இந்த கோயிலில் சூரியன் தான் எல்லாமே!

121

இந்த கோயிலில் சூரியன் தான் எல்லாமே!

திருவள்ளுவர் மாவட்டம் சோழவரம் அருகிலுள்ளது ஞாயிறு திருத்தலம். இங்கு சொர்ணாம்பிகை உடனான புஷ்பரதேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. கிட்ட த்தட்ட 1000 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் கிரக தோஷங்களை நீக்கும் சக்தி கொண்டதாக நம்பப்படுகிறது. இத்தலத்தில் உள்ள சிவபெருமானை சூரியன் எப்போதும் வழிபட்டபடியே இருப்பதாக ஐதீகம்.

ஒவ்வொரு ஆண்டும் தமிழ் புத்தாண்டு தினமான சித்திரை மாதத்தில் முதல் 7 நாட்கள் சொர்ணாம்பிகை, புஷ்பரதேஸ்வரர் மீது சூரிய ஒளி விழுகிறது. சூரிய ஒளி விழும் அந்த 7 நாட்களும் சிவபெருமானுக்கான பூஜையை சூரியனே செய்வதாக ஐதீகம் என்று சொல்லப்படுகிறது. அந்த நிலையில், அன்று உச்சிக்கால பூஜை செய்யப்படுவதில்லை.

கண் பிரச்சனை உள்ளவர்கள் இந்த கோயிலுக்கு வந்து வழிபட்டால், கண் பிரச்சனை சரியாகும். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருந்த கணவன் – மனைவி மீண்டும் ஒன்று சேர, இந்த கோயிலில் உள்ள புஷ்பரதேஸ்வரருக்கு தீபம் ஏற்றி வழிபட்டால், நன்மை உண்டாகும்.

அனைத்து கிரகங்களுக்கும் சூரியன் தான் தலைமை கிரகம் என்பதால், இந்த கோயிலில் நவக்கிரக சன்னதி கிடையாது. சூரியனைத் தவிர்த்து மற்ற கிரகங்களால் பாதிக்கப்பட்டு தோஷ பாதிப்பிற்கு உள்ளானவர்கள், அந்த அந்த கிரகத்திற்குரிய நாட்களில் இந்த கோயிலுக்கு வந்து சிவப்பு நிற வஸ்திரம் சாற்றி, நெய் மற்றும் கோதுமையில் விளக்கேற்றி வழிபட தோஷம் நிவர்த்தியாகும்.