ஏன் கண்மலர் காணிக்கை செலுத்துகிறார்கள் தெரியுமா?
திருவாரூர் மாவட்டம் திருவீழிமிழலை என்ற ஊரில் உள்ள கோயில் வீழிநாதேஸ்வரர் (கல்யாண சுந்தரேஸ்வரர்) திருக்கோயில். இந்தக் கோயிலில் வீழிநாதேஸ்வரர் மூலவராக காட்சி தருகிறார். கல்யாண சுந்தரர் உற்சவராக திகழ்கிறார். சுந்தரகுசாம்பிகை (அழகியமாமுலையம்மை) தாயார் பக்தர்களுக்கு காட்சி தருகிறாள். வீழிச்செடி கோயிலில் தல விருட்சமாக விளங்குகிறது.
ஒவ்வொரு ஆண்டும் மஹா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை ஆகிய நாட்களில் கோயில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. இந்தக் கோயிலில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். இங்கு பாதாள நந்தி உள்ளது. முழு கோயிலே நந்திக்கு மேல் அமைந்திருப்பது போன்று காட்சி உள்ளது.
இத்தல இறைவன் காசி யாத்திரைக்கு புறப்படும் மாப்பிள்ளை கோலத்தில் அருள்பாலிப்பதால் மாப்பிள்ளை சுவாமி என்றும் அழைக்கப்படுகிறார். மகாமண்டபம் திருமண மண்டபம் போன்று பந்தல் காலுடன் காட்சியளிப்பது இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத சிறப்பம்சமாக இருக்கிறது.
இவ்வளவு ஏன், கொடிமரம் அருகிலேயே சிவலிங்கம் அமைந்திருப்பது மற்றொரு சிறப்பம்சமாக கருதப்படுகிறது. இங்கு சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த பிரமாண்ட வவ்வால் நந்தி மண்டபம் உள்ளது. இந்தக் கோயிலானது கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இந்தக் கோயில் மாடக் கோயில் அமைப்பு கொண்டது. கோயிலின் தெற்கு பிரகாரத்தில் தல விநாயகர் (படிக்காசு விநாயகர்) சன்னதியும், வடக்கில் சோமாஸ்கந்தர், முருகன், மகாலட்சுமி சன்னதிகளும், வடக்கில் சண்டேசுவரர் சன்னதியும் உள்ளது. நடராஜர் சன்னதி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
திருமணத்தடை நீங்கவும், குழந்தைப் பாக்கியம் கிடைக்கவும், கல்வியில் சிறந்து விளங்கவும் இந்தக் கோயிலில் பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும் புது வஸ்திரம் சாற்றியும் தங்களது நிவர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
காத்யாயன முனிவர் தனக்கு குழந்தை வரம் வேண்டி மனைவியுடன் கடும் தவம் புரிந்தார். காத்யாயன முனிவரின் தவத்தால் மெச்சிய பார்வதி தேவி, அவருக்கே மகளாகப் பிறந்தாள். அந்தக் குழந்தைக்கு கார்த்தியாயினி என்று பெயரிட்டார். பெண்ணிற்கு திருமண வயது வந்ததும் இறைவனே கார்த்தியாயினியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வேண்டினார்.
காத்யாயன முனிவரின் வேண்டுதலின்படி, சித்திரை மாதம் மகம் நட்சத்திர நாளன்று இத்தலத்தில் எழுந்தருளி கார்த்தியாயினியை திருமணம் செய்தார். அப்போது முனிவர், என்றும் இத்தலத்தில் திருமணக் கோலத்திலேயே அனைவருக்கும் காட்சி தர வேண்டும் என்று வேண்டினார். அதன்படி இறைவன் மூலஸ்தானத்தில் திருமணக் கோலத்திலேயே அருள்பாலிக்கிறார்.
