உன்னையே சரணடைகிறேன்: ஐயப்பனின் 18 படிகள் உணர்த்தும் தத்துவம்!

281

உன்னையே சரணடைகிறேன்: ஐயப்பனின் 18 படிகள் உணர்த்தும் தத்துவம்!

சபரிமலை ஐயப்பன் கோயில் கேரளா மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஒரு புண்ணிய ஸ்தலம். மஹிஷி என்ற அரக்கியை கொன்ற பிறகு சாமி ஐயப்பன் தியானம் செய்த இடமே சபரிமலை என்றானது. 18 மலைகளுக்கு இடையில் சபரிமலை ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது.

உலகில் உள்ள அனைத்து மூலைகளிலும் இருந்து கோடிக்கணக்கானோர் ஐயப்பனுக்கு மாலை அணிந்து பாத யாத்திரையாகவும், வண்டி, வாகனங்கள் மூலமாக சென்று ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர். சுவாமி ஐயப்பன் ஒரு பிரம்மச்சாரி என்பதால், ஐயப்பனை தரிசிக்க பெண்களுக்கு அனுமதியில்லை.

மேலும் படிக்க: சுவாமியே சரணம் ஐயப்பா: இருமுடி பிரியனின் 108 போற்றி!

ஐயப்பனை தரிசனம் செய்ய நினைப்பவர்கள் தொடர்ந்து 48 நாட்கள் ஒரு மண்டலம் முழுவதும் விரதம் இருக்க வேண்டும். அப்போது மீன், மதுபானங்கள், புகையிலை, பெண் தொடர்பு, அநாகரீகமான பேச்சு போன்றவை இருக்கவே கூடாது. காலை மற்றும் மாலையில் சுத்தமான தண்ணீரில் குளிக்க வேண்டும். அப்போது சுவாமியே சரணம் ஐயப்பா என்று கோஷமிட வேண்டும்.

கருப்பு அல்லது நீல நிறத்திலான ஆடைகளை தான் அணிந்திருக்க வேண்டும். விரதம் இருக்கும் 48 நாட்களும் அருகிலுள்ள கோயிலுக்கு சென்று பூஜை செய்து வழிபட வேண்டும். இப்படி, தொடர்ந்து 48 நாட்கள் மனமுருகி ஐயப்பனை வேண்டிக் கொள்ளும் பக்தரால் மட்டுமே ஐயப்பனின் முழுமையான அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஐயப்பன், மணிகண்டன், பூதநாதன், ஹரிஹரன், சபரீஷ்வரன், பம்பாவாசன், சாஸ்தா, வீரமணிகண்டன், அரியரச் செல்வன் என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறார். ஐயப்பனை தரிசிக்க 18 படிகள் ஏறி சென்று தான் தரிசனம் செய்ய வேண்டும். அப்படி அந்த 18 படிகள் உணர்த்தும் தத்துவம் என்ன என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்…

ஐயப்பன் கோயில் 18 படிகள் உணர்த்தும் தத்துவம்:

1ஆம் படி: விஷாத யோகம் – வாழும் போது நாம் செய்யும் நல்லது, கெட்டது எல்லாம் நமது பாவ, புண்ணியங்களை நிர்ணயிக்கும் என்பதை அனைவரும் உணர வேண்டும். இறைவன் அருளால் முக்தி அடைய வேண்டும் என்ற ஆத்மத் துடிப்பே விஷாத யோகம்.

2ஆம் படி: சாங்கிய யோகம் – பரமாத்மாவே என் குரு என்று உணர்ந்து அவரிடம் சென்று ஆத்ம உபதேசம் பெறுவது ஆகும்.

3ஆம் படி: கர்மயோகம் – கடமையை செய், பலனை எதிர்பாராதே என்பதே இந்த படி உணர்த்தும் தத்துவம்.

4ஆம் படி: ஞான கர்ம சன்னியாச யோகம் – எது மீதும் பற்று இல்லாமல், பற்றற்ற நிலையில் பரமனை அடையும் வழியில் முன்னேறிச் செல்வது என்ற தத்துவத்தை உணர்த்துவது 4ஆவது படியாகும்.

