உடலில் காணப்படும் மச்சங்களும், பலன்களும்?

46

நாம் உடலில் காணப்படும் மச்சங்களுக்கும் அதன் பலன்களும் என்ன தெரியுமா?

இது ஒரு ஜோதிடத் தகவல் ஆகையால், ஜோதிடத்தைப் பொறுத்தவரை மச்சங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. மேல் உதடு மற்றும் கீழ் உதடுகளில் இருக்கும் மச்சங்கள் சர்வ சாதாரணமாகப் பொய் பேச வைக்கும்.

மச்சங்களில் உள்ளங்கையில் இருக்கும் மச்சம் மிக முக்கியமானதாகும். எல்லா நல்ல கெட்ட பலன்களையும் உடனடியாக அளிக்கக் கூடியது இந்த உள்ளங்கை மச்சம். சில ஆபத்துக்களையும் உருவாக்கும்.

சுண்டு விரலில் புதன் மேட்டில் மச்சம் இருந்தால் கல்வித் தடைபடும். கூடா நட்பு உண்டாகும். கூட்டு சேர்வது சரியாக இருக்காது.

மோதிர விரலுக்கு கீழே இருக்கும் சூரிய மேட்டில் மச்சம் இருந்தால் அரசால் கண்டம் ஏற்படும். அதாவது ஜெயிலுக்குப் போவது போன்ற நிலை உண்டாகும்.

நடு விரலில் மச்சம் இருந்தால் திடீர் மரணம், கடத்தப்படுதல், தீரா நோய், கோர மரணம், ஊரை விட்டு ஒதுக்கப்படுவது, உண்ணா நோன்பு இருந்து இறப்பது போன்றவை ஏற்படும்.

ஆட்காட்டி விரலுக்கு கீழே குரு மேட்டில் மச்சம் இருந்தால் சர்வ சாதரணமாக நீதி நெறியை மீறுதல், குரு பத்னியை தொட்டுவிடுதல் போன்றவற்றில் ஈடுபடுவார்கள். மனசாட்சிக்கு அப்பார்பட்ட செயல்களை செய்வார்கள்.

குரு மேட்டில் மச்சம் இருந்தால் பெரிய பதவிகளில் இருப்பார்கள், திடீரென தூக்கி எறியப்படுவார்கள்.

சுண்டு விரலுக்குக் கீழே இருப்பது புதன் மேடு. அதற்குக் கீழே இருப்பது செவ்வாய் மேடு. செவ்வாய் மேட்டில், உள் செவ்வாய் மேடு, வெளிச் செவ்வாய் மேடு என்று இரண்டு வகைப்படும்.  உள்செவ்வாய் மேட்டில் கரும்புள்ளி இருந்தால் திடீர் யோகம் உண்டாகும். ஆனால் அதனை அனுபவிக்க துணைவியர் இல்லை என்று புலம்ப வைக்கும்.

வெளிச் செவ்வாயில் கரும்புள்ளி இருந்தால் அரசு வழியிலோ அல்லது வழக்குகளிலோ நமது சொத்துகள் பறிபோகும். அதாவது சாலை அமைக்க நிலத்தை அரசு எடுத்துக் கொள்ளுதல், வழக்கில் எதிராளிக்குச் சாதகமாக தீர்ப்பு அமைந்து சொத்து கைவிட்டுப் போதல் போன்றவை ஏற்படும்.

கட்டை விரலுக்குக் கீழே இருக்கும் மேடு சுக்கிரன் மேடு. ரொம்ப முக்கியமான மேடு. சுக்கிர மேட்டில் மெல்லிய கோடுகள் இருந்தால் ரொம்ப நன்றாக இருக்கும். புள்ளிகள் இல்லாமல் இருப்பதுதான் நல்லது.

புள்ளி இருந்தால் அது ஒழுக்கக் கேடு. பலருடன் செல்வது, பல பெண்களிடம் செல்வது போன்றவை ஏற்படும். உடலுறவில் பல்வேறு தவறான உணர்ச்சிகளைக் கொண்டிருப்பார்கள்.

சுக்கிரன் மேட்டிற்கும், வெளிச் செவ்வாய் மேட்டிற்கும் கீழே நடுவே இருப்பது சந்திரன் மேடு. அதாவது உள்ளங்கையின் சுண்டு விரலுக்குக் கீழே கடைசியான மூலைப் பகுதிதான் சந்திரன் மேடு.

சந்திரன் மேட்டில் புள்ளிகள் இருந்தால் மனநலம் குன்றியக் குழந்தைகள், நரம்புக் கோளாறு போன்றவை ஏற்படும்.

பொதுவாக ஆண்களுக்கு இடது பக்கம் மச்சம் இருப்பது அதிர்ஷ்டத்தின் வெளிப்பாடு என்று நூல்கள் சொல்கின்றன. பெண்களுக்கு வலது பக்கம் மச்சம் இருப்பதும் நல்லது.

அதேபோல நெஞ்சுப் பகுதியில் மச்சம் இருந்தால் கொஞ்சம் சுகவாசியாக இருப்பார்கள் என்று சொல்லலாம். பொதுவாக பின்புறம் இருக்கும் மச்சத்தால் திடீர் பணப்புழக்கம், அதிர்ஷ்மாகவும் இருப்பார்கள் என்று சொல்வார்கள்.

பொதுவாக கால்களில் மச்சம் இருப்பவர்களுக்கு காலில் சக்கரம் என்று சொல்வார்கள். ஒரு சிலர் உட்கார்ந்து கொண்டே காலை ஆட்டிக் கொண்டே இருப்பார்கள். அது உள்ளங்காலில் இருக்கும் மச்சத்தின் காரணமாகத்தான் இருக்கும். ஏனெனில் உள்ளங்காலில் இருக்கும் மச்சம் ஒரு அசைவைக் கொடுத்துக் கொண்டே இருக்கும். ஓடிக் கொண்டே இருப்பார்கள்.