எஸ்.பி. கோயில் எது தெரியுமா?

142

எஸ்.பி. கோயில் எது தெரியுமா?

காஞ்சிரபும் மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயில் என்ற ஊரில் உள்ளது பாடலாத்ரி நரசிம்மர் கோயில். இந்தக் கோயிலில் பாடலாத்ரி நரசிம்மர் மூலவராக காட்சி தருகிறார். பிரகலாதவரதர் உற்சவராக அருள்பாலிக்கிறார். மேலும், தாயார் அஹோபிலவல்லி பக்தர்களுக்கு காட்சி தருகிறாள்.

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை வருடப் பிறப்பு, சித்ரா பௌர்ணமி, நரசிம்மர் ஜெயந்தி, ஆடிப்பூரம், ஆவணியில் பவித்ர உற்சவம், நவராத்திரி, கிருஷ்ண ஜெயந்தி, திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம் ஆகிய நாட்கள் திருவிழா கொண்டாடப்படுகிறது. பௌர்ணமி நாளில் கிரிவலம் வருவது இந்தக் கோயிலின் சிறப்பு. மார்கழி மற்றும் தை மாதங்களில் நரசிம்மரின் திருவடியிலும், ரத சப்தமி நாளில் நரசிம்மரின் உடலிலும் சூரிய ஒளி படுகிறது.

பிரதோஷ நாளில் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்யப்படுகிறது. பொதுவாக நரசிம்மர் கோயில்களில் நரசிம்மர் இடது காலை மடித்து, வலது காலை தொங்கவிட்ட நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஆனால், இந்த பாடலாத்ரி நரசிம்மர் கோயிலில் உள்ள நரசிம்மர் வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்ட நிலையில் அருள்பாலிக்கிறார்.

கடன் தொல்லை நீங்கவும், வழக்குகளில் வெற்றி கிடைக்கவும், செவ்வாய் தோஷம் காரணமாக திருமணம் தடைபட்டவர்களும் இந்தக் கோயிலில் வழிபாடு செய்கின்றனர். மேலும், சிறப்பு பூஜைகளும் செய்யப்படுகிறது. சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களும், ராகு திசை நடப்பவர்களும், சுவாதி, திருவாதிரை நட்சத்திரக்காரர்களும் இந்தக் கோயிலில் வழிபாடு செய்கின்றனர். கோயிலுக்கு பின்புறம் அழிஞ்சல் மரம் இருக்கிறது. இந்த மரம் மிகவும் பிரசித்து பெற்று விளங்குகிறது.

கல்வியில் சிறந்து விளங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், திருமண வரம் அமையவும் இந்த அழிஞ்சல் மரத்தில் சந்தனம், குங்குமம் பூசி நெய் விளக்கேற்றி வழிபடுகின்றனர். தங்களது பிரார்த்தனை நிறைவேறியதும், பெருமாளுக்கு பிரதோஷ நாளில் திருமஞ்சனம் செய்தும் புது வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

பாடலம் என்பதற்கு சிவப்பு என்றும், அத்ரி என்பதற்கு மலை என்றும் பொருள். நரசிம்மர் கோபத்தோடு சிவந்த கண்களுடன் இம்மலையில் தரிசனம் தந்ததால் பாடலாத்ரி என்று இந்த ஊருக்கு பெயர் ஏற்பட்டது. லட்சுமி நரசிம்மர் சன்னதி தெற்கு பார்த்தும், தாயார் ஆண்டாள் சன்னதி கிழக்கு பார்த்தும் அமைந்துள்ளன. பெருமாளின் தசவதாரக் காட்சிகள் சுதை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. ஆஞ்சநேயர் மற்றும் கருடன் சன்னதிகள் தனித்தனியாக உள்ளன. இந்தக் கோயிலில் 12 ஆழ்வார்கள், மூலவராகவும், உற்சவராகவும் இருக்கின்றனர்.

சென்னை திருச்சி சாலையில் செங்கல்பட்டிற்கு முன் அமைந்துள்ளது இந்த பாடலாத்ரி நரசிம்மர் கோயில். சிங்க முகம் கொண்ட நரசிம்மர் என்பதால், இந்த ஊர் சிங்கப்பெருமாள் என்று பெயராலேயே அழைக்கப்படுகிறது. இதனை சுருக்கமாக எஸ்.பி. கோயில் என்று அழைக்கின்றனர்.

இந்தக் கோயிலில் பாடலாத்ரி நரசிம்மர் மூலவராக காட்சி தருகிறார். இவரை வழிபட, திருமணத் தடை நீங்கும், கடன் பிரச்சனை தீரும், எதிரிகள் தொல்லை நீங்கும். இங்கு லட்டு, அதிரசம், முறுக்கு, சீடை, தட்டை போன்றவை இருந்தாலும் மிளகு தோசைக்கு தான் அதிகளவில் வரவேற்பு. பித்தளைப் பானைகளில் வைக்கப்பட்டு, எண்ணெய், பொடி சேர்த்து கொடுக்கப்படுகிறது. இந்த தோசையை குழந்தைகள் அதிகளவில் விரும்பு சாப்பிடுகின்றனர். தோசைக்குரிய கோயில் என்பதால், தோசைப் பெருமாள் கோயில் என்று செல்லமாகவும் அழைக்கப்படுகிறது.

நரசிம்மரின் தரிசனத்திற்காக ஜாபாலி மகரிஷி கடும் தவம் இருந்தார். மகரிஷியின் தவத்தில் மகிழ்ந்த பெருமாள் பிரதோஷ வேளையில் அவருக்கு தரிசனம் கொடுத்தார். இதன் காரணமாக பிரதோஷ நாளின் போது நரசிம்மருக்கு திருமஞ்சனம் (தெய்வத்தை நீராட்டி குளிர்விக்கும் முறை) நடக்கிறது. பாடலாத்ரி நரசிம்மர் சங்கு, சக்கரம் ஏந்திய நிலையிலும், வலது கையை அபயகரமாகவும், இடது கையை தொடை மீது வைத்த நிலையிலும் குகைக்கோயிலில் அருள் பாலிக்கிறார். இவரை வலம் வர வேண்டுமென்றால் சிறிய குன்று ஒன்றையும் சேர்த்து வலம் வர வேண்டும். மேலும், உற்சவர் பிரகலாதவரதன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.