எந்த திசையில் தீபம் ஏற்றினால், என்னென்ன நன்மைகள் நடக்கும் தெரியுமா?

122

எந்த திசையில் தீபம் ஏற்றினால், என்னென்ன நன்மைகள் நடக்கும் தெரியுமா?

கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி நாளும், கார்த்திகை நட்சத்திரமும் சேரும் நாள் தான் திருக்கார்த்திகை. இந்த நாளைத் தான் நாம் கார்த்திகை தீபமாக கொண்டாடி வருகிறோம். இந்த நாளில் மக்கள் தங்களது வீடுகளிலும், கோயில்களிலும் தீபங்கள் ஏற்றி துன்பங்களை நீக்கி வெளிச்சம் என்ற மகிழ்ச்சியை கொண்டாடுகின்றனர்.

அந்த வகையில் இந்த 2021ஆம் ஆண்டு திருக்கார்த்திகை திருநாள் 19ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கார்த்திகை நட்சத்திரம் நவம்பர் 19ஆம் தேதி அதிகாலை 1.30 மணிக்கு தொடங்கி நவம்பர் 20ஆம் தேதி அதிகாலை 4.29 மணிக்கு முடிவடைகிறது.

பிரம்மா மற்றும் விஷ்ணுவிற்கு இடையில் தங்களில் யார் பெரியவன் என்ற போட்டி நிலவியது. அப்போது, சிவபெருமான் ஜோதிபிழம்பாக தோன்றினார். அடியையும், முடியையும் தேடும்படி அசரீரி ஒலித்தது. இருவரும் அடிமுடி தேடி காணமுடியாததால் கடைசியில் சிவபெருமான் தான் முழு முதல் கடவுள் என்று ஏற்றுக் கொண்டனர். இருவரும், சிவபெருமானின் ஜோதியை எல்லோரும் காண வேண்டும் என்பதற்காக, சிவபெருமானிடம் கேட்கவே, அவரோ திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று காட்டியருளினார். இந்த புராணத்தின் படி கார்த்திகை தீபம் கொண்டாடப்படுவதாக கூறப்பட்டாலும், முருகனுக்காகவும் கார்த்திகை தீபம் கொண்டாடப்படுவதாகவும் ஒரு புராணக்கதை கூறப்படுகிறது.

எங்கெங்கு ஏற்றி வைத்து வழிபட வேண்டும் என்பது குறித்து இந்தப் பதிவில் நாம் பார்ப்போம்.

 1. வீட்டு முற்றத்தில் 4 விளக்குகள் ஏற்ற வேண்டும்.
 2. சமையலறையில் ஒரு விளக்கு ஏற்றிட வேண்டும்.
 3. நடையில் 2 விளக்குகள் ஏற்ற வேண்டும்.
 4. வீட்டின் பின்புறம் 4 விளக்குகள் ஏற்றிட வேண்டும்.
 5. திண்ணை இருந்தால் அதில் 4 விளக்குகள் ஏற்ற வேண்டும்.
 6. மாட குழியில் 2 விளக்கு ஏற்ற வேண்டும்.
 7. நிலைப்படிக்கு 2 விளக்கு ஏற்றிட வேண்டும்.
 8. சாமிபடத்துக்கு கீழே 2 விளக்கு ஏற்ற வேண்டும்.
 9. வெளியே யம தீபம் ஒன்று ஏற்ற வேண்டும்.
 10. திருக்கோலம் போட்ட இடத்தில் 5 என்று மொத்தம் 27 விளக்குகள் ஏற்ற வேண்டும்.

இந்த 27 என்பது 27 நட்சத்திரங்களைக் குறிக்கிறது.

தீபங்கள் எத்தனை நாட்கள் ஏற்ற வேண்டும்?

முதல் நாள் பரணி தீபம், 2ஆவது நாள் கார்த்திகை தீபம், 3ஆவது நாள் என்று 3 நாட்களும் வீட்டில் விளக்கேற்ற வேண்டும்.

விளக்கேற்றும் நேரம்:

கார்த்திகை மகா தீப நேரம் மாலை 6 மணி என்பதால், அந்த நேரத்தில் தீபம் ஏற்றுவது நல்லது.

தீபம் ஏற்றும் முறை:

 1. தீபம் ஏற்றும் போது, வடக்குத் திசை நோக்கி தீபம் ஏற்றினால், திருமணத் தடை நீங்கும்.
 2. கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால், கஷ்டங்கள் விலகும்.
 3. மேற்கு நோக்கி தீபம் ஏற்றிட கடன் தொல்லைகள் நீங்கும்.

ஆனால், தெற்கு திசை நோக்கி விளக்கு ஏற்றக் கூடாது என்று கூறுகிறார்கள். வீட்டு வாசலில் கண்டிப்பாக குத்து விளக்கில் தீபம் ஏற்றுவது சிறந்தது.

கார்த்திகை மாதம் முழுவதும் தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு வாய்ந்தது. அப்படி ஏற்ற முடியாவிட்டால், கார்த்திகை நாளில் தீபம் ஏற்றினால், நினைத்த காரியங்கள் நடக்கும். திருமணத் தடை நீங்கும். குழந்தைப் பாக்கியம் கிடைக்கும். வீட்டில் செல்வம் சேரும். சகல நன்மைகளும் கிடைக்கும்.