ஒருகாலத்தில் இந்தப் பகுதி முழுவதும் வீழி எனப்படும் சந்தனம், செண்பகம், விளா, பலா ஆகிய மரங்கள் நிறைந்த காடுகளாக இருந்தன. மிழலைக்குறும்பர் என்ற வேடுவர் இத்தல இறைவன் மீது கொண்ட பக்தியின் காரணமாக தினந்தோறும் அவருக்கு விளாங்கனி கொண்டு நைவேத்தியம் செய்து வழிபட்டு வந்தார். இதையடுத்து, அவரது பக்தியின் பயனாக இறைவன் அவருக்கு அஷ்டமாசித்திகளை வழங்கினார்.
வேடுவரால் நைவேத்தியம் செய்யப்பட்ட விளாங்கனி வீழிநாதரின் பாதத்தில் இன்றும் காட்சியளிக்கிறது. இதன் காரணமாக இத்தலம் திருவீழிமிழலை என்று அழைக்கப்படுகிறது. திருநாவுக்கரசர் மற்றும் சம்பந்தர் இருவரும் பல தலங்களுக்கு சென்றுவிட்டு திருவீழிமிழலையில் வந்து சில காலம் தங்கினர். அப்போது திடீரென்று திருவீழிமிழலையில் பஞ்சம் ஏற்பட்டது.
இதன் காரணமாக திருநாவுக்கரசர் மற்றும் சம்பந்தர் இருவரும் வீழிநாதரை பணிந்து பஞ்சம் போக்க பாடினர். இருவரது கனவில் தோன்றிய ஈசன், தினந்தோறும் ஒரு பொற்காசு தருவதாகவும், அடியார்களின் பசி தீர்க்கும்படியும் கூறினார். அதன்படி, கிழக்குப்பீடத்தில் உள்ள காசை சம்பந்தரும், மேற்குப்பீடத்திலுள்ள காசை திருநாவுக்கரசரும், எடுத்து அடியார்களிடம் கொடுத்து அவர்கள் பசி போக்கினர். இப்போதும் படிக்காசு பீடம் இருக்கிறது.
இதன் காரணமாக இங்குள்ள விநாயகர் படிக்காசு விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். இந்தக் கோயிலில் பிரமாண்ட சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த வவ்வால் நந்தி மண்டபம் உள்ளது. சஷ்டியப்த பூர்த்தி திருமணங்கள் இங்கு நடத்தப்படுகின்றன. மகாவிஷ்ணுவின் சக்கராயுதத்தை சலந்தரன் என்ற அரக்கன் பறித்துச் சென்றுவிட்டான். அவரோ, பரமசிவனிடம் சக்கராயுதத்தை மீட்டுத்தரும்படி வேண்டினார். இதற்கு பரமசிவனோ, பூலோகத்தில் வீழிச்செடிகள் நிறைந்த பகுதியில் தான் இருப்பதாகவும், தினந்தோறும் தனக்கு பூஜை செய்து வந்தால் சக்கராயுதம் திரும்ப கிடைக்கும் என்றும் அருளினார்
அதற்கு விஷ்ணு பகவானும், தனது பெயரால் ஒரு தீர்த்தம் உருவாக்கி அதன் மூலம் இறைவனுக்கு அபிஷேகம் செய்து ஆயிரம் தாமரை மலர்கள் கொண்டு ஈசனை வழிபட்டு வந்தார். ஒருநாள் சிவனின் திருவிளையாடலால் பூஜைக்கு தேவையான 1000 தாமரை மலர்களில் ஒன்று குறைந்தது.
அந்த ஒரு தாமரை மலருக்குப் பதிலாக விஷ்ணு பகவான் தனது ஒரு கண்ணையே ஆயிரமாவது தாமரை மலராக தந்தார். இதனால் தான் கோயில்களில் கண்மலர் காணிக்கை தரும் பழக்கம் உருவானது. விஷ்ணு பகவானின் பூஜையால் மனம் மகிழ்ந்த ஈசன், சலந்தரனை வதம் செய்து சக்கராயுதத்தை கொடுத்து அருளினார். விஷ்ணு சிவனுக்கு பூஜை செய்த கண்மலர் இன்றும் கோயிலில் சிவனின் பாதத்தில் காணலாம் என்று சொல்லப்படுகிறது.