5ஆம் படி: சன்னியாச யோகம் – தான தர்மங்கள் செய்வதையும், நான் தான் உயர்ந்தவன் என்ற கர்வம் இல்லாதவனாகவும் வாழ வேண்டும் என்பதை உணர்த்துவது 5ஆம் படியாகும்.

6ஆம் படி: தியான யோகம் – கண், காது, மூக்கு, வாய், மெய் இந்த புலன்களை நம் கட்டுப்பாட்டில் தான் வைக்க வேண்டும். ஆனால், அவை இழுத்த இழுப்புக்கு நாம் சென்றுவிடக் கூடாது என்பதை குறிப்பது 6ஆவது படியாகும்.

7ஆம் படி: ஞானம் – இந்த உலகில் பார்ப்பது எல்லாமே பிரம்மை. இறைவனே உண்மை என்ற தத்துவத்தை உணர்த்துவது 7ஆம் படியாகும்.

8ஆம் படி: அட்சர பிரம்ம யோகம் – இறைவன் தான் எப்போதும் சிந்தனைகள் இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவது 8ஆம் படியாகும்.

9ஆம் படி: ராஜவித்ய, ராஜ குஹ்ய யோகம் – இறைவன் மீது பக்தி இருந்தால் மட்டும் போதா து. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பது தான் உண்மையான பக்தி என்ற தத்துவத்தை உணர்த்துவது 9ஆம் படியாகும்.

10ஆம் படி: விபூதி யோகம் – அழகு, அறிவு, ஆற்றல் என்று எத்தகைய தெய்வீகக் குணத்தைக் கண்டாலும் அதனை இறைவனாகவே பார்ப்பது தான் 10ஆம் படி உணர்த்தும் தத்துவம்.

11ஆம் படி: விஸ்வரூப தரிசன யோகம் – இறைவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான், இறைவனே உலகம், உலகமே இறைவன் என்ற தத்துவத்தை உணர்த்துவ 11 ஆம் படி.

12 ஆம் படி: பக்தி யோகம் – இன்பம் – துன்பம், விருப்பு – வெறுப்பு, ஏழை – பணக்காரன் போன்ற வேறுபாடுகளை களைந்து எல்லாவற்றிலும் சமத்துவத்தை உணர்த்துவது 12 ஆம் படியாகும்.

13ஆம் படி: ஷேத்ரக்ஞ விபாக யோகம் – அனைவரையும் இயக்குவது இறைவனே என்பதை உணர்வது 13 ஆம் படியாகும்.

14ஆம் படி: குணத்ர விபாக யோகம் – பிறப்பு, மூப்பு, இறப்பு ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்களை அகற்றி இறைவனின் முழு அருளை பெற வேண்டும் என்பதை உணர்த்துவது 14ஆம் படியாகும்.

15ஆம் படி: தெய்வாசுர விபாக யோகம் – தீய குணங்களை ஒழித்து, நல்ல குணங்களை வளர்த்துக் கொண்டு நம்மிடம் தெய்வ பக்தியை அதிகரிப்பது 15ஆம் படியாகும்.

16ஆம் படி: சம்பத் விபாக யோகம் – இறைவனின் படைப்பில் அனைவரும் சமம் என்பதை உணர்த்துவது 16ஆம் படியாகும்.

17ஆம் படி: சிரித்தாத்ரய விபாக யோகம் – சர்வம் பிரம் மயம் என்பதை உணர்ந்து பரப்பிரம்ம ஞானத்தை பெறுவது 17ஆம் படியாகும்.

18ஆம் படி: மோட்ச சன்யாச யோகம் – சாதி, மத வேறுபாடின்றி அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு காட்டி உன்னையே சரணாகதி அடைகிறேன் என்பதை உணர்த்துவது 18ஆம் படியாகும்.

இப்படி 18 படிகளை கடந்து சென்று ஐப்பனை தரிசித்தால் நம் வாழ்வுக்கு வளம் சேர்ப்பார் என்பதை ஐயப்பனின் பதினெட்டுப் படிகள் நமக்கு உணர்த்தும் தத்துவமாகும்.