ஆவணி மாதம் வரலட்சுமி விரதம் இருப்பது ஏன்?

193

ஆவணி மாதம் வரலட்சுமி விரதம் இருப்பது ஏன்?

திருமணமான சுமங்கலிப் பெண்கள், தங்களது தாலி பாக்கியம் நிலைக்கவும், மாங்கல்ய பலம் பெருகவும், குடும்பத்தில் சுபீட்சம் உண்டாகவும், கன்னிப் பெண்களின் மனதிற்கு பிடித்த வரன் அமையவும் மகாலட்சுமியை முறையாக வீட்டிற்கு அழைத்து வழிபடுவது வரலட்சுமி நோன்பு (வரலட்சுமி விரதம்).

ஆவணி மாதத்தில் வரும் முதல் பௌர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமை அன்று வரலட்சுமி விரதம் கொண்டாடப்படுகிறது. தமிழகம் மட்டுமல்லாமல், வட இந்தியாவிலும் வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. ஏன் ஆவணி மாத த்தில் வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படுகிறது? வரலட்சுமி விரதம் கடைபிடிப்பதால் கிடைக்கும் பலன்கள் என்ன? என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்…

கஜானா முழுவதும் செல்வங்களால் நிறைந்திருந்த மன்னாதி மன்னர்கள் காலத்தில் பரம்பரை பரம்பரையாக இந்த வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஒரு காலத்தில் சௌராஷ்டிராவில் சுசீந்திர தேவி என்ற மகாராணி வரலட்சுமி விரதத்தை முறையாக கடைபிடித்து வந்தார். நாளடைவில், அவரது கஜானாவில் செல்வம் அளவுக்கு அதிகமாக சேர, வரலட்சுமி விரதம் கடைபிடிப்பதில் தாமதம் செய்தார். குடும்ப உறவுகளையும் கவனிக்கவில்லை.

இதனால், சுசீந்திர தேவியின் செல்வ செழிப்பானது படிப்படியாக குறைந்தது. சுசீந்திர தேவியின் மகள் சாருமதி வெளியூரில் திருமணம் செய்து கொடுக்கப்பட்டாள். தனது சிறுவயது முதல் வரலட்சுமி விரதத்தில் கலந்து கொண்ட சாருமதி மிகவும் பக்தியுடன் இருந்தார். அதோடு, தொடர்ந்து வரலட்சுமி விரதத்தை கடைபிடிக்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால், அதற்கான வழிமுறைகள் அவளுக்கு தெரியவில்லை.

எனினும், சாருமதி, தனது கணவர், மாமனார், மாமியார் ஆகியோரை அன்போடு பாதுகாத்து வந்தாள். அவர்களுக்கு உரிய பணிவிடைகளையும் செய்து வந்தாள். இந்த நிலையில், ஒரு நாள், மகாலட்சுமி, சாருமதியின் கனவில் தோன்று, வரலட்சுமி விரதத்தை எப்படி கடைபிடிப்பது? அதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பது குறித்து தெரிவித்தார். அதோடு, இந்த விரதம் பற்றி மற்றவர்களுக்கும் கூறினாலும், விரதம் இருந்த பலன் கிடைக்கும் என்று கூறி மகாலட்சுமி மறைந்தார்.

இதையடுத்து, சாருமதி ஒவ்வொரு ஆண்டும் மகாலட்சுமியின் சிலையை வைத்து வரலட்சுமி விரதத்தை முறையாக கடைபிடித்து வந்தார். இதன் காரணமாக சாருமதியின் குடும்பமும், அவர்களது நாடும், நாட்டு மக்களும் செழிப்புடன் காணப்பட்டன.

கலசம் வைத்து மகாலட்சுமியின் முகத்திற்கு அலங்காரம் செய்து முறையாக வரலட்சுமி விரத முறையை கடைபிடித்து வந்தால் குடும்பத்தில் அமைதி நிலைக்கும். கன்னிப் பெண்கள் வரலட்சுமி விரத வழிபாட்டில் கலந்து கொண்டு நோன்புக் கயிரை கட்டிக் கொண்டால் மனதிற்கு பிடித்த நல்ல வரன் அமையும் என்பது ஐதீகம்.

கணவனின் ஆயுள் அதிகரிக்க பெண்கள் மேற்கொள்ளும் வரலட்சுமி விரதம் வரும் 4ஆம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.