ஐயப்பனின் மூன்றாவது யாத்திரை ஏன் புனிதமானது தெரியுமா?

35

ஐயப்பனின் மூன்றாவது யாத்திரை ஏன் புனிதமானது தெரியுமா?

பொதுவாக கோயில்களுக்கு சென்று வேண்டிக் கொள்ளும் பக்தர்கள், தங்களது வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் அடுத்த முறை கோயிலுக்கு வரும் போது நான் இதை செய்கிறேன், அதை செய்கிறேன் என்று வேண்டிக் கொண்டு வேண்டுதல் நிறைவேற்றுவார்கள். மொட்டை போடுதல், அக்னி சட்டி எடுத்தல், தீ மிதித்தல், கோயிலில் மணி கட்டுதல், உருவாரம் எடுத்தல் என்று வேண்டுதலை நிறைவேற்றுவார்கள். கோயிலில் மணி கட்டுவது என்பது என்பது சபரிமலை கோயிலில் மிகவும் பிரபலமானது. மூன்றாம் ஆண்டு சபரிமலைக்கு செல்லும்போது ஐயப்பமார்கள் மணியை எடுத்து செல்வார்கள்.

மேலும், மூன்றாவது யாத்திரை மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், இந்த 3ஆம் ஆண்டு தான் ஒரு மனிதன் முழுநிலையை அடைகிறான். ஐயப்பனின் கருணை இருந்தால் மட்டுமே ஒருவரால் மூன்றாவது யாத்திரையை பூர்த்தி செய்ய முடியும். இதை சந்திரனின் மூன்றாம் பிறையை காண்பதற்கு ஒப்பாக சொல்லலாம். இந்த மூன்றாம் பிறை அன்று சந்திர தரிசனம் செய்வது, ஐயப்பனை பொன்னம்பலமேட்டில் ஜோதி ஸ்வரூபத்தில் காண்பதற்கு இணையாகும். அந்த வகையில், மூன்றாவது யாத்திரை மிகவும் முக்கியமானது.

அதே போல் மூன்றாவது முறையாக சபரிமலைக்கு செல்பவர்களை மணிகண்டன் என்று அழைப்பார்கள். இது அந்தந்த குழுவினரை சார்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி ஒன்றும் கட்டாயம் கிடையாது.

சபரிமலை பக்தர்களின் முப்பெரும் தத்துவங்கள்:

கார்த்திகை மாதம் மாலை அணிந்து மார்கழியில் அதாவது 48 நாட்கள் விரதமிருந்து ஐயப்ப சன்னதிக்கு பக்தர்கள் செல்கின்றனர். அவ்வாறு மாலை அணிந்து சபரிமலை சென்று ஐயப்பனை தரிசனம் செய்யும் பக்தர்கள் முப்பெரும் தத்துவங்களின் ஓர் உருவமாக திகழ்கிறார்கள்.

சபரிமலை பக்தர்களின் முப்பெரும் தத்துவங்களாக விளங்குவது அத்வைதம், துவைதம் மற்றும் விசிஷ்டாத்வைதம் ஆகும். அதில் அத்வைதம் என்பது தானே பிரம்மம் என்பதாகும். விசிஷ்டாத்வைதம் என்பது ஜீவன் வேறு, பிரம்மம் வேறு என்பதாகும். துவைதம் என்பது பிரம்மமும், ஜீவனும் வேறு என்றாலும் ஒரு நிலையில் அவைகள் ஒன்றுபடுகின்றன என்பதாகும்.

மாலை அணிந்து விரதம் தொடங்கிய நாளிலிருந்து ஐயப்பமார்கள் அத்வைத தத்துவப்படி தானே கடவுளாக திகழ்கிறார்கள். அவர்களை அனைவரும் சுவாமி என்று அழைத்து சரணம் கூறுகின்றோம். அடுத்து, விரதம் முடித்து சபரிமலை ஐயப்ப தரிசனத்திற்கு செல்லும் நேரத்தில் ஜீவன் வேறு, பிரம்மம் வேறு. முயற்சித்தால் ஜீவன், பிரம்மனை காணலாம் என்று விசிஷ்டாத்தை தத்துவத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்கின்றனர்.

சுவாமி ஐயப்பனை கண்டு அவனருளில் சங்கமிக்கும் நேரத்தில் பிரம்மமும், ஜீவனும் வேறென்றாலும் ஒரு நிலையில் அவைகள் ஒன்றுபடுகின்றன என்ற துவைத தத்துவத்திற்கு உதாரணமாய் திகழ்கின்றனர். இப்படி அர்த்தமுள்ள முப்பெரும் தத்துவங்களின் உருவாக திகழ்பவர்கள் தான் ஸ்ரீஐயப்ப பக்தர்கள் என்று சொல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது