ஏன் பிள்ளையார் சுழி போடுகிறோம்? அது எப்படி வந்தது தெரியுமா?
பொதுவாக எந்த நல்ல காரியத்தையும் செய்வதற்கு முன்பாக பிள்ளையார் சுழி போட்டுத்தான் வேலையை, செயலை தொடங்குவார்கள். இவ்வளவு ஏன், பிள்ளையர் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு என்ற பாடல் கூட இருக்கிறது. ஆனால், ஏன், அப்படி செய்கிறார்கள்? அதற்கு என்ன காரணம் என்று பலருக்கும் தெரியாது. இந்தப் பதிவில் அது குறித்து நாம் பார்ப்போம்.
இன்று மஹா சங்கடஹர சதுர்த்தி. விநாயகருக்கு முக்கியமான நாள். இந்த நாலில் விரதம் இருந்து விநாயகப் பெருமானை வழிபட்டு வந்தால் வெற்றி மேல் வெற்றி வரும். நினைத்த காரியம் நினைத்தபடியே நடக்கும். உ எனும் உகரம் பிள்ளையார் சுழியாய் எழுதப்படுகிறது. முன்னோர்கள் உ என்று முதலில் எழுதி அதன் பின் சிவமயம் என்று எழுதுவார்கள்.
ஆனால், ஏராளமானோர் உ என்று மட்டும் போட்டு எழுத தொடங்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். உ என்பது நாளைக் குறிக்கவும், 2 என்ற எண்ணுக்கும் இதே எழுத்து தான் பயன்படுகிறது. மாதா, பிதா, குரு, தெய்வம் என்று தான் நாம் வணங்கி வருகிறோம். பிள்ளையார் தனது தாய், தந்தையான சிவனையும், பார்வதி தேவியையும் முதன்மையாக இருக்க சுருக்கமாக உ என்ற சுழியை உருவாக்கினார்.
பிள்ளையார் தடைகளை அகற்றுபவர். அதனால் பிள்ளையார் போட்ட சுழியையே எந்த ஒரு காரியத்தை தொடங்குவதற்கும் முன்னதாக அந்த பிள்ளையார் சுழியை போட்டு தொடங்கி வருகிறோம். அந்த செயலை செய்தும் வருகிறோம். பிள்ளையாரை நினைத்து எந்த தடையும் இல்லாமல் சுபமாக நடந்து முடிக்க வேண்டும் என்று வேண்டி செயலை தொடங்குகிறோம்.
இது மட்டுமின்றி இன்னும் பல கருத்துக்களும் இருக்கிறது. அது என்ன என்பது குறித்தும் பார்ப்போம்…
இயற்கை வடிவிலான தமிழ் எழுத்துக்களை வட்ட வடிவில் எழுதும் போது அதனுடைய முடிவானது நீளக் கோட்டில் முடியும். முதலில் வட்டம் போட்டு அதன் பின் அதைக் கோடாக இழுத்ததால் பிள்ளையார் சுழி உருவானது என்று கூறப்படுகிறது.
திருமூலர் – அகரம் உயிர் என்றும், உகாரம் இறை என்றும், மகாரம் – மலமென்றும் கூறப்படுகிறது. இதனால், அகரமாகிய உயிரானது உகாரமாகிய இறைவனோடு இணைந்து ஒன்றியிருக்கும் நிலையை விளக்குகிறது. இதையே பிள்ளையார் சுழி ஆயிற்று.
ஏடுகளில் எழுதும் போது ஏட்டின் செம்மை மற்றும் எழுதுகோலின் சீர்மை ஆகியவற்றை அறிந்து கொள்வதற்கு சுழித்துப் பார்க்கும் வழக்கம் தான் நாளடைவில் பிள்ளையார் சுழியாகிவிட்டது என்று கூறப்படுகிறது. இது போன்று பிள்ளையார் சுழி வந்ததற்கு பல கருத்துக்கள் கூறப்படுகிறது.