இதென்ன புதுசா இருக்கே…! தண்ணீர் மனிதர்களுடன் பேசுமா?

354

இதென்ன புதுசா இருக்கே…! தண்ணீர் மனிதர்களுடன் பேசுமா?

பழங்காலத்தில் நம் வீட்டிற்கு யார் வந்தாலும் முதலில் மோர் கொடுக்கும் பழக்ம் இருந்தது. ஏனென்றால், அந்த காலத்தில் எல்லாம் பேருந்தோ, பைக்கோ, காரோ எல்லாம் கிடையாது. வெறுமனே நடராஜா சர்வீஸ் தான். அதான் பொடி நடையாக நீண்ட மைல் தூரம் நடந்து வருவார்கள். அப்படி இல்லையென்றால் மாட்டு வண்டி கட்டிக் கொண்டு வருவார்கள். பெரும்பாலானோர் வீடுகளில் மாட்டு வண்டி இருப்பதில்லை. அதனால், பலரும் நடந்து தான் வருவார்கள்.

நீண்ட மைல் தூரம் நடந்து சொந்த பந்தம், உற்றார் உறவினர்கள் வீட்டிற்கு வந்த உடனேயே முதலில் அவர்கள் களைப்பு தீர மோர் தருவார்கள். அந்த காலங்களில் மோர் எல்லாம் அனைவரது வீடுகளிலும் வைத்திருப்பார்கள். அப்படியில்லையென்றால், பழைய சாத தண்ணீரை எடுத்து அதில் உப்பு போட்டு விருந்தினர்களுக்கு கொடுப்பார்கள்.

அப்படியும் இல்லையென்றால், சாதாரணமாக தண்ணீர் கொடுத்து வரவேற்பார்கள். ஏனென்றால், தண்ணீருக்கு சாந்தப்படுத்தும் தன்மை உண்டு. அதாவது, வெளியிலிருந்து ஒருவர் வீட்டிற்கு வரும் போது அவர் எதிர்மறை சிந்தனையுடனோ, கோபத்தோடோ, துக்கமாகவோ, பொறாமை குணத்துடனோ வருவார்கள். அப்படி வருபவர்களின் இது போன்ற குணங்களை தண்ணீரானது உட்கிரகித்துக் கொள்ளும். சண்டை போடும் நோக்கத்தோடு ஒருவர் வீட்டிற்கு வந்தால், அவருக்கு முதலில் தண்ணீர் கொடுக்க வேண்டும். ஏனென்றால், நீங்கள் முகம் மலர்ந்து புன் சிரிப்புடன் கொடுக்கப்படும் தண்ணீர் உங்களது குணத்தையும் அவருக்கு கடத்தும். அதனால், அவரது சண்டை போடும் குணம் மாறும்.

இதன் காரணமாகத்தான் தண்ணீருக்கு பேசும் குணம் இருக்கிறது என்று சொல்கிறார்கள். சோகமாகவோ, சோர்வாகவோ வருபவர்களுக்கு நல்ல எண்ணத்துடன் தண்ணீர் கொடுக்க வேண்டும். ஆறு, குளங்கள், நீர் நிலைகளுக்கு அருகில் தியானம் செய்வதும் பிரதிபலிப்புக்காகவே.