமான இந்த நாளில் அம்மனை கர்ப்ப கோலத்தில் தரிசிக்கலாம். இன்று அனைத்து கோயில்களிலும் மஞ்சள், குங்குமம், வளையல், இனிப்பு ஆகியவை கொடுக்கப்படுகிறது. குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள், அம்மனுக்கு செய்யப்படும் இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வந்து, கோயில்களில் கொடுக்கப்படும் வளையல்களை கையில் அணிவித்தும், வீட்டில் பூஜை செய்தும் வழிபட்டு வந்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

வளைகாப்பு நடைபெறும் சில கோயில்கள்:

  1. செண்பகவல்லி அம்மன் கோயில் – கோவில்பட்டி
  2. உத்திரகோசமங்கை வராகி அம்மன் கோயில் – இராமநாதபுரம் மாவட்டம்.
  3. குங்குமவல்லி அம்மன் கோயில் – உறையூர், திருச்சி மாவட்டம்.
  4. செடல் மாரியம்மன் கோயில் – பீமநகர், திருச்சி.