ஐயப்பனின் திருவாபரணப் பெட்டிகளில் என்னென்ன இருக்கும் தெரியுமா?

46

ஐயப்பனின் திருவாபரணப் பெட்டிகளில் என்னென்ன இருக்கும் தெரியுமா?

சைலபதியில் நடக்கும் அதிசயம் என்னவென்றால் திருவாபரணம் எங்கு சென்றாலும் கருடன் அதன் மேலேயே பறந்து வருவதுதான். சந்நிதானத்தைப் பெட்டி அடைந்ததும் கருடன் சந்நிதானத்தை மூன்றுமுறை வலம் வந்துப் பின் பறந்து மறையும்.

அப்படி என்னதான் இருக்கிறது அந்தத் திருவாபரணப் பெட்டிகளில் என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

திருவாபரணம்:

சபரிமலையில் மகிமை மிகுந்த தரிசனமாக விளங்குவது மகரஜோதி தரிசனம். ஐயப்பன் ஜோதி ஸ்வரூபனாகக் காட்சி கொடுக்கும் அருள் தரிசனம். மகர சங்கராந்தி அன்று ஐயப்பனுக்கு திருவாபரணங்களை அணிவித்து தீப ஆரத்தி காட்டியதும் ஐயப்பனின் மகர ஜோதி தரிசனத்தை பொன்னம்பல மேட்டில் காண முடியும்.

இந்தத் திருவாபரணப் பெட்டி பந்தள அரண்மனையிலிருந்து சபரிமலை வரை பயணித்து வந்து சரியாக மகரஜோதி நாளன்று சபரிமலை வந்து சேரும். இந்த நாளில் ஐயப்பன் திருவாபரணங்கள் அணிந்து பூரண சொரூபனாகக் காட்சி கொடுப்பான். இந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் காண பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்வார்கள்.

ஐயனின் இந்தப் பூரண சொரூப தரிசனம் என்ன?

திருவாபரணப் பெட்டிகளில் என்ன இருக்கும் என்று நிறைய சாமிமார்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

திருவாபரணக் கோலம் – மாதிரி “மகர சங்கராந்தி தினத்தன்று பந்தள ராஜனின் காணிக்கையான திருவாபரணம் பெட்டிகளில் சபரிமலைக்கு எடுத்துவரப்பட்டு ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும்.

திருவாபரணம் 3 பெட்டிகளில் எடுத்துவரப்படும். பக்தர்கள் அதைக் காணும்போதே மெய்சிலிர்ப்பதைக் காண முடியும். இந்தத் திருவாபரணப் பெட்டியில் என்னதான் இருக்கிறது என்று பலரும் கேட்பதைக் காணமுடியும்.

சிலர் மணிகண்டன் பூமியில் வாழ்ந்தபோது அணிந்துகொண்டிருந்த ஆபரணங்கள் இது என்று சொல்லக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், அது ஒரு ஏற்புடைய கருத்தாக இல்லை.

திருவாபரணப்பெட்டிகள் மொத்தம் மூன்று. ஒன்று ஆபரணப்பெட்டி, வெள்ளிப்பெட்டி, கொடிப்பெட்டி. இதில் ஆபரணப்பெட்டியில்தான் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் ஆபரணங்கள் இருக்கும்.

திருவாபரணம்

  1. திருமுக மண்டலம் எனப்படும் முக கவசம்.
  2. பூரணா புஷ்கலா தேவியருடைய உருவங்கள்.
  3. பெரிய வாள் மற்றும் சிறிய வாள்.

4 இரண்டு யானை உருவங்கள்.

  1. கடுவா எனப்படும் புலி உருவம்.
  2. வில்வமாலை.
  3. சரப்பொளி மாலை.
  4. நவரத்தின மாலை.
  5. வெள்ளிகட்டிய வலம்புரிச் சங்கு.

இவைபோன்ற விஷயங்கள் இந்த ஆபரணப் பெட்டியில் இருக்கும். அடுத்த பெட்டியாக இருக்கக்கூடிய வெள்ளிப் பெட்டியில் தங்கக்குடம் மற்றும் பூஜா பாத்திரங்கள் இருக்கும். கொடிப்பெட்டியில் யானைப் பட்டம், தலப்பாற மலை முதலிய மலையின் கொடிகள் இருக்கும்.

ஆபரணப்பெட்டி தவிர்த்த இரண்டு பெட்டிகளும் மாளிகை புறத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு ‘எழுந்தளிப்பு’ என்னும் நிகழ்வு நடைபெறும் அப்போது யானைக்கு அந்தப் பட்டத்தை சாத்தி ஊர்வலங்கள் நடைபெறும். திருவாபரணப் பெட்டி சந்நிதானத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு பகவானுக்கு ஆபரணங்கள் அணிவிக்கப்படும்.

சபரிமலை ஐயப்பன்:

சபரிமலை க்ஷேத்திரத்தின் சிறப்பே மகர சங்கரம்தான். மகர சங்கரம காலத்தில்தான் பகவான் தவக்கோலத்திலிருந்து கண்விழிக்கிறார். அன்றைய நாளில் ஐயன் ராஜ அலங்காரத்தில் தரிசனம் கொடுக்கிறார். மணிகண்டன் அவதாரக் காலத்தில் தன் வளர்ப்புத் தந்தையிடம், “ஆண்டுதோறும் தவக்கோலத்தில் இருக்கும் ஐயன் அந்த ஒருநாளில் கண்விழித்து தன் பக்தர்களைப் பார்த்து அனுக்கிரகம் செய்வேன்” என்று வாக்களித்திருந்தார்.

பகவான் கண்விழிக்கும் அந்தக் காலத்தில் தேவர்கள் எல்லாம் விசேஷமாக ஆராதனை செய்வார்கள். இத்தனை சிறப்புகள் கொண்ட நாளைக் கொண்டாடும் விதமாக திருவாபரணங்களைக் கோஷயாத்திரையாகக் கொண்டு வந்து அணிவித்து மகிழ்கிறார்கள்.

அந்தக் காலத்தில் மகர சங்கராந்தி அன்று காலையில்தான் பந்தள அரண்மனையில் இருந்து இந்தப் பெட்டிகள் கிளம்புமாம். இந்தப் பெட்டிகளைச் சுமப்பவர்கள், பெட்டியைத் தலைமேல் ஏற்றிக் கொண்டதும் தேவதா ஆவேசம் கொண்டு ஓடிவந்து அந்த நாளின் மாலையிலேயே சந்நிதானம் வந்து சேருவார்களாம்.

காலங்கள் மாறிவிட்டன. தற்போது சுமார் இரண்டரை நாள்கள் ஆகின்றன.  மகரஜோதிக்கு முன்பே பந்தளத்தில் இருக்கும் கோயிலில் வழிபாடுகள் செய்து திருவாபரணப் பெட்டியைக் கொண்டுவந்து வெளியே வைப்பார்கள். இந்தப் பெட்டிகளைச் சுமப்பதற்கென்றே சில குடும்பங்கள் உள்ளனர்.

அவர்கள்தான் இவற்றைச் சுமப்பர். இதில் பகவானின் சாட்சியம் என்பதுபோல இந்தப் பெட்டிகள் வெளியே எடுத்துவரப்பட்டுக் காத்திருக்கும்போது கிருஷ்ணபருந்து மேலே வரும். கருடனை தரிசனம் செய்த பின்புதான் தலையில் திருவாபரணப் பெட்டிகள் ஏற்றப்பட்டு யாத்திரை புறப்படும்.

திருவாபரணப் பெட்டியோடு ஒரு பல்லக்கும் பந்தள ராஜாவும் உடன் வருவார். இந்த யாத்திரை செல்லும் வழியெல்லாம் உள்ள மக்கள், பகவானை தரிசனம் செய்ய வீட்டுவாசல்களில் கோலமிட்டு பூக்கள் தூவி வரவேற்பார்கள். இப்படி சரணகோஷத்தின் நடுவே மிதந்துவரும் இந்தத் திருவாபரணப்பெட்டி,

பம்பை, நீலிமலை வழியாக சந்நிதானத்தை மகரசங்கராந்தி அன்று அடையும். திருவாபரணத்தைச் சுமந்துசென்று 18 படிகளில் ஏறி ஸ்வாமிக்கு அணிவிப்பார்கள்.  ஐயப்பன் தன் முக மண்டலத்தில் மீசையோடும் பூரணா புஷ்கலா சமேதராக அச்சன்கோயில் அரசராகக் காட்சிகொடுப்பார்.

யானை புலிகள் எல்லாம் முன்பாக இருக்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு முன்பாக இரு வாள்களும் வைக்கப்பட்டு ஐயன் அருட்காட்சி தருவார். அந்தக் கோலத்தில் ஐயப்பனுக்கு தீபாராதனை முடிந்ததும் மகரஜோதி தரிசனம் நடைபெறும்.

மகர சங்கரத்தன்று மட்டுமல்லாமல் அடுத்த இரண்டு நாள்களுக்கும் இந்தத் தரிசனம் நடைபெறும். திருவாபரண தரிசனம் பக்தர்களுக்குக் கிடைக்கும் பெரும் பாக்கியம். வாழ்வில் விலைமதிக்க முடியாத தரிசனம் திருவாபரண தரிசனம். சபரிமலைக்குச் செல்லும் சுவாமிகள் அந்த ஆனந்த அற்புத தரிசனங்களைக் கண்டு வழிபடுவது மிகவும் விசேஷமாகும்.