ஒரே நாளில் ஓடி ஓடி தரிசிக்க 12 சிவாலய ஓட்டம்!

120

ஒரே நாளில் ஓடி ஓடி தரிசிக்க 12 சிவாலய ஓட்டம்!

கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய திருவிழாக்களில் ஒன்று சிவாலய ஓட்டம். ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரியன்று 12 சிவாலயங்களையும் ஓட்டமாக ஓடிச் சென்றே தரிக்கணும். அதுவும் ஒரே நாள் 110 கிமீ தொலைவுகளில் இருக்கும் கோயில்களில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானை தரிசிப்பது தான் இந்த சிவாலய ஓட்டத்தின் சிறப்பு.

சிவாலய ஓட்டத்தின் வரலாறு:

மனித முகமும், சிங்க உடலும் கொண்ட து தான் புருஷாமிருகம். சிவபெருமானின் மீது அதிக பற்று கொண்டவர். சிவபெருமானைத் தவிர வேறு எந்த இறைவனையும் ஏற்கமாட்டார். இதன் காரணமாக கிருஷ்ண பகவான், தானும், ஹரியும் – ஹரனும் ஒன்றே எனும் தத்துவத்தை புருஷாமிருகத்திற்கு உணர்த்த விரும்பினார். இதற்காக, பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமனை அழைத்தார். அவரிடம், புருஷா மிருகத்தின் பால் தேவைப்படுகிறது. அதனை சந்தித்து புருஷா மிருகத்தின் உதவியை பெற்று வருமாறு பீமனை அனுப்பி வைத்தார்.

மேலும், பீமனிடம் 12 ருத்ராட்சங்களை கொடுத்து அனுப்பினார். அதோடு, கோவிந்தா, கோபாலா என்ற நாமத்தை உச்சரிக்குமாறும் சொன்னார். தனது பெயரை கேட்க விரும்பாத புருஷா மிருகம், உன் மீது பாயும். அப்போது ஒரு ருத்ராட்சத்தை அதன் மீது போட வேண்டும். அது ஒரு சிவலிங்கமாக மாறிவிடும். அதைப் பார்க்கும் புருஷா மிருகம், அதற்குரிய வழிபாடு செய்ய ஆரம்பிக்கும். அது முடிந்த பிறகு தான் அடுத்த வேலையை அது செய்யும். அதற்குள்ளாக நீ அங்கிருந்து ஓடிவிடு. மறுபடியும் துரத்தி வந்து பிடிக்கும் போது 2ஆவது ருத்ராட்சத்தை போடு. அது சிவலிங்கமாக மாறும்.

புருஷா மிருகம் பூஜை செய்யும். இப்படியே 12ஆவது ருத்ராட்சம் விழும் இடத்தில் நான் (கிருஷ்ணன்), சிவபெருமானுடன் உங்கள் இருவருக்குமே காட்சி தருவேன் என்று கிருஷ்ணன் கூறினார். இதைக் கேட்டு பீமனும் அவ்வாறே நடந்தார்.

அப்படி முதல் ருத்ராட்சம் விழுந்த இடம் தான் திருமலை

1 ஆவது ருத்ராட்சம் திருமலை

2ஆவது ருத்ராட்சம் திக்குறிச்சி

3ஆவது ருத்ராட்சம் திற்பரப்பு

4ஆவது ருத்ராட்சம் திருநந்திக்கரை

5ஆவது ருத்ராட்சம் பொன்மனை

6ஆவது ருத்ராட்சம் பன்னிப்பாகம்

7ஆவது ருத்ராட்சம் கல்குளம்

8ஆவது ருத்ராட்சம் மேலாங்கோடு

9ஆவது ருத்ராட்சம் திருவிடைக்கோடு

10ஆவது ருத்ராட்சம் திருவிதாங்கோடு

11ஆவது ருத்ராட்சம் திருபன்றிக்கோடு

12ஆவது ருத்ராட்சம் திருநட்டாலம்

நட்டாலத்தில் ஹரியும் ஹரனும் இணைந்த சங்கரநாராயணராக மகாவிஷ்னு காட்சி தந்து, சிவன் மற்றும் விஷ்ணு ஒன்று என்று புருஷா மிருகத்திற்கு உணர்த்தினார். குருஷேத்திர யுத்தத்தில் பாண்டியவர்களின் வெற்றிக்காக நடத்தப்பட்ட யாகத்திற்கு பால் தனது மடியிலிருந்து எடுத்துக்கொள்ள புருஷா மிருகம் அனுமதி அளித்தது. அதோடு குருஷேத்திர யுத்தத்திற்கு புருஷா மிருகத்தின் உதவியும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த 12 சிவாலயங்களில் 11 சிவாலயங்களில் பக்தர்களுக்கு திருநீறு வழங்கப்படுகிறது. 12ஆவது சிவாலயமான திருநட்டாலத்தில் பக்தர்களுக்கு சந்தனம் வழங்கப்படுகிறது.