ஏன் காமாட்சி விளக்கை பயன்படுத்துகிறோம்?

180

ஏன் காமாட்சி விளக்கை பயன்படுத்துகிறோம்?

பெரும்பாலும் முன்னோர்கள் காமாட்சி விளக்கை தான் அதிகளவில் பயன்படுத்தி வந்தார்கள். தினந்தோறும் காலை, மாலை என்று இரு நேரங்களிலும் காமாட்சி விளக்கு ஏற்றி வைத்து இறைவழிபாடு மேற்கொண்டனர். காமாட்சி விளக்கை ஏன் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துகிறார்கள்?

அந்த விளக்கை வீட்டில் ஏற்றி வைப்பதால் என்ன நன்மை ஏற்படும்? என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம். விளக்குகளில் வட்ட முகம், இரட்டை முகம் முதல் 5 முகம் என்று பல விதங்களில் காணப்படுகின்றன. உலக மக்களின் நன்மைக்காக தவம் மேற்கொண்டவர் காமாட்சி அம்மன். அவர், அப்படி தவமிருந்த வேளையில் சகல தெய்வங்களும் காமாட்சி அம்மனுக்குள் அடங்கியது. இதனால், காமாட்சி அம்மனை வழிபட்டால் அனைத்து தெய்வங்களையும் வழிபட்டதற்கான பலன் கிடைக்கும் என்பது ஐதீகமாகியது.

அனைத்து தெய்வங்களும் காமாட்சி அம்மனுக்குள் அடங்கும் என்பதால், ஒவ்வொருவரும் தங்களது குல தெய்வங்களை நினைத்து கொண்டு காமாட்சி விளக்கை ஏற்றி வைத்து வழிபாடு செய்வது ஐதீகம். அப்படி வழிபாடு செய்வதன் மூலம் வீட்டிலுள்ளவர்களுக்கு காமாட்சி அம்மனின் அருளும் குல தெய்வத்தின் ஆசியும் கிடைக்கும்.

ஒரு சிலருக்கு தங்களது குல தெய்வம் எது என்று தெரியாமல் இருக்கும். அப்படி குல தெய்வம் எது என்று தெரியாதவர்கள் காமாட்சி அம்மனை தங்களது குல தெய்வமாக நினைத்து கூட வழிபாடு செய்யலாம். அனைத்து தெய்வங்களின் அருளும் ஒன்றாக கிடைப்பதற்கு திருமணத்தின் போது மணமகள் கையில் காமாட்சி விளக்கை ஏந்திக்கொண்டு வலம் வரச் சொல்கிறார்கள்.

திருமணமாகி கணவன் வீட்டிற்கு செல்லும் மணப்பெண், முதலில் காமாட்சி விளக்கை ஏற்றுவதற்கு இதுதான் காரணம் என்றும் சொல்லப்படுகிறது. அதோடு, காமாட்சி விளக்கில் குல தெய்வமும் இருந்து அருள் புரிவதால் முதன் முதலில் அந்த விளக்கை ஏற்றுவதன் மூலமாக குல தெய்வம் தெரியாதவர்களுக்கு குல தெய்வத்தின் அருள் கிடைக்கும். மேலும், குலம் தழைக்கும் என்பது நம்பிக்கை. மிகவும் புனிதமானது காமாட்சி விளக்கு.

இந்த காமாட்சி விளக்கில் கஜலட்சுமியின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும். இது எல்லா வீடுகளிலும் இருக்க வேண்டிய புனிதமான விளக்கு. தினந்தோறும் வீட்டில் தீபம் ஏற்றி வழிபடும் போது பூ, பொட்டு வைத்து தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இதன் மூலம் வீட்டில் வறுமை நீங்கும்.

பொதுவாக திருமணமான பெண்ணுக்கு சீர்வரிசை கொடுக்கும் போது காமாட்சி விளக்கும், இரு குத்து விளக்குகளும் கொடுப்பார்கள். இருளை நீக்கி அருள் என்ற ஒளியை அனைவருக்கும் அருளும் விளக்கு தான் காமாட்சி அம்மன் விளக்கு என்பது குறிப்பிடத்தக்கது.