ஒரே நாளில் நவக்கிரக கோயில்களில் தரிசனம் செய்வது எப்படி?

172

ஒரே நாளில் நவக்கிரக கோயில்களில் தரிசனம் செய்வது எப்படி?

ஒரே நாளில் குரு பகவான் கோயிலிலிருந்து சனி பகவான் கோயில் வரை 9 நவக்கிரக கோயில்களில் தரிசனம் செய்வது எப்படி என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம். ஒன்பது நவ கிரகங்கள் ஆலயங்கள் அனைத்தும் கும்பகோணம் மயிலாடு துறை காரைக்கால் பகுதியை சுற்றி அமைந்திருக்கின்றன. கீழ்க்கண்ட கால அட்டவணை படி உரிய வழி தடங்களில் பயணம் செய்து 9 நவக்கிரக கோயில்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்து அருள் பெறலாம்.

குரு பகவான் கோயில் தென்குடி திட்டை:

தரிசனம் நேரம் :1 மணி நேரம் – காலை 6 மணிக்கு…

ஒன்பது நவகிரக ஆலயங்களில் முதலில் செல்ல வேண்டியது தென்குடி திட்டை. கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து பாபநாசம், மெலட்டூர் வழியாக 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தென்குடி திட்டை கோயிலை சுமார் 1 மணி நேரத்தில் அடைந்து விட முடியும். இதற்கு சரியாக காலை 5.00 மணிக்கெல்லாம் கும்ப கோணத்திலிருந்து புறப்பட வேண்டும். பின்னர் தென்குடி திட்டை குரு கோயிலில் சுவாமி தரிசனத்தை ஒரு மணி நேரத்திற்குள் முடித்துக் கொண்டு 7 மணிக்கு திங்களூர் புறப்பட்டு செல்ல வேண்டும்.

சந்திர பகவான் கோயில் – திங்களூர்

தரிசனம் நேரம்: 1மணி நேரம் – காலை 7.30 மணி…

திட்டையில் இருந்து அய்யம்பேட்டை வழியாக சென்று 40 நிமிடத்தில் திங்களூர் அடைந்து விடலாம். பின்னர் திங்களூர் சந்திர பகவான் கோயிலில் ஒரு மணி நேரத்திற்குள் சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு 8.30 மணியளவில் கும்பகோணம் வழியாக திரு நாகேஸ்வரம் புறப்பட்டுச் செல்ல வேண்டும்.

காலை 8.30 மணிக்குள் இருந்து 9.00 மணிக்குள் காலை உணவை முடித்து கொள்ள வேண்டும்.

ராகு பகவான் கோயில் – திருநாகேஸ்வரம்:

தரிசனம் நேரம்: 1 மணி நேரம் – காலை 9.30…

கும்பகோணத்திற்கு வெகு அருகிலேயே 6 கிலோமீட்டர் தொலைவில் திருநாகேஸ்வரம் உள்ளது. 10 அல்லது 15 நிமிடங்களில், 10.00 மணியளவில் திருநாகேஸ்வரம் ராகு கோயிலை அடைந்து விட முடியும். நாகநாதசுவாமி பெரிய கோயில் என்பதால் தரிசனம் செய்து முடிக்க குறைந்தது ஒரு மணி நேரம் ஆகும். பின்னர் கும்பகோணம் வழியாக செல்ல 21 கி.மீ தொலைவில் உள்ள சூரியனார் ஆலயம் செல்ல 10.30க்கு புறப்பட்டு 30 நிமிடத்தில் சென்று விடலாம்.

சூரியனார் கோவில் (சூரியன்):

தரிசனம் நேரம்: 1 மணி நேரம் – காலை 11.00

காலை 11.00 மணிக்கெல்லாம் சூரியனார் கோவிலை அடைந்து விடலாம். சூரியனார் கோயிலில் உள்ள சிவசூரியநாராயண கோயில் மற்ற நவக்கிரக கோயில்களை போல் அல்லாமல் சூரியனை முதன்மையாக கொண்டு நவக்கிரகங்களுக்கென தனித்து அமைந்த கோயில் எ‌ன்ற சிறப்பை பெற்றுள்ளது. இங்கு சூரிய பகவானை தரிசித்து முடித்தவுடன் 12.00 மணிக்கெல்லாம் கஞ்சனூர் புறப்பட்டு செல்ல வேண்டும்.

சுக்கிரன் கோயில் – கஞ்சனூர்:

தரிசனம் நேரம்: 1 மணி நேரம் – பிற்பகல் 12.15

சூரியனார் கோயிலிலிருந்து கஞ்சனூர் 5 கிலோமீட்டர் தொலைவிலேயே அமைந்திருப்பதால் வெறும் 15 நிமிடங்களில் கஞ்சனூரை அடைந்து விடலாம். எனவே 12.1 5மணிக்கே அக்னீஸ்வரர் கோயிலுக்கு சென்று விட முடியும். அதோடு 1.15 மணியளவில் கோயில் நடை சாத்தப்பட்டுவிடும் என்பதால் ஒரு மணி நேரத்திற்குள்ளாக சுவாமி தரிசனத்தை முடித்துக் கொள்ள வேண்டும்.

செவ்வாய் பகவான் வைத்தீஸ்வரன் கோயில்:

தரிசனம் நேரம் : 1 மணி நேரம் – மாலை 4 மணி

நவக்கிரக கோயில்கள் அனைத்திலுமே 1.15 மணிக்கு நடை சாத்தப்பட்டால் பின்பு 4 மணிக்கே கோயில் கதவுகள் திறக்கப்படும். எனவே 1.30 மணிக்கு கஞ்சனூரிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மயிலாடு துறையை 2 மணிக்கெல்லாம் அடைந்து விடலாம். மயிலாடு துறையிலேயே மதிய உணவை முடித்துக்கொண்டு ஆற அமர 3.00 மணியளவில் கிளம்பினால் கூட 15 கிலோமீட்டர் தூரமுள்ள வைத்தீஸ்வரன் கோயிலை 3.30 மணிக்கெல்லாம் அடைந்து விட முடியும். கோயில் நடை திறந்து பின்பு சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு 5.00 மணிக்கு வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து கிளம்பினால் சரியாக இருக்கும்.

புதன் பகவான் – திருவெண்காடு:

தரிசனம் நேரம்: 45 நிமிடம் நேரம் – மாலை 5.15 மணி

வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து 5.00 மணிக்கு கிளம்பினால் 16 கிலோ மீட்டரில் அமைந்துள்ள திருவெண்காடு கோயிலை 5.15 மணிக்கு அடைந்துவிட முடியும். பின்னர் ஸ்வேதாரண்யேஸ்வரர் கோயிலில் வீற்றிருக்கும் புதன் பகவானையும், சிவபெருமானையும் 45 நிமிஷடத்திற்குள்ளாக தரிசித்துவிட்டு 6.00 மணிக்கு புறப்பட வேண்டும்.

கேது பகவான் – கீழ்பெரும்பள்ளம்:

தரிசனம் நேரம்: 45 நிமிடம் நேரம் – மாலை 6.15 மணி

திருவெண்காட்டிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் அமையப் பெற்றுள்ள கேது பகவானின் கீழ்பெரும்பள்ளம் ஸ்தலத்தை 15 நிமிடங்களில் 6.15 அடைந்து விடலாம். ஜாதகத்தில் தவறான இடத்தில் கேது இருப்பதால் தோஷம் அடைந்த மக்கள், அதற்கு பரிகாரம் செய்ய இந்த கோயிலுக்கு வருகிறார்கள். 45 நிமிஷம் நேரத்திற்குள் தரிசனம் செய்து விட்டு 7.00 மணிக்கு திருநள்ளாறு புறப்படலாம்.

சனி பகவான் கோயில் – திருநள்ளாறு

தரிசனம் நேரம்: 1 மணி நேரம் – இரவு 8.00 மணி

நவக்கிரக ஸ்தலங்களின் சுற்றுலாவில் நீங்கள் இறுதியாக செல்லவிருக்கும் இடம் சனி பகவான் வீற்றிருக்கும் திருநள்ளாறு ஸ்தலம். கீழ்பெரும்பள்ளத்திலிருந்து சரியாக 7.00, மணிக்கு புறப்பட்டால் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருநள்ளாறு ஸ்தலத்தை திருக்கடையூர், காரைக்கால் வழியாக ஒரு மணி நேரத்திற்குள் வேகமாக சென்றால் 8.00 மணிக்கெல்லாம் அடைந்து விட முடியும். அதன் பின்னர் ஸ்ரீ தர்பாரன்யேசுவரர் திருக்கோயிலில் சனி பகவானையும், சிவபெருமானையும் ஒரு மணிநேரம் தரிசிக்கலாம்.

இரவு 9.30 மணிக்கு திருநள்ளாறு சனி பகவான் கோயிலோடு ஒன்பது நவக்கிரகங்களையும் தரிசனம் செய்த மனநிறைவோடு பூர்வஜென்ம பாக்கியமாக இறைவனின் அருள் பெற்று புறப்படலாம்.