ஆருத்ரா தரிசனம் ஸ்பெஷல் !

189

தில்லையின் மும்மூர்த்திகள் !!!

தர்சனாத் அப்ரஸதசி ஜனனாத் கமலாலயே |
காச்யாந்து மரணான் முக்தி: ஸ்மரணாத் அருணாச்சலே ||

பாரத பூமியில் வாழும் பலருக்கும் தெரிந்திருக்கும் சுலோகம் இது. தில்லையை தரிசிக்க முக்தி, திருவாரூரில் பிறக்க முக்தி, காசியில் மரிக்க முக்தி, திருவண்ணாமலையை நினைக்க முக்தி !!! ஸ்லோகமும் அர்த்தமும் படிக்க மற்றும் கேட்க மிகமிக எளிதாக இருந்தாலும் நடைமுறையில் இந்நான்கில் எதேனும் ஒன்றைச்செய்வது அத்தனை சுலபமா என்பது பார்க்கவேண்டிய ஒன்றே !!!

ஆரூரில் பிறப்பதும் (ஆரூர் ஒருவருக்குள் பிறப்பதும்), காசி மாநகரில் மரிப்பதும் ஈஸ்வர சங்கல்பம் !!! இவை நம்வசம் இல்லை.. பாக்யவான்களுக்கே… அண்ணாமலையை ஸ்மரிப்பதை எடுத்துக்கொண்டோமேயானால் பலர் சொல்வது போல் இருந்த இடத்தில் இருந்துகொண்டு “அருணாச்சலா” என்று “சதா” நினைப்பது என்பது துர்லபம் !!! ஸ்மரனை என்பது இடைவிடாது நினைத்தல் !!! அதாவது ஒரு எண்ணெய் ஒழுகைப்போன்று பிசிர் தட்டாது அந்தர்முகமாக இடைவிடாத சிந்தனை !!! இது சம்சாரிகளாகிய நமக்கு நடக்கும் காரியமா ??? சாதாரண வீட்டுச்சாவியை வைத்த இடம் மறந்துபோய் தினப்படி தேடுதேடு என்று தேடுகிறோம் !!! இதற்கு நடுவில் அண்ணாமலையை அனுக்ஷணமும் மறவாது எங்கே நினைக்க ?!?!

சரி “நான்கில் மூன்று போக மீதி ஒருவழி தில்லையை தரிசிக்க முக்தி உள்ளதே !!! வருடாவருடம் ஆனி, ஆருத்ரா உற்சவங்கள் அகிலம் புகழும் வண்ணம் நடைபெறுகின்றனவே !!! நாங்களும் ஒவ்வொரு வருடமும் காண்கிறோமே” என்று சொல்வோமேயானால்… நிற்க !!! இங்கே ஒருக்ஷணம் “தரிசனம்” என்றால் என்ன என்பதனைக் கொஞ்சம் ஆராய வேண்டும் !!! உறவினர்களையோ, நண்பர்களையோ பார்ப்பதை நாம் “தரிசனம்” என்று பேசுச்சுவழக்கில்கூட சொல்வதில்லை !!! இதன்மூலம் “தரிசனம்” வேறு “பார்த்தல்” வேறு என்பது தெளிவாகிறது !!!

அப்படியாயின் தரிசனம் என்றால் என்ன ??? இதனை தில்லையில் செய்துகாட்டியவர்கள் மூவர் !!! ஆமாம் தில்லையை தரிசித்து முக்தி பெற்றவர்கள் மூவரே !!! நந்தனார், மாணிக்கவாசகர், அப்பய்ய தீக்ஷிதர் !!! ஜீவன் முக்தராக விளங்கிய தீக்ஷிதேந்திராள் (அப்பய்ய தீக்ஷிதர்) ஒரு சுபநாளில் “கனக ஸபையில் நடனம் செய்யும் நடராஜப் பெருமானின் திருவடித் தாமரையின் பேரொளியனது உதயசூரியன் போல என்மனதில் பிரகாசிக்கின்றது” என்று சாக்ஷத் சபாபதியின் “தரிசனத்தை” கண்டுகொண்டே சிவசாயுஜ்யம் அடைந்தார் !!!

மணிவாசகப்பெருமானோ, “கிடைப்பதற்கரிய மானுட ஜென்மத்தில் பாதி உறங்கி, மீதி வாழ வழிதேடி அலைந்து வீணடித்தேன் .. சம்சாரம் என்னும் துயரில் வீழ்ந்து இறக்கப்பார்த்தேன் .. அப்பனே அம்பலக்கூத்தனே திருமாலும் நான்முகனும் கூட காணமுடியாத உன் திருவடித்தாமரைகளை எனக்கு அருளினாயே ” என்று “உணர்ந்து தரிசித்தார்”…. அந்தப்பரமனின் குஞ்சிதபாதத்தில் ஐக்கியமாயினார் !!!

மேற்கூறிய இருவரைக்காட்டிலும் நந்தனார் ஒருபடி மேல் !!! புலன்கள் யாவும் ஒடுங்கிய நிலையில், சிந்தனை முழுதும் சிற்றம்பலவன் நிறைந்திருக்க, அஞ்ஞானம் என்னும் இருள் நீங்கியவராய், ஹ்ருதயக்கமலத்தில் “சிதம்பர” தத்துவம் பிரகாசிக்க, ஒரேஒருமுறை அகமுற ஆனந்தக்கூத்தனைக் தரிசிக்க ஞானாகாசப்பெருவெளியில் இரண்டறக்கலந்தார் நந்தமாமுனிவர் !!!

மேற்கூறிய மூன்று உதாரணங்கள் மூலம் “தரிசனம்” என்பது என்ன என்பது நமக்கு இந்நேரம் புரிந்திருக்கும் !!! ஆனந்த நடராஜனின் அப்படி ஒரு தரிசனம் என்று கிடைக்குமோ, சொல் நெஞ்சே !!!

படியதினிற் கிடந்திந்தப் பசு பாசந் தவிர்ந்துவிடும்
குடிமையிலே திறிந் தடியேன் கும்பியிலே விழாவண்ணம்
நெடியவனும் நான்முகனும் நீர்கான்றுங் காணவொண்ணா
அடிகளெனக் கருளியவா றார்பெறுவா ரச்சோவே

தென் தில்லை மன்றினுள் ஆடி போற்றி!
இன்று எனக்கு ஆரமுது ஆனாய் போற்றி!!