ஏன் ஆடிப்பெருக்கில் புது தாலி மாற்றுகிறார்கள் தெரியுமா?

64

ஏன் ஆடிப்பெருக்கில் புது தாலி மாற்றுகிறார்கள் தெரியுமா?

ஆடி மாதம் அம்மனுக்கு  உகந்த மாதம். சிவன் கோயிலை விட அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு செய்யப்படும். அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி கூட இந்த மாதம் நடைபெறும். இது தவிர கூழ் வார்த்தல் நிகழ்ச்சியும் வெகு சிறப்பாக நடைபெறும்.

அப்படிப்பட்ட இந்த ஆடி மாதத்தில் ஆடி பதினெட்டாம் நாள் கோயில்களுக்கு சென்று நதிக்கரைகளில் நீராடி, பெண்கள் தாலி கயிறை மாற்றி புதிய தாலி கயிறு அணிவதுண்டு. அதன்படி, ஆகஸ்ட் 3ஆம் தேதி (நாளை) புதன்கிழமை ஆடி 18ஆம் பெருக்கு காவிரி கரையோரங்களில் இந்த விழா களைகட்டும்.

புதுத் தாலி மாற்றுவது ஏன்?

ஆடி 18 அன்று மங்களத்தின் அடையாளமாக விசேஷமான நாளாக கருதப்படும் இந்த நாளில் திருமணமான பெண்கள் தங்கள், தாலி மஞ்சள் கயிற்றை கணவர் கையால் மாற்றுகின்றனர். இந்த நாட்களில் தாலி பெருக்கி போடும் போது, நீண்ட நாட்களாக பெண்கள் மஞ்சள், குங்குமம், பூவும் பொட்டோடும் வாழ வேண்டும் என்பது ஐதீகம்.

பெரும்பாலும் திருமணமான மூன்றாவது மாதத்தில் இந்த வைபவம் நடக்கும். அதிலும் ஆடிப்பெருக்கன்று இதனை செய்வது சிறப்பு. ஆடிப்பெருக்கன்று புதியதாக திருமணம் ஆன தம்பதிகள் நதிக்கரையில் அன்று இரவு நிலாச்சோறு சாப்பிடும் பழக்கமும் உண்டு.

திருமண பாக்கியம்?

அதேபோன்று, திருமணமாகாத பெண்கள், விரைவில் திருமணம் ஆக வேண்டும், தங்களுக்கு நல்ல கணவர் கிடைக்க வேண்டும் என்று என அம்மனை வேண்டி மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக் கொள்வர். அவ்வாறு செய்வதன் மூலமாக அவர்களுக்கு அடுத்த ஆடி மாதத்திற்குள் திருமணம் நிச்சயமாகும் என்பது நம்பிக்கை.

ஆடி 18 அன்று சப்தகன்னியரை வழிபடுவதால் நாம் எதை நினைத்து வழிபட்டாலும் நிறைவேறும் என்பது ஐதீகம். புது வெள்ளம் பெருகுவதால், ஆடி பெருக்கு என முன்னோர்கள் இந்த தினத்தை மிகவும் கோலாகமாக கொண்டாடி வருகின்றனர